பூந்தமல்லியில் 9 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்: நிவாரண உதவிகள் வழங்கி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆறுதல்

பூந்தமல்லி, ஏப்.26: பூந்தமல்லியில் 9 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமான நிலையில் நிவாரண உதவிகள் வழங்கி கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆறுதல் கூறினார். பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னீர்க்குப்பம் ஊராட்சி வடக்கு காலனி பகுதியில் சிறிய அளவிலான குடிசை வீடுகள் உள்ளன. இதில் கூலி வேலை செய்து வாழ்ந்து வரும் 9 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை ஒரு குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அருகில் இருந்த மற்ற குடிசைகளுக்கும் தீ பரவியது. இதில் அடுத்தடுத்து ஒன்பது குடிசைகளுக்கும் தீ பரவிய நிலையில் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இந்த தீ விபத்தில் அருள், தினகர், சுகுணா, லிங்கேஷ், முருகன், வேலு, பழனி, சரவணா, தமிழரசன் ஆகிய ஒன்பது குடும்பங்களின் வீடுகள், உடைமைகள் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது.தீயை அணைக்க முயன்றும் முடியாததால் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இதில் ஒன்பது வீடுகளிலும் இருந்த கட்டில், பீரோ, மெத்தை, மாணவர்களின் புத்தகங்கள், சான்றிதழ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், ஒரு பைக், 2 சைக்கிள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சமையல் செய்யும் போது தீப் பிடித்ததா? என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு அரிசி, போர்வை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், ரூ.5 ஆயிரம் பண உதவி செய்தார். மேலும் முதற்கட்டமாக தீ விபத்தில் எரிந்து போன முக்கிய ஆவணங்கள், சான்றிதழ்கள் அனைத்தும் உடனடியாக கொடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் எரிந்து போன குடிசைகள் இருந்த பகுதியில் உள்ள இடங்களுக்கு முறைப்படி பட்டா வழங்கி கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணசாமி எம்எல்ஏ கூறினார். அப்போது பூந்தமல்லி வட்டாட்சியர் சரஸ்வதி, பூந்தமல்லி ஒன்றிய திமுக செயலாளர் ப. ச.கமலேஷ், மற்றும் திமுக நிர்வாகிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post பூந்தமல்லியில் 9 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்: நிவாரண உதவிகள் வழங்கி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: