ஆனால், ஆழ்வார் அவதரிக்கும்போது எல்லா ஜீவன்களும் ஜனிப்பதுபோன்ற பிரக்ருதி ஜனனம் கிடையாது. ஆழ்வார் நமக்கு இங்கு ஞானத்தையும் பக்தியையும் போதிப்பதற்காகவே அவதாரம் செய்கிறார். அதனாலேயே அவரை சட வாயு தொட முடியாது. அவர் கர்ப்பத்திலிருந்து வெளியே வரும்போதே சட வாயுவை எட்டி உதைத்துவிட்டு வெளியே வந்ததுனாலதான் சடகோபன் என்கிற பெயர் வந்தது. சடாரி… அரி என்றால் எதிரி என்று அர்த்தம். சட வாயுவிற்கு யார் எதிரியோ அவர் சடாரி.
இதை ஜடம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அது வேறு. ஜடம் என்றால் உயிரற்ற பொருள். அசேதனப் பொருள். ஆனால், இங்கு சடாரி. சடம் என்கிற வாயுவானது நம்முடைய பூர்வ ஜென்ம ஞாபகங்கள் ஆகட்டும்; கர்ப்பத்தில் அந்த ஜீவனுக்கு ஏற்பட்ட அறிவையும், பூர்வ ஜென்ம ஞாபகங்களையும் மறக்கச் செய்து விடுகிறது. இந்த விஷயம் கர்ப்போ உபநிஷத்தில் உள்ளது.
சாதாரண தாய் கர்ப்பத்தில் இருந்தபோது சடவாயு தாக்கியது. ஆழ்வார் என்கிற தாயாரை சரணடையும்போது சட வாயுவின் தாக்கம் விலகி விட்டது. இப்படியாக மமகாரம், அகங்காரம் நீக்கி, பிரகிருதியின்பற்றை அழித்து, தாயார் நிலையிலிருந்து பகவானிடம் சேர்க்கும் ஒரு ஸ்தானம் யாருடையது என்று கேட்டால் அது நம்மாழ்வாருடையதுதான்.
எனவே, நாம் ஆழ்வாரை தாயார்
ஸ்தானத்தில் வைத்துத்தான் பார்க்கிறோம்.
இப்போது ஆழ்வார் ஒரு பாசுரம் சாதிக்கிறார்.
ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே.
இந்தப் பாசுரமே ஆழ்வார் தாயார் ஸ்தானத்தில் நின்று பாடிய பாசுரம்தான். எனவே, இந்தப் பாசுரத்திற்கே தாய்ப் பாசுரம் என்றுதான் பெயர். ஏனெனில், ஆழ்வார் இந்தப் பாசுரத்தில் வாடி வாடும் வாள் நுதலே… என்று தன்னுடைய மகளை ஒரு தாய் சொல்வதுபோல இந்தப் பாசுரத்தில் குறிப்பிடுகிறார்.
இப்போது வாடி வாடும் வாள் நுதலே… என்று யாரைச் சொல்கிறார்… ஞான பக்தி வைராக்கியம் யாருக்கு சித்தித்துவிட்டதோ அந்த ஜீவாத்மாவை இங்கு மகளாக வைத்துக் கொண்டு தாய் ஸ்தானத்தில் ஆழ்வாரே நின்று பாசுரத்தை பாடுகிறார்.
ஆடி ஆடி அகம் கரைந்து… என்று சொல்கிறார் அல்லவா…. இந்த ஆடி ஆடி அகம் கரைந்து என்று சொல்லும்போது இந்தப் பெருமாளுடைய கல்யாண குணங்களை உணர்ந்து கொண்ட ஒரு ஜீவாத்மா இருக்கிறதல்லவா… சொத்சொரூபத்தை உணர்ந்து கொண்ட ஜீவாத்மா… சொத்சொரூபம் என்பது இங்கே என்னவெனில், தன்னை பெருமாளுடைய உடைமையாக சேஷத்துவ பாவத்தை உணர்ந்து கொண்ட ஜீவாத்மா.
ஆச்சார்ய அனுக்கிரகத்தால் ஞான பக்தி வைராக்கியம் சித்தித்த ஒரு ஜீவாத்மா…அந்த ஜீவாத்மா என்ன செய்கிறதெனில், தன்னுடைய உடல், மொழி, மனம், மெய் மூன்றாலும் பகவானிடம் சரணாகதி ஆகியிருக்கிறது. அப்படிச் சரணாகதி ஆனதினுடைய வெளிப்பாடு எப்படியெனில்…. உடலால் பகவானுக்கு சரணாகதி ஆகியிருப்பதின் வெளிப்பாடு எப்படியெனில் ஆடி ஆடி… இது உடலால் சரணாகதியின் வெளிப்பாடு என்பதே ஆடி ஆடி என்கிற பதம். அகம் கரைந்து என்று சொல்லும்போது மனதால் அந்த ஜீவாத்மா பரமாத்மாவிற்கு சரணாகதி ஆகியிருக்கிறது என்பதை குறிக்கிறது.
அதற்கடுத்து இசை பாடிப்பாடி… இந்த பதமானது மொழியால சரணாகதி ஆகியிருப்பதையே காட்டுகிறது. அப்போது மனதாலும், மொழியாலும், உடலாலும் இந்த சேஷனாகிற ஜீவாத்மா சேஷியாகிய பரமாத்மாவிற்கு சரணாகதி ஆகியிருக்கிறது. அப்படி ஆனதினால் கண்ணீர் மல்கி… இது பக்தி பாவத்தினுடைய வெளிப்பாடு. எங்கும் நாடி நாடி… எங்கும் நாடி நாடி என்று சொல்வது என்பது ஞானத்தினுடைய வெளிப்பாடு. கண்ணீர் மல்கி பக்தியினுடைய வெளிப்பாடு. எங்கும் நாடி நாடி என்பது ஞானத்தினுடைய வெளிப்பாடு. மேலும், எங்கும் நாடி நாடி என்பது பகவானுடைய சர்வ வியாபகத்தையும், இரண்டு நாடி நாடி என்று சொல்கிறார் அல்லவா அதை கவனியுங்கள். எங்கும் நாடி…. பிறகு இன்னொரு நாடி. முதல் நாடி சர்வ வியாபகத்தை குறிப்பிடுகிறார். மீண்டும் இரண்டாவது நாடி என்று சொல்கிறார் அல்லவா… இந்த இரண்டாவது நாடியைச் சொல்லும்போது சர்வ அந்தர்யாமித்துவத்தை குறிப்பிடுகிறார்.
அப்போது வெளியில் சர்வ வியாபகமாக எங்கும் நாடியிருக்கிறார். அதற்கடுத்து தனக்குள்ளேயே நாடி… சர்வ அந்தர்யாமித்துவத்தை நாடி… ஏனெனில், பகவானின் ஐந்து நிலைகளில் அந்தர்யாமியும் ஒரு நிலைதானே. பரம் வியூகம் விபவம் அர்ச்சாவதாரம் அந்தர்யாமி அல்லவா… அப்போது எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று சொல்லும்போது… நரசிம்மாவதாரத்தினுடைய முக்கிய பிரபாவமே, சர்வ வியாபித்துவத்தையும் சர்வ அந்தர்யாமித்துவத்தையும் காண்பித்துக் கொடுப்பதுதான் நரசிம்மாவதாரமே.
எந்தத் தூணைத் தட்டினால் வருவார் என்று கேட்கும்போது அத்தனை தூணிலும் அத்தனை ஜீவராசிகளுடைய இருதயத்திலும், அத்தனை சேதன அசேதன வஸ்துக்களிலும் நிறைந்திருந்து இரண்யன் தட்டிய தூணிலிருந்து வெளிப்பட்டார் அல்லவா? அப்போது எங்கும் நாடி நாடி என்று சொல்லும்போது ஆழ்வார் நரசிம்மாவதாரத்தின் பிரபாவத்தைதான் சொல்கிறார். ஏனெனில், அவன் எப்போதும் சர்வ அந்தர்யாமியாகவும் சர்வ வியாபியாகவும்தான் இருக்கிறான். ஆனால், அப்படி அவன் இருப்பதை நமக்கு காண்பித்துக் கொடுத்ததுதான் நரசிம்மாவதாரம்.
இப்படியாக ஜீவாத்மாவின் பக்தியையும் ஞானத்தையும் சொல்லிவிட்டு, வாடி வாடும் இவ்வாள் நுதலே என்று சொல்கிறார் அல்லவா… ஏன் வாடணும்… பகவானை சரணடைந்த ஜீவாத்மாதானே. அந்த ஜீவாத்மாவிற்கு எப்படி வாட்டம் வரமுடியும். வாட்டம் என்கிற துன்பம் எப்படி வரமுடியும். இங்கு வாடி வாடும் இவ்வாழ் நுதலே… என்கிற பதம் அந்த ஜீவாத்மாவினுடைய வைராக்கியத்தை காண்பித்துக் கொடுக்கிறது. ஆடி ஆடி… உடலால் ஜீவாத்மாவின் சரணாகதி. அகம் கரைந்து என்று சொல்லும்போது மனதால் அந்த ஜீவாத்மா சரணாகதி அடைந்திருக்கிறது. இசை பாடிப்பாடி என்று சொல்லும்போது மொழியால் அந்த ஜீவாத்மா சரணாகதி ஆகியிருக்கிறது.
இப்படி மனம் மொழி மெய்களால் சரணாகதி ஆனதுனால அந்த ஜீவாத்மாவிற்கு என்ன சித்திக்கிறது எனில் கண்ணீர் மல்குதல் என்கிற பக்தி சித்திக்கிறது. எங்கும் நாடி நாடி நரசிங்கா… என்பதன் மூலமாக ஞானம் சித்திக்கிறது. வாடி வாடுதல் மூலமாக வைராக்கியம் சித்திக்கிறது. உலகியலில் துன்பங்கள் வரும்போது இன்பத்தை வேண்டி நாம் வாடியிருக்கிறோம். துன்பத்தை அனுபவித்து இன்பம் கிடைக்க வேண்டுமென்றுதானே வாடியிருக்கிறோம். ஆனால், இங்கு ஜீவாத்மா இந்த இன்ப துன்ப மயமான உலகத்திலிருந்து விடுபட்டு பகவான் கிடைக்க வேண்டுமென்று வாடியிருக்கிறது. இந்த வாடி வாடுதல் என்பது நரசிங்கனுக்காக வாடுதல்.
மனம், மெய், மொழிகளால் நரசிங்கனை சரணாகதி அடைந்து அந்த நரசிம்மனுக்காக கண்ணீர் மல்குதல் என்றபோது பக்தியாகி, அந்த நரசிம்மனை நாடி நாடி எங்கும் என்று சொல்லும்போது ஞானமயமாகி, அந்த நரசிம்மனுக்காக வாடி வாடி என்று சொல்லும்போது வைராக்கியமாகி… ஞான பக்தி வைராக்கியங்கள் சித்தித்த ஒரு ஜீவாத்மாவை தன்னுடைய மகளாகக் கொண்டு, ஆச்சார்ய ஸ்தானத்தில் இருக்கக்கூடிய ஆழ்வார் தாயாக இருந்து இந்தப் பாசுரத்தை நமக்கு அருளிச் செய்கிறார். அப்போது இந்தப் பாசுரத்தில் ஆழ்வாருடைய ஸ்தானம் என்பது தாயாருடைய ஸ்தானம். ஞான பக்தி வைராக்கிய ஸ்தானம் மகளுடைய ஸ்தானம். இந்த ஜீவாத்மா இங்கு சிஷ்ய ஸ்தானத்திலேயேயும், ஆழ்வார் ஆச்சார்ய ஸ்தானத்திலேயும் இருந்து கொண்டு இங்கு நரசிங்கம் என்கிற பரமாத்மாவை நமக்கு காண்பித்துக் கொடுக்கிறார்.
ஸ்ரீதத்தாத்ரேய சுவாமிகள்
The post அகம் கரைந்து நாடுங்கள் நம் நரசிங்கனை… appeared first on Dinakaran.