இந்த வார விசேஷங்கள்

10.5.2025 – சனி
இசைஞானியார் குருபூஜை

சைவ சமய 63 நாயன்மார்களில், 3 பெண் நாயன்மார்களில் ஒருவர் இசைஞானியார். சிறுவயது முதலே சிவன்மேல் அன்பு கொண்டதாலும், சுந்தரரை மைந்தனாகப் பெற்றதாலும் இசை ஞானியார் நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவராக வைத்துப் போற்றப்படுகிறார். சிவபக்தியில் சிறந்த இசைஞானியார் சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் திருநாவலூரில் (விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ளது) முக்தி அடைந்தார். அன்றில் இருந்து முக்தி அடைந்த நாளை, குருபூஜை தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

10.5.2025 – சனி
மதுரகவி திருநட்சத்திரம்

கருடாழ்வாரின் அம்சமாக திருக்கோளூர் என்ற திவ்யதேசத்தில் அவதரித்தவர் மதுரகவி ஆழ்வார். நம்மாழ்வாரைவிட வயது முதிர்ந்தவர் வேத விற்பன்னர் பிராமணர். ஆனால், பல மடங்கு வயது குறைந்த பாலகனான நம்மாழ்வாருக்கு சீடரானார். நம்மாழ்வார் பிரபந்தங்களை அவர் சொல்லச் சொல்ல பட்டோலை கொண்டார் என்பது வரலாறு. நம்மாழ்வாரின் திவ்யமான பாசுரங்களை இவர் சதாசர்வ காலமும் பாடிக் கொண்டே இருந்ததால் இவருக்கு மதுரகவியாழ்வார் (மதுரமான நம்மாழ்வாரின் கவிகளைப் பாடிய ஆழ்வார்) என்று பெயர். நம்மாழ்வாரின் பிரபந்தங்களை நாடு முழுதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்ற பணியில் ஈடுபட்டார். அவர் எல்லா தெய்வங்களையும் எல்லா திருத்தலங்களையும் நம்மாழ்வார் வடிவில் தரிசித்தார். நம்மாழ்வாரை தன்னுடைய சதாச்சாரியனாகக் கொண்டார். நம்மாழ்வார் மீது கண்ணினும் சிறுத்தாம்பு என்று தொடங்கும் பிரபந்தத்தை அருளிச்செய்தார். அதற்கு குரு பிரபந்தம் என்று பெயர். ஆச்சாரிய பிரபந்தமான இந்த பிரபந்தத்தை பாடாமல் நம்மாழ்வாரின் திருவாய் மொழியைப் பாடுவது கிடையாது. ஆழ்வார்களின் நான்காயிரம் பாசுரங்கள் மறுபடியும் கிடைப்பதற்கு கண்ணினும் சிறுத்தாம்பு என்கின்ற 11 பாசுரங்களே காரணமாக அமைந்ததினால் நாலாயிரம் பாசுரங்களுக்கும் மதரகவியாழ்வாரின் பாசுரங்கள்தான் சாவி (திறப்பு) என்று சொன்னார்கள். எனக்கு வேறு கடவுள் தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் குருகூர் நம்பியான நம்மாழ்வாரின் திருவாய்மொழிதான். அந்த திருவாய் மொழியினுடைய இசையை நான் பாடிக்கொண்டே இருப்பேன் என்று கூறிய மதுரகவி ஆழ்வாரின் திருநட்சத்திரம் இன்று (சித்திரையில் சித்திரை).

10.5.2025 – சனி
அனந்தாழ்வார் திருநட்சத்திரம்

சுவாமி இராமானுசர் மீது அளவு கடந்த பக்தி கொண்ட இவர், கர்நாடகத்தின் மாண்டிய மாவட்டத்தில் சிறுப்புத்தூர் எனும் அழகிய சிற்றூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர்.உடையவர் ஸ்ரீராமானுஜர் இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு அப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் அவரின் சீடரான அனந்தாழ்வார். நீரல்லவோ ஆண்பிள்ளை என்று எம்பெருமானாரால் பாராட்டைப் பெற்றார். அனந்தன் எனும் பெயருடைய இவ்வாசாரியர். இக்காரணத்தாலேயே இவர் குலத்தவர்கள் இன்றும் அனந்தாண் பிள்ளை என்னும் பட்டத்தோடு விளங்கு கின்றனர். திருமலையின் சிறப்புக்களை, வரலாற்றை குறிப்பிடும் போது அதில் அனந்தாழ்வாருக்கும் முக்கிய இடம் உண்டு. அவர் வாழ்ந்த குடில், அவர் அமைந்த நந்தவனம் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இப்போதும் தொடர்ந்து பராமரித்து, பக்தர்களின் பார்வைக்காக வைத்து வருகிறது. திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அனந்தாழ்வான் என்றே பெயர். இன்று அவர் திருநட்சத்திரம்.

11.5.2025 – ஞாயிறு
நரசிம்ம ஜெயந்தி

இன்று நரசிம்ம ஜெயந்தி. ‘‘நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை’’ என்பார்கள். இன்றே இப்பொழுதே எனக் கேட்பதை தருகின்ற வள்ளல் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி. நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த நட்சத்திரம் சுவாதி நட்சத் திரம். ராகுவின் நட்சத்திரம். சுவாதி நட்சத்திரத்தில் பிரதோஷ வேளையில் பகவான் தோன்றினார். அந்த அவதார தினமான இன்று நரசிம்ம ஜெயந்தியை எளிமையாகக் கொணடாடலாம். வீட்டில் மாலை விளக்கேற்றி வைத்து, நரசிம்ம மூர்த்திக்கு துளசி மாலை சாத்தி, பானகம், நீர்மோர், பருப்பு வடை, சர்க்கரைப் பொங்கல், பாயசம், என இயன்ற அளவு நிவேதனம் செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபித்தால் சகட சகல சங்கடங்களும் விலகும். நினைத்தது நடக்கும்.
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

12.5.2025 – திங்கள்
சித்ரா பௌர்ணமி

சித்ரா பவுர்ணமி என்பது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி திதி. சைவ சமயத்தவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து, இறைவனை வழிபடுவார்கள். இந்த நாள் ஆன்மாவின் இருளைப் போக்கி, வெளிச்சம் தருவதாக நம்பப்படுகிறது. ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி காய்ச்சப்படும். திருவண்ணாமலையில், சித்ரா பௌர்ணமியில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.(மே) 11-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.01 மணி முதல் மறுநாள் இரவு 10.25 மணி வரை சித்ரா பவுர்ணமி கிரிவலம் வருகிறது. ஸ்ரீரங்கத்தில் சித்ரா பௌர்ணமியன்று காவிரியாற்றின் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கஜேந்திர மோட்சம் நடத்திக் காட்டப்படும். இதையொட்டி காலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழி நடை உபயங்கள் கண்டருளி அம்மா மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்து. மாலை 6 மணியளவில் நம்பெருமாள் காவிரி ஆற்றில் இறங்குவார். காவிரியில் கிழக்கு நோக்கி நம்பெரு மாளும், மேற்கு நோக்கி கோயில் யானையும் நிற்க, அப்போது கோயில் யானை ஆண்டாள் முதலை காலைப்பிடித்து கவ்வி இழுப்பது போல் நடித்துக் காட்டப் படும். அது சமயம் யானை அபயக்குரல் எழுப்பி பிளிற. அதனைத் தொடர்ந்து, நம்பெருமாளின் சடாரியை எடுத்து வந்து யானை மீது அர்ச்சகர்கள் வைப்பர். இந்த கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருப்பர்.

12.5.2025 – திங்கள்
சித்ரகுப்த பூஜை

சித்ரா பௌர்ணமியில் கொண்டாடப்படுகின்ற முக்கிய விழா சித்திரகுப்த ஜெயந்தி விழா. அதனால் சித்ரா பெளர்ணமியன்று அதிகாலையில் குளித்து விநாயகரை வழிபட வேண்டும். விநாயகருக்கு இந்த நன்நாளில் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், கொண்டைக் கடலை சுண்டல் ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். சித்ர குப்தன் தோன்றியது குறித்து பல கதைகள் உண்டு. காலதேவன் எமன், தன்னால் இந்த ஜீவராசிகளில் பாவ புண்ணிய கணக்குகளையும், ஆயுள் கணக்குகளையும் பார்க்க முடியவில்லை என்று சங்கடப்பட்டு சிவனை நோக்கி தவம் இருந்தான். உடனே அவருக்கு ஒரு உதவி யாளரைத் தருவதற்காக சிவன் ஒரு தங்கப் பலகையில் சித்திரம் வரைந்தார். அந்த சித்திரத்திற்கு உயிர் கிடைத்ததால் அவருக்கு சித்திரகுப்தன் என்று பெயர் வைத்தார்கள். நீலாதேவி கர்னிகா தேவி என இரண்டு துணைவியாருடன் காட்சி அளிக்கக் கூடிய சித்திரகுப்தன் நம் வாழ்நாளில் நாம் செய்கின்ற பாவ புண்ணியக் கணக்குகளைத் தவறாது எழுதி அதனை கால தேவனுக்குச் சமர்ப்பிக்கும் வேலையைச் செய்கின்றார். நம்மை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிற அச்சம் ஏற்பட்டு தொடர்ந்து பாவம் செய்யாமல் இருப்போம். சித்ரகுப்தனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வணங்க வேண்டும். அன்று அன்னதானம், விசிறி, குடை, செருப்பு உட்பட பல தானங்களைச் செய்தால் புண்ணியம் கூடிபாவம் குறையும் என்பது நம்பிக்கை.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: