ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 95 (பகவத்கீதை உரை)
காமக்ரோதவியுக்தானாம் யதீனாம் யதசேதஸாம்
அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்த்தே விதிதாத்மனாம் (5:26)
‘‘காமம், குரோதத்தைக் கடந்துவிட்டவன்தான் ஞானி. அத்தகையவனுக்கு எல்லாமே பரமாத்மாவாகத்தான் தெரியும். ஆகவே அவன் அந்த இரு உணர்வுகளை வென்றுவிட்டவன். அதாவது பரமாத்மாவுடன் ஒன்றிவிட்டவன்.’’ கோபப்படுவதும், காம இச்சை கொள்வதும் தவிர்க்கவே முடியாத மனித இயல்புகள். ‘அவனுக்குக் கோபமே வராது, அவன் சாந்தமானவன்’ என்று ஒருவனுக்கு நற்சாட்சிப் பத்திரம் கிடைக்கப் பெற்றால் மட்டும், அவன் ஞானியாகிவிட முடியாது. அவ்வாறு பாராட்டுபவர் பார்க்கும் சமயங்களில் அவன் கோபப்பட்டதில்லை, அவ்வளவுதான்.
கொஞ்சம் ஆழமாக விசாரித்துப் பார்தோமானால், அவன், ‘நான் அடிக்கடி கோபப்படுவதில்லை; எப்போதாவது தான்,’’ என்று தனக்குக் கிடைத்த பாராட்டுக்கான தன் தகுதியைச் சொல்வான்.
அதாவது எப்போதுமே கோபப்பட்டதில்லை என்பதிலிருந்து எப்போதாவது கோபப்படுவதுண்டு என்பது சமாதானமல்ல. ஏனென்றால், அடிமனதில் தேங்கிக் கிடக்கும் கோபம் எப்போதாவது வெளிப்படத்தான் செய்கிறது என்பதுதான் உண்மை. மேலோட்டமாக ரொம்ப நல்லவனாக, எதற்கும் எரிச்சலடையாதவனாக, சிடுசிடுக்காதவனாகத் தோன்றுவதெல்லாம் தற்காலிகமானவையே.
இவற்றை வைத்து நற்சான்றிதழ் கொடுத்துவிட முடியாது. ஒரு தந்தை, மகனுக்குப் பொறுமையைச் சொல்லிக் கொடுத்தார்.
‘‘எந்த சந்தர்ப்பத்திலும் நீ சகிப்புத் தன்மையை இழக்கக் கூடாது. நிதானம்தான் உனக்கு நற்பலன்களைத் தரும்,’’ என்றார். அப்போது அவருடைய மூக்கின் மேல் ஒரு பூச்சி வந்து உட்கார்ந்தது. உடனே அவர், மகனிடம், ‘‘இதோ பார், என் மூக்கின் மேல் ஒரு பூச்சி இருக்கிறது. அது என்னைக் கடிக்குமா, இல்லையா என்பது தெரியாது. ஆனாலும், அதை நான் விலக்க வேண்டும். அதனால் அதைக் கையால் அடித்து சாகடிக்கக் கூடாது. மெல்ல தலையை அசைத்தால் அது பறந்துப் போய்விடக் கூடும். ஆகவே இந்தத் தருணத்தில் பொறுமைதான் அவசியம்,’’ என்ற அவர் மெல்லத் தன் தலையை அசைத்தார். ஆனால் பூச்சி அசையவில்லை. ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு, அப்பா… என்று தன் வலது கையால் பட்டென்று மூக்கில் அடித்துக் கொண்டு அந்தப் பூச்சியைக் கொன்றார்.
‘‘சனியன். ஏதோ பூச்சி என்று நினைத்தேன்; அது கொசு. என்னமாய்க் கடிக்கிறது!’’ என்று எரிச்சலுடன் சொன்னார். பையன் புன்னகையுடன் அங்கிருந்து விலகிச் சென்றான்.தனக்கு எந்த பாதிப்பும் இல்லாத வரையில் கோபப்படக்கூடாது என்று பிறருக்கு உபதேசம் செய்யலாம்; ஆனால் பாதிப்பு உண்டு என்று தெரிந்தால் கோபத்தை அடக்கவே முடியாது என்பதுதான் மனித வாழ்க்கையின் சோகம்.
‘‘நான் எப்போதாவதுதான் கோபப்படுவேன்; மற்றபடி நான் சாந்தமானவன்தான்,’’ என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அவரை சரியான எஸ்கேபிஸ்ட் என்றே சொல்ல வேண்டும். எப்போதாவது கோபப்படுபவன் பரிபூரண சாந்தவானாக இருக்கவே முடியாது. இது வெறும் பிரமை. தான் அமைதியானவன் என்று சொல்லிக் கொள்வதிலும், பிறர் அவ்வாறே தன்னைப் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் விளைவது.
ஒரு தொட்டியில் நீர் நிரம்பியிருக்கிறது. அதிலிருந்து ஒரு வாளி மூலமாகத் தண்ணீரை வெளியே எடுக்கிறோம். வாளியில் நீர் கிடைக்கிறது. இப்படி அந்தத் தொட்டியில் இருக்கும்வரை நீர் தொடர்ந்து கிடைத்துக் கொண்டுதான் இருக்கும். ஆனால் தொட்டி வற்றிவிட்டால், கிடைக்காது. கோபமும், காமமும் அப்படித்தான். மனக்கேணிக்குள் ஊறிக்கொண்டே இருக்கும்; தேவைப்படும்போதெல்லாம் வெளிவரும். ‘என்னிடம் கோபம் இல்லை’ என்று ஒருவன் சொல்கிறான் என்றால், அவனுடைய மனக்கேணி வற்றிவிட்டது என்று அர்த்தம்.
ஆனால் எளிதில் வற்றக் கூடியதா அது? ஆகவே எந்த இடத்திலும், யார் மீதும், எதற்காகவும் கோபமே கொள்ளாத மனப்பக்குவம் ஒருவனுக்கு வருகிறது என்றால், அவன்தான் ஞானி என்கிறார் கிருஷ்ணன். அதனால் எப்போதாவதுதான் கோபப் படுவேன் என்று சொல்வதைவிட அப்படி எப்போதாவது கோபப்பட்டதை எண்ணி வெட்கப்படுபவன் ஞானியின் நிலையை எட்ட முயற்சிக்கிறான் என்று அர்த்தம். தன்னைத் தானே தவறாக உருவகம் செய்து கொள்வதும், தானே சரியானவன் என்று கருதிக் கொள்வதும், ஞான நிலையை அடைய முடியாதவாறு தடுக்கும் தடைக் கற்கள். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அவ்வாறு தவறான உருவகத்துக்கு அவன் நியாயம் கற்பிக்க முயற்சிப்பதுதான்.
கோபப்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்தோமானால், அது மிகவும் அற்பமானதாவே இருப்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். துரதிருஷ்டவசமாக, கோபப்படுமுன் அவ்வாறு ஆராய, உணர்ச்சிவசப்பட்ட நம் மனசு முற்படுவதில்லை. கோப விளைவுகளுக்குப் பிறகு அதே மனசு வருத்தப்படுகிறது. அவ்வாறு ஆராய, நாம் அமைதியாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அமைதி என்பது பேச்சில்லாமல் இருப்பதில்லை; சிந்தனையில்லாமல் இருப்பதும்தான். அப்போதுதான் எதிராளியின் பேச்சை கவனமாகக் கேட்க முடியும்.
அவன் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ள முடியும். அதன் பிறகு நம்மால் நிதானமாக பதில் சொல்ல முடியும். இந்த முயற்சியால் கோபம் எழாததோடு, மோசமான பின்விளைவுகளான நட்பு – பாசம் இழத்தல், நிரந்தர வன்மம் கொள்தல் போன்றனவற்றைத் தவிர்க்க முடியும். எதிராளி பேச ஆரம்பிக்கும்போதே, அவன் சொல்ல வந்ததைத் தவறாகப் புரிந்து கொள்வதன் கோளாறுதான் கோப வெளிப்பாடு. அதற்கு முன்னால் அவன் மீதான நம் மதிப்பீட்டுக்கும் இதில் பங்கு உண்டு. கோபமும், காமமும் நம்முடைய இரு நிலைகள், உணர்வுகள். சம்பவங்கள் அல்ல. ஆனால், சம்பவங்களால் அவை உருவாவதோ, அதிகரிப்பதோ செய்யும்.
ஒரு மன்னர், கைதிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைச் சாலையை ஆராயப் போனார். மன்னரே வந்திருப்பதைக் கண்டதும் கைதிகளுக்கு அவரிடம் நேரடியாகவே தம் துக்கத்தைச் சொன்னால் நிவர்த்தி கிடைக்கும் என்று தோன்றியது. அவர்கள் கைது செய்யப்பட்டபோதோ, விசாரணை செய்யப்பட்டபோதோ, தண்டனை அளிக்கப்பட்டபோதோ, அங்கே மன்னர் இல்லை. அவருடைய நீதிப் பிரதிநிதிகள்தான் அவர் சார்பில் அவ்வாறு செயல்பட்டு, தண்டனையாகக் கைதிகளை சிறையில் அடைத்தார்கள்.
ஆகவே, இப்போது நேரடியாக மன்னரே வந்திருக்கும்போது அவரிடம் அழுது, கெஞ்சி, முறையிட்டால் ஒருவேளை அவர் மனமிறங்கித் தங்களை விடுதலை செய்துவிடக் கூடும் என்று எதிர்பார்த்தார்கள். அதன்படியே மன்னரிடம் அழுது புலம்பினார்கள். ‘‘நான் நிரபராதி. என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அநியாயத்துக்கு தண்டிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு விரைவில் விடுதலை அளியுங்கள்…’’ என்ற தோரணையில் பல கைதிகள் அவரிடம் முறையிட்டார்கள். மன்னர் அவ்வாறு கோரும் ஒவ்வொருவருடைய முகத்தையும் கூர்ந்து நோக்கியவாறே வந்தார். எந்த பதிலும் சொல்லாமல் அவர்களைத் தவிர்த்தார்.
அந்தக் குழுவில் தனியே ஒருவன் தலை குனிந்து அமர்ந்திருந்தான். அவர்களிடமிருந்து இவன் வேறுபட்டிருக்கிறான். தான் வந்ததையும், கைதிகள் தன்னிடம் ஓலமிடுவதையும் அவன் கவனிக்காமலா இருந்திருப்பான்? கொஞ்சம் சந்தேகம் தட்டியது மன்னருக்கு. இவனிடம் ஏதோ விஷயம் இருக்கிறது என்று ஊகித்த அவர், அருகில் நின்றிருந்த அதிகாரியிடம் சைகை காட்டினார்.
அதிகாரி அந்தக் கைதியைத் தோளில் தட்டி, பரபரப்புடன், ‘‘மன்னர் வந்திருக்கிறார். எழுந்து மரியாதை செலுத்து,’’ என்று கூறினார். அவன் திடுக்கென்றெல்லாம் எழுந்திருக்கவில்லை; மிகவும் நிதானமாக தலை தூக்கிப் பார்த்தான். மன்னருக்கு வியப்பு. பொறுக்க மாட்டாமல், ‘‘என்னப்பா, நீ கொஞ்சமும் சலனமில்லாமல் இருக்கிறாயே. பிற கைதிகள் எல்லாம் தங்களை விடுவிக்குமாறு என்னிடம் கேட்கிறார்கள். நீ மட்டும் இவ்வளவு அமைதியாக இருக்கிறாய்?’’ என்று வியப்புடன் கேட்டார்.
‘‘மன்னவா, நான் செய்த குற்றம் மிகப் பெரியது. அது எனக்குத் தெரிகிறது. அதற்காக எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனை மிகவும் குறைவு. இதுவும் எனக்குத் தெரிகிறது’’ என்று அவன் பதிலளித்தான். அவன் எதையும் எதிர்பாத்துக் காத்திருக்கவில்லை என்பதால் அவன் பேச்சில் தெளிவிருந்தது. மன்னர் திகைத்தார். குற்றம் புரிவதற்காக இவனுக்குள் ஏற்பட்டிருக்கும் கோபம் நியாயமானதாகவே இருந்திருக்கும், அதுவும் உடனே வெளிப்பட்டதாக இருக்காது என்றும் அவர் ஊகித்தார். உடனே அதிகாரியிடம், ‘‘இவனை இப்போதே விடுதலை செய்யுங்கள்,’’ என்று உத்தரவிட்டார். அதிகாரிக்குக் குழப்பம்.
`‘குற்றத்தை ஒப்புக் கொள்பவனுக்கு விடுதலையா, தண்டனையே இல்லையா?’’
‘‘ஆமாம், இவன் பரிசுத்தமானவன். செய்த தவறுக்காக வருந்துகிறான். மற்றவர்கள் எல்லாம் போலியானவர்கள். தாம் செய்த தவறுகளுக்குக் கிடைத்திருக்கும் தண்டனை ரொம்பவும் அதிகம் என்று கருதுபவர்கள். ஆனால், நிச்சயம் தண்டனைக்குரியவர்கள். அவர்கள் அப்பாவிகளாக நடந்து கொண்டு தம்மை மட்டுமல்ல, நம்மையும் ஏமாற்றத் தயங்காதவர்கள். அவர்களோடு இவன் தொடர்ந்து இருந்தானானால், தன் தவறை இவனும் நியாயப்படுத்தத் தலைப்படுவான். அது அடுத்தடுத்த தவறுகளுக்கு இவனை வழி நடத்தும். ஆகவே இவனை விடுதலை செய்துவிடு. இவன் தொடர்ந்து நல்லவனாகவே இருக்கட்டும்’’ என்றார் மன்னர்.
உண்மைதான், கோபமும், காமமும் நம்மை விட்டு அகலவே அகலாது. பல சந்தர்ப்பங்களில் அந்த உணர்வுகள் நமக்குத் தலையெடுக்காததாலேயே நாம் மனதளவில் சுத்தமானவர்கள் என்று கொள்ள முடியாது. எப்போதாவது அவை தோன்றுவதை, ‘எப்போதாவதுதானே’ என்று சமரசம் செய்து கொள்ளவும் தயங்காத நாம் சலன புத்தி கொண்டவர்கள்தான்.
இந்த வகையில் தன்னை ஏமாற்றிக் கொள்பவனால் பரமாத்மாவை ஏமாற்ற முடியாது. அதாவது தன் ஆன்மாவுக்கு நியாயம் செலுத்துபவனாக ஆக முடியாது. இப்படி முற்றிலும் கோபமும், காமமும் அழிந்தவனே ஞானியாகத் தகுதி படைத்தவன். ஏனென்றால் அவன் எங்கும், எதிலும் பரமாத்மாவையே காண்கிறான். ஆகவே எந்த சந்தர்ப்பத்திலும் அவனால் கோபப்பட முடியாது; காம உணர்வு கொள்ளவும் முடியாது.
இந்த இரு குணங்களும், பிறவியிலிருந்தே நம் வாழ்க்கையில் நம்முடன் பயணிப்பவை. அதனால்தான் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர், ‘காமத்துப் பால்’ என்றே தனி அதிகாரம் ஒன்றைப் படைத்தார். ஆமாம், மொத்தக் குறட்பாக்களிலும் மூன்றில் ஒரு பங்கு அளவு, அந்த உணர்வுக்கு அவர் இடம் அளித்திருக்கிறார். இவை இரண்டிலுமிருந்து விடுதலை பெறுபவன், இவற்றைக் கடந்து நிற்பவனே நித்ய ஆனந்தத்தை, சாந்தத்தை அடைகிறான் என்கிறார் கிருஷ்ணன்.
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்
The post மனக்கேணியின் ஊற்றுகள் appeared first on Dinakaran.