வக்பு நிலங்கள் பறிப்பா? பேரவையில் காரசார விவாதம்

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று ஆதி திராவிடர் நலத்துறை, சுற்றுச்சூழல் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நாகப்பட்டினம் ஜெ.முகமது ஷா நவாஸ் (விசிக) பேசியதாவது: பிரதமர் மோடி வக்பு நிலங்களை பறிக்கிற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார். தமிழ்நாட்டில் வக்பு சொத்துக்கள் எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ, அடையாளம் கண்டு, அவற்றை அங்கீகரித்து, அவற்றை பாதுகாக்க வேண்டும்.
வானதி சீனிவாசன்(பாஜக): பறிக்கிறார் என்று சொன்ன வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: அது ஒன்றும், பயன்படுத்த கூடாத வார்த்தை அல்ல. நீங்கள் பூ பறிக்கிறோம் என்று தானே சொல்வீர்கள். பூ வெட்டுகிறார்கள், பூ அறுக்கிறார்கள் என்றா சொல்வோம்.
வானதி சீனிவாசன்: இன்னொருவருடைய சொத்துகளை முறையில்லாமல் எடுப்பது என்கிற அர்த்தத்தில் தான் இருந்திருக்கிறது.
எம்.எச். ஜவாஹிருல்லா: ஷா நவாஸ் சொன்ன கருத்துகள் அனைத்தும், அப்படியே பதிவு செய்யப்படவேண்டும்.
சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்): இஸ்லாமியர்களுடைய உரிமையையும், உடமையையும் பறிக்கக்கூடிய வகையில் தான் வக்பு திருத்தச் சட்டம் இருக்கிறது.
வானதி சீனிவாசன்: ஒரு பொருள் தொடர்பான விவாதம் நடத்தப்படுகின்றது. நீங்கள் உச்சநீதிமன்றத்தின் வழக்கு இருக்கிறது என்றால், மற்ற விஷயங்களுக்கு எல்லாம் நீதிமன்ற வழக்கு பேச கூடாது என்று சொல்கிறீர்கள். இப்போது உச்சநீதிமன்ற வழக்கைப் பொறுத்து அந்த வார்த்தைகளை பயன்படுத்துவது தவறு. எனவே அந்த வார்த்தைகளை இந்தப் பேரவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post வக்பு நிலங்கள் பறிப்பா? பேரவையில் காரசார விவாதம் appeared first on Dinakaran.

Related Stories: