திருப்பாவை எனும் தேனமுதம்

பகுதி 8

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

இப்போது மூன்றாவது பாசுரத்தில் விபவம் என்கிற அவதார நிலையை காண்பிக்கிறாள். அதிலேயும் விசேஷமாக , ‘‘ஓங்கி உலகளந்த உத்தமன்’’ என்று ஆரம்பிக்கிறாள். இந்த அவதார நிலையில் விசேஷமாக வாமன அவதாரத்தை காண்பித்துக் கொடுக்கிறாள். இந்த வாமன அவதாரத்தை காண்பித்துக் கொடுத்ததற்கு என்ன காரணங்கள் இருக்கலாம். தாயார் எந்த அவதாரத்தை வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம். இருந்தாலும், வாமன அவதாரத்தை ஏன் சொல்கிறாள்? அவதாரங்களிலேயே சில அவதாரங்கள் வேதப் பிரசித்தமானது. சில அவதாரத்தைப் பற்றிய குறிப்பானது வேதத்திலேயே இருக்கும். நரசிம்மாவதாரம், வராஹ அவதாரம், வாமன அவதாரம் இதைப்பற்றிய குறிப்புகளெல்லாம் வேதத்திலேயே இருக்கிறது. அப்படி வேதத்தினால், சொல்லப்பட்ட புகழப்பட்ட ஒரு அவதாரம் வாமன அவதாரம். அதனால், இங்கு வாமன அவதாரத்தின் பெருமையை ஓங்கி உலகளந்த… என்று தொடங்குகிறாள். இந்த வாமன அவதாரத்திற்கு ஒரு பெருமை சொல்வது வழக்கம்.

நாம் ஏதோ ஒரு விஷயம் செய்து கொண்டிருக்கிறோம். அது ஒரு விரதமாக இருக்கலாம். அது யாக யக்ஞமாக இருக்கலாம். ஒரு பூஜையாக இருக்கலாம். ஒரு சத்சங்கமாக இருக்கலாம். ஒரு நாம சங்கீர்த்தனமாக இருக்கலாம். ஏதோ ஒரு பகவத் கைங்கரியம் நடந்து கொண்டிருக்கும்போது, அந்த பகவத் கைங்கரியத்திற்கு நடுவே ஏதாவது ஒரு இடையூறு வந்தால், தற்காலிகமாக அதை நிறுத்துவதுபோல் ஒரு சந்தர்ப்பம் வந்தால், அப்படி நிறுத்திவிட்டு மீண்டும் அதை தொடரும்போது, வாமன மூர்த்தியை தியானம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம் சொல்கிறது. வாமன மூர்த்தியை தியானம் செய்தால் அப்படி இடையில் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட தோஷம் நீங்கும் என்பது சாஸ்திரம். இந்த விரதத்திற்குள் எல்லோரையும் இறக்குகிறாள். அப்போது இந்த விரதத்திற்கு எந்த இடையூறும் வரக்கூடாது. விரதத்தை இடையில் நிறுத்தக் கூடாது. ஆரம்பித்தபடி இந்த விரதம் போய்க்கொண்டே இருக்க வேண்டும். அதனால், ஆரம்பத்திலேயே திருவிக்ரமனை தியானம் செய்து விட்டால், இடையில் இடையூறே வராதே அந்த தோஷமே வராமல் போய் விடுமே! என்று ஒரு பரம காருண்யத்தினால் வேண்டுகிறாள். அதனால், இந்த முதல் வரியிலேயே ஓங்கி உலகளந்த உத்தமனான திருவிக்ரமனை காண்பித்துக் கொடுக்கிறாள்.

ஏனெனில், முதல் காரணம் வேதப் பிரசித்தமான அவதாரம். இதில் எந்தத் தடையும் வரக் கூடாது என்பதாலேயே ஓங்கி உலகளந்த என்று திருவிக்ரம அவதாரத்தை தியானம் செய்ய வைக்கிறாள். ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி… இதற்கு முந்தைய பாசுரத்தில் பாற்கடலில் பையத் துயின்ற பரமன் அடி பாடி என்று சொன்னாள். அதாவது பாற்கடலில் பையத் துயின்ற திருவடியைப்பாடி என்று சொன்னாள். இந்தப் பாசுரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி… கவனியுங்கள். பேர் பாடி… நாமங்களை பாடி.. என்கிறாள். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் என்றைக்குமே ஒரு விஷயம் உண்டு. பகவானை விட எது உயர்ந்தது எனில், பகவானுடைய திருவடி உயர்ந்தது. பகவானை விட எது உயர்ந்ததெனில், பகவானுடைய நாமம் உயர்ந்தது. பகவானை விட யார் உயர்ந்தவரெனில், பகவானை காட்டிக் கொடுக்கிற ஆச்சார்யன் உயர்ந்தவர்.

பகவான்தான் உயர்ந்தவர் அதில் சந்தேகமே இல்லை. பகவானை விட உயர்ந்தது ஒன்று இருக்குமெனில், அது பகவானுடைய திருவடி. ஏனெனில், அங்குதான் நாம் சரணாகதி செய்கிறோம். அதற்கு அடுத்து அந்த சரணாகதியை எப்படி செய்கிறோமெனில், அவனுடைய நாமத்தின் மூலமாகச் செய்கிறோம். அதனால், பகவானுடைய நாமம் உயர்ந்தது. அதனால்தான், ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்கிறாள். முதலில் இதை விரதமாக சாஸ்திரப் பூர்வமாக ஒரு கிரியை மூலமாக பார்க்கிறோம். அதற்குப் பின்னால், இருக்கக்கூடிய ஞான விஷயங்களையும் பார்க்கிறோம். இப்போது பேர் பாடி என்பதற்கு இன்னொரு பொருளையும் பார்ப்போம். எந்த பூஜையை எடுத்துக் கொண்டாலும், எந்த யாக யக்ஞ கர்மாக்களை எடுத்துக் கொண்டாலும், எந்த கைங்கரியம் செய்தாலும் அதில் சங்கல்பம் செய்கிறோம் என்று இதற்கு முன்பு பார்த்தோம். அதேமாதிரி இன்னொன்றும் செய்வோம். என்ன செய்வோமெனில், ஆசமனம் செய்வோம். குருவை நமஸ்கரித்து, கணபதியை நமஸ்கரித்து பிராணாயாமம் செய்து சங்கல்பம் செய்வது என்பதுதான் சம்பிரதாயம். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயமாக இருப்பதால், ஆசமனம் செய்து, ஆச்சார்யனை நமஸ்காரம் செய்து விஷ்வக் சேனை தியானிப்போம். பிராணாயாமம் முதலியவை எல்லாம் செய்து சங்கல்பம் செய்வது என்பது சம்பிரதாயம்.

இப்போது ஆசமனம் என்பதை எப்படி செய்கிறோம்?

அச்சுதாய நமஹ… அநந்தாய நமஹ… கோவிந்தாய நமஹ… என்று சொல்லும்போது அங்கு என்ன சொல்கிறோம். பகவன் நாமாவைத்தான் சொல்கிறோம். இங்கு ஆசமனம் செய்து விட்டு அங்க வந்தனம் பண்ணும்போதும் என்ன சொல்கிறோம்? கேசவா… நாராயணா… மாதவா… கோவிந்தா.. விஷ்ணு, மது சூதனா,,, த்ரிவிக்ரமா… வாமனா… ஸ்ரீதரா.. ரிஷ்கேசா.. பத்மநாபா … தாமோதரா… என்று பன்னிரண்டு நாமங்களைச் சொல்லி அங்கவந்தனம் செய்கிறோம். அதுவும் நாமம்தான். ஆசமனமும் நாமாதான்…. அதற்கு அடுத்து வரக்கூடிய அங்க வந்தனமும் நாமம்தான். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆச்சார்யனை விஷ்வக் சேனரை தியானம் செய்து விட்டு, பிராணாயாமம் செய்து சங்கல்பம் பண்ண ஆரம்பிக்கும்போது கோவிந்த… கோவிந்த… என்றுதான் ஆரம்பிக்கும். பொதுவாக மமோபாத துரித க்ஷயத் வாரா… என்று சொன்னால் கூட, விசேஷமாக ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் சங்கல்பம் கோவிந்த… கோவிந்த… என்பதேயாகும். ஆசமனம் என்று எடுத்துக் கொண்டால் பகவன் நாமங்கள்! அங்க வந்தனம் என்று எடுத்துக் கொண்டால் பகவானின் பன்னிரண்டு நாமாக்கள்! சங்கல்பம் என்று எடுத்துக் கொண்டால் கோவிந்த கோவிந்த என்று அங்கேயும் பகவான் நாமம்தான். அதனால், எந்தவொரு விஷயம் செய்தாலும், எந்தவொரு கர்மாவாக இருந்தாலும் யாக யக்ஞமாக இருந்தாலும் அங்கு ஆரம்பம் என்பது பகவானின் நாமம்தான். நாமசங்கீர்த்தனம்தான் ஆரம்பமாக இருக்கும். எனவேதான், இங்கு பிராட்டி ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்கிறாள்.
(தொடரும்)

 

The post திருப்பாவை எனும் தேனமுதம் appeared first on Dinakaran.

Related Stories: