மாதவரம், ஏப்.26: மாதவரம், தணிகாசலம் நகரை சேர்ந்தவர் உமாபிரகாஷ் (19). இவரது தந்தை மாயாண்டி இறந்துவிட்டதால், தனது தாய் மல்லிகாவுடன் தனியே வசித்து வருகிறார். தாய் மல்லிகா, பெரவள்ளூரில் ஒரு தனியார் டிபார்ட்மென்ட்ல் ஸ்டோரில் வேலை பார்க்கிறார். உமாபிரகாஷ், ஆவடியில் ஒரு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பிசிஏ படித்தபடி, கொளத்தூர் அருகே ஜி.கே.எம் காலனியில் உள்ள சூப் கடையில் பகுதிநேர ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இந்த கடையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி கார்த்திக் என்பவர் பணம் கொடுக்காமல் சூப் குடித்து வந்துள்ளார்.
அதற்கு உண்டான பணத்தை உமாபிரகாஷ் கேட்டுள்ளார். ஆனால், பணம் கொடுக்காத கார்த்திக், மீண்டும் இலவசமாக சூப் கேட்டுள்ளார். அதற்கு உமாபிரகாஷ், பணம் தராமல் சூப் தரமுடியாது எனக் கூறியுள்ளார். இதில் ஆத்திரமான ரவுடி கார்த்திக், நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து பைக்கில் வீடு திரும்பிய மாணவன் உமாபிரகாஷை வழிமறித்து தாக்கி, தனது கூட்டாளி அஜய் என்பவருடன் சேர்ந்து, பைக்கில் கடத்தி சென்றுள்ளார்.
பின்னர் அவரை நேற்று முன்தினம் நள்ளிரவு ஜி.கே.எம் காலனியில் விடுவித்து, தப்பி சென்றனர்.
இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவன் உமாபிரகாஷ், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜி.கே.எம் காலனி, விவேகானந்தா தெருவை சேர்ந்த ரவுடி கார்த்திக் (எ) மேடு கார்த்திக் (22), கொளத்தூர், பஜனை கோயில் தெருவை சேர்ந்த ரவுடி அஜய் (எ) லாசர் (24) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். இவர்கள் இருவர்மீதும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இருவரும் சரித்திர பதிவேடு ரவுடிகள் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இருவர் மீதும் கடத்தல் உள்பட 5 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஓசியில் சூப் தர மறுத்ததால் கல்லூரி மாணவனை கடத்தி தாக்கிய 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.