வாராரு வாராரு… அழகர் வாராரு…

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் – 12-5-2025

தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வானளாவிய கோபுரங்களும் கோயில்களும் முக்கியமானது. தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் ஆலய விழாக்கள் முக்கியமானது. அதில் மிகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றுதான் சித்திரையில் “அழகர் பெருவிழா”. ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர், ‘‘வைகை ஆற்றில் இறங்குதல்’’ பல்லாயிரக் கணக்கானோரை ஈர்க்கிறது.

மதுரையின் சிறப்பு

மதுரை என்றாலே தமிழ். தமிழ் என்றாலே மதுரை. தமிழ் நாடு என்று நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மதுரை தான். சங்கம் வளர்த்த மதுரை சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானது. கடம்ப மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இருந்ததால் ‘கடம்பவனம்’ என்றும், மருத மரங்கள் அதிக அளவில் காணப்பட்டதால் ‘மருதை’ என்றும், அனைவரும் கூடி இலக்கியப் கலந்துரையாடல் செய்தமையால் கூடல் மாநகர் என்றும், நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்தமையால் ஆலவாய் என்றும், கோட்டையின் நான்கு வாயில்கள் சங்கமிப்பதால் நான்மாடக் கூடல் என்றும், அழைக்கப்படும் பெருமைகளைக் கொண்டது.

வீதிகளில் தமிழ் மணம்

மதுரைக்குத் தான் எத்தனை பெயர்கள்? 1.மல்லிகை மாநகர், 2. கூடல் நகர், 3.மதுரையம்பதி, 4. கிழக்கின் ஏதென்ஸ், 5.நான் மாடக்கூடல், 6. மீனாட்சி பட்டணம், 7. ஆலவாய் 8. கடம்பவனம், 9. அங்கண் மூதூர், 10. தூங்கா நகரம், 11. கோவில் நகரம் 12. பூலோக கயிலாயம். சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி வீதி என தமிழ் மாதங்களின் பெயராலேயே தெருப்பெயர்கள் அமைந்திருக்கும் சிறப்பு மதுரைக்கே உரியது. மாடக்குளம், ஆத்தி குளம், கரிசல் குளம் என நீர் நிலைகளின் பெயராலேயே கிராமங்களுக்கு பெயரை வைத்து நீருக்கு மரியாதையை செய்யும் வழக்கமும் அதிகம்.

அன்னை மீனாட்சி அருளாட்சி செய்யும் இடம்

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது. அன்னை மீனாட்சி அவதரித்து, வளர்ந்து, ஆட்சிசெய்யும் தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் ஒவ்வொன்றும் வரலாறு, கலாச்சாரம், மொழி, கலைகள், எனத் தொடர்புடையது மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சியம்மன் தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆற்றைப் பார்த்தாயா?எம் அழகரைப் பார்த்தாயா?

மதுரை என்றாலே “விழாக்களின் நகரம்” என்று சொல்லுவார்கள். வருடம் முழுக்க ஏதேனும் ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். அப்படி நடக்கின்ற விழாக்களில் மிக முக்கியமான விழா

1. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழா

2.அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா.

அழகர் ஆற்றில் இறங்குவதைக் காணுவதற்கு உலகமெங்கும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ‘‘ஆற்றைப் பார்த்தாயா, எம் அழகரைப் பார்த்தாயா’’ என்கின்ற கூற்று இந்த விழாவின் சிறப்பினை எடுத்துரைக்கும். பெண்ணைப் பார்த்தால் மீனாட்சி, ஆணைப் பார்த்தால் அழகர்மதுரை என்றாலே மீனாட்சி பெயரும் அழகர் பெயரும் பிரசித்தம். மேலூர், அழகர் கோயில் பக்கம் வீட்டில் ஒரு அழகர் இருப்பார். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் சித்திரை திருவிழாவுக்கு புறப்பட்டு வந்து சேருவார்கள். வைகை ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழாவில், அழகருக்கு ஆயிரம் பாட்டு இருந்தாலும் “வாராரு வாராரு அழகர் வாராரு” பாட்டு தான் ஊரில் எந்த பக்கம் திரும்பினாலும் கேட்கும்.

வைகை நதியின் சிறப்பு

சித்திரை விழாவில் மூன்று சிறப்புகள் உண்டு. ஒன்று மதுரை. இரண்டாவது அழகர் மலை. மூன்றாவது வைகை நதி. வைகை நதிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது.? மீனாட்சி அம்மனின் திருமணத்திற்கு வந்த குண்டோதரன் என்ற அசுரன், தாகத்தால் சிவனை வேண்டினான். அப்போது சிவபெருமான், ‘வை… கை’ என்று குண்டோதரனுக்கு உத்தரவிட, வைகை பிறந்ததாக புராணங்கள் சொல்லுகின்றன.

சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு பெயர்

ஸ்வாரஸ்யமாக இன்னொருசெய்தி. திருமாலின் இருப்பிடமான வைகுண் டத்தின் ‘வை’யும் சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தின் ‘கை’யும் இணைந்து சங்கரநாராயணர்களின் இருப்பிடமான தீர்த்தமாக ‘வைகை’ அமைந்திருக்கிறது. வைகுதல்=தங்குதல், நிலைபெறுத்தல் என்ற ஒரு பொருளும் உண்டு.

சமயம், தமிழ் சேர்ந்ததால்…

மதுரையில் சமயமும் தமிழும் சேர்ந்து நிலை பெறச் செய்வதால் வைகை என்று பெயர். ‘‘அவள் வைகுவதால், வைகையும் ஆகிறாள்” என்பார்கள் சான்றோர்கள். வைகைக்கு வேகவதி என்ற பெயரும் உண்டு. தமிழ் இலக்கியத்தில் வெகுவாக வைகை புகழப்பட்டுள்ளது. ‘‘வையை என்னும் பொய்யாக் குலக்கொடி’’, ‘‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை’’ என்பன போன்ற தொடர்கள் வைகை நதியின் பெருமையைச் சொல்லும். சிவ பெருமானின் திருவிளையாடல்கள் வைகை ஆற்றங்கரையில் நிகழ்ந்ததாகக் கூறுவர். வடமொழி நூல்கள் வைகையை ‘‘க்ருதமாலா’’ நதி என்று குறிக்கின்றன.

வைகை ஏன் கடலை அடையவில்லை?

பெரும்பாலும் ஆறுகள் மலைகளில் தோன்றி சமவெளிகளில் பாய்ந்து கடலை அடையும். ஆனால், வைகை கடலை அடையாத ஆறு. அது ஏன் கடலை அடையவில்லை என்பதற்கு கவிஞர் ஒரு கற்பனையான காரணத்தைப் பாட்டாகக் கூறினார். பெருந்தொகை என்னும் நூலில் இடம்பெற்றுள்ள அப்பாடல்:

நாரி இடப்பாகர்க்கு நஞ்சளித்த பாவி
என்று வாரி இடம் போகாத வையையே

நதி பெண். கடல் ஆண். தேவர்கள் பாற்கடலை கடைந்தார்கள். அப்போது ஆலகால நஞ்சு வந்தது. கடலில் வந்த அந்த நஞ்சை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். வைகை நினைத்ததாம். ‘‘ஏ கடலே…எங்கள் அன்னை மீனாட்சியின் நாயகனுக்கு நஞ்சு கொடுத்த உன்னைச் சேர என் மனம் ஒப்பவில்லை. எனவே, உன்னை அடைய மாட்டேன்.” மீனாட்சியின் நாயக னுக்கு நஞ்சு கொடுத்த கடலை அடைதல் பாவம் என்பதால் வையை கடலை அடையவில்லை!

அற்புதமான ஆறு வைகை

தமிழகத்திலேயே உற்பத்தியாகி இங்கேயே கடல் சேர்கிற வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ. ஆகும். இது தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறு ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைதான் வைகை உற்பத்தியாகிற இடம். வருசநாடு, மேகமலை பகுதிதான் வைகையின் பிறப்பிடம். கடல் மட்டத்திலிருந்து 5,333 அடி உயரத்தில் இருக்கிற மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளிமலையில்தான் அது உற்பத்தியாகிறது.

சுருளியாறு, தேனியாறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு முதலியவை வைகையின் துணை ஆறுகளாகும். பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி கொடைக்கானல் மலையிலிருந்து வரும் பாம்பாற்றுடன் (வெள்ளி அருவி உள்ள ஆறு) இணைந்து தேனிக்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது. பின்னர் முல்லையாராக பயணிக்கிறது. இவ்வாறு பயணிக்கும் பொழுது சுருளியாறு இதனுடன் கலக்கிறது. பின்னர் வள்ளல் நதி என்று சொல்லப்படும் வருசநாட்டு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன் கலந்து வைகையாராக வைகை அணையைச் சென்று அடைகிறது.

அழகர் மலை

மதுரையின் சிறப்பையும், வைகையின் சிறப்பையும் பார்த்த நாம், மதுரைக்கு வந்து சித்திரை முழு நிலா நாளில் ஆற்றில் இறங்கும் அழகரின் சிறப்பையும், அவர் நின்று அருள் புரியும் அழகர் மலையின் சிறப்பையும் அறிய வேண்டும். அழகர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு வைணவத்தில் திருமாலிருஞ்சோலை என்கின்ற திருநாமம் உண்டு. சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம், சோலைமலை, குலமலை குளிர்மலை, தென்திருப்பதி, உத்யான சைலம், இருங்குன்றம், வனகிரி, விருஷ பாத்திரி அல்லது இடபகிரி முதலிய பல பெயர்கள் உண்டு. இது கிழக்கு மேற்காக 18 கி. மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது. அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன.

ஆழ்வார்களால் பாடப்பெற்ற அழகர் மலை

மதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்புறம் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. பலவகை மரங்களும், செடிகளும், கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியைத் தரும் இப்பகுதியில் இயற்கையாகவே சோலைகள் பல அமைந்திருகின்றன. சோலைகளில் பூக்களும் காய்களும், கனிகளும் மிகுதியாக உண்டாகிப் கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டும் இம் மலையைப் பற்றிய செய்திகள் பழந்தமிழ் இலக்கியங்களில் மிகுதியாக உண்டு.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காட்டும் அழகர் கோவிலின் சிறப்பு

‘‘அவ்வழி படரீர் ஆயின், இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின்’’ என சிலப்பதிகாரத்தில் இளங் கோவடிகள் அழகர் கோவிலின் சிறப்பு பற்றி கூறுகிறார்.

இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமை

மேலும் சிலப்பதிகார ஆசிரியர் ‘‘விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபில் புண்ணிய சரவணம், பவகாரணி யோடு இட்டசித்தி எனும் பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்கு’’ என்று மூன்று பொய்கைகள் இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் நாம் அறிந்தது நூபுர கங்கை என அழைக்கப்படும் ஒரே ஒரு பொய்கை. இதன் மூலம் சிலப்பதிகாரத்திற்கு முன்பே அழகர் கோவில் அமைக்கப்பட்டது என தெரிய வருகிறது. ஆழ்வார்களின் காலத்திற்கு பிறகும் கோட்டைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

சொக்கத் தங்கத் திருமேனி

அழகரின் திருமேனி பொன் மயமானது. அபரஞ்சி தங்கம் என்கின்ற சுத்தமான தங்கத்தால் ஆன திருமேனி. இங்கும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபர் ஆலயத்திலும் மட்டுமே அபரஞ்சி தங்க உற்சவ மூர்த்திகள் உள்ளனர். திருமாலிருஞ்சோலையில் மூலவரும் உற்சவரும் பஞ்ச ஆயுதங்களுடன் காட்சி தருகின்றார்கள் என்பது ஒரு சிறப்பு. இங்குள்ள பெருமாள் கையில் உள்ள சக்கரம் பிரயோக சக்கரம். தாயார் சுந்தரவல்லி என்ற திருநாமத்தோடு காட்சி தருகின்றார் ஸ்ரீதேவி என்ற பெயரும் இவருக்கு உண்டு.

மதுரையைச் சுற்றி 3 அழகர்கள்

மதுரையைச் சுற்றி 3 அழகர்கள் இருக்கிறார்கள். ஒன்று மாலிருஞ் சோலை அழகர். இன்னொன்று திருமோகூர் அழகர். மூன்றாவது மதுரையிலேயே இருக்கக்கூடிய கூடல் அழகர். திருமாலிருஞ்சோலை அழகருக்கு கள்ளழகர் என்று பெயர். கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். ஆண்டாள்,

‘‘எழில் உடைய அம்மனைமீர்! என் அரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார்
என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே
என்று வர்ணிக்கும் அழகு இவர்க்கு அப்படியே பொருந்தும்.

நூபுர கங்கை நீரூற்று

அழகர்மலை அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் பழமுதிர்சோலை முருகன் கோயில் உள்ளது. பழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து ஒரு கிமீ தொலைவில் அமைந்த ராக்காயி அம்மன் நூபுரகங்கை நீரூற்று உள்ளது. எம்பெருமான் திரிவிக்கிரம அவதாரம் எடுத்தான். அவருடைய ஒரு பாதம் உலகத்தை அளந்து கொண்டே அப்பாலுள்ள உலகங்களுக்குச் சென்றது. இந்திரலோகம் கடந்து சத்தியலோகம் சென்ற பொழுது இறைவனுடைய திருவடிகளுக்குப் பாத பூஜை செய்ய வேண்டும் என்று நினைத்த நான்முகன், தன்னுடைய கமண்டல நீரால் எம்பெருமானின் திருவடிகளை அபிஷேகம் செய்தான். அந்த கமண்டல நீரானது எம்பெருமானின் திருவடியில் அணிந்திருந்த பொற்சிலம்பு மீது பட்டு சிதறி பெருகி ஜீவநதியாய் ஓடிக் கொண்டிருக்கிறது.

பாவங்கள் தீர்க்கும் பவ நாசினி

எல்லா நீர் நிலைகளுக்கும் ஒரு உற்பத்தி இடம் உண்டு. ஆனால் சிலம்பாறு எங்கே உற்பத்தி ஆகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. திருமாலிருஞ்சோலையில் ஆயிரக்கணக்கான தீர்த்தங்கள் இருந்தாலும் அழகர் நீராட்டம் காண நூபுர கங்கை தீர்த்தம் தான் வேண்டும். கற்கண்டு போன்ற சுவையுடன் இருக்கக்கூடிய இந்த தீர்த்தம் தவிர வேறு தீர்த்தத்தால் அழகருக்கு திருமஞ்சனம் செய்தால், அவருடைய மேனி கறுத்து விடுகிறது.

சகல நோய் களையும் தீர்க்கக்கூடிய அற்புதமான மூலிகை தீர்த்தம் இது. பகவானுடைய திருவடியில் இருந்து தோன்றி நம்முடைய உடல் அழுக்கை மட்டும் அல்லாது மன அழுக்கையும் அகற்றுவதால் “புண்ணிய சுருதி” என்றும் “பாவ நாசினி” என்றும் சொல்வார்கள். ஐப்பசி துவாதசியில் இங்கு நீராடி அழகரை தரிசிப்பது பெரும் புண்ணியம். பாதகங்கள் தீர்த்து பரமனடி காட்டும்.

ஆலயத்தில் எங்கும் அழகு, கலை நயம்

இங்கு பெருமான் மட்டும் அழகரல்ல. மலை அழகு. மண்டபங்கள் அழகு. சிலை அழகு. சோலைகள் அழகு. கண்ணதாசன் ஒரு பாடலில் இந்த அழகை ‘‘மலை அழகா? அழகர் சிலை அழகா’’ என்று வர்ணிப்பார். மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது. ஆரியன் மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன. கல்யாண சுந்தர வல்லி தாயாரின் சன்னதி யும் கலைநயத்துடன் உள்ளது. இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப் பாட்டினை வெளிப்படுத்துகிறது.

எத்தனை மண்டபங்கள்?எத்தனை சிற்பங்கள்?

திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும். வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஒவியங்கள் உள்ளன. கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இந்தச் சன்னதியும் இங்கு ஒரு சிறப்புதான்.

மக்கள் திரளாக வருகிறார்கள். பெருங்கதவு முன் நிற்கிறார்கள். பிரமாண்டமான இரட்டைக் கதவு. கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருக்கிறது. அதில் சந்தனம், குங்குமம், கற்புரம் முதலியன பூசி மாலையும் மலர்களும் சாத்தி கதவையே தெய்வமாக எண்ணி வணங்குகிறார்கள். தலையில் உருமால், தோளில் வல்லவேட்டு, இடுப்பில் சுங்குவைத்துக் கட்டிய கச்சை, கையில் கத்தி, ஈட்டி, வல்லயம், வீச்சரிவாள், தோளில் சாத்திய கட்டாரி, காலில் சல்லடம் என்று கம்பீரமாகக் காட்சி தருபவராம் கருப்பசாமி.

சித்திரைத் திருவிழாவுக்குப் புறப்படும்போது முதலில் கருப்பசாமியின் சந்நிதிக்குதான் அழகர் வருகிறார். அங்கே அழகர் அணிந்திருக்கும் நகைகளின் பட்டியல் வாசிக்கப்படுகிறது. திருவிழாக்கண்டு திரும்பிக் கோயிலுக்குள் செல்லும் முன்பு கொண்டு சென்ற நகைகள் எல்லாம் திரும்ப பத்திரமாகக் கொண்டு வந்துவிட்டதை கருப்பசாமியிடம் காட்டிச் செல்ல வேண்டும். அழகருக்கு அபிஷேகம் செய்ய கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கூடக் கருப்பசாமியிடம் காட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம்.

ஜி.ராகவேந்திரன்

The post வாராரு வாராரு… அழகர் வாராரு… appeared first on Dinakaran.

Related Stories: