பதிகமும் பாசுரமும்

பாகம் 7

17. ஆடுதுறை (திருக்கூடலூர்/ வடகுரங்காடுதுறை)

ஆடுதுறை கிராமம் தஞ்சாவூரிலிருந்து 20 கி.மீ; கும்பகோணத்திலிருந்து 23 கி.மீ. ஆடுதுறை, வடகுரங்காடுதுறை என்று அழைக்கப்படுகிறது. இது வாலி வழிப்பட்ட, பாடல் பெற்ற தலம். 36 கி.மீ தொலைவில், தென் குரங்காடுதுறை என்ற பாடல் பெற்ற இன்னொரு தலம் உள்ளது. இது சுக்ரீவனால் வழிபடப்பெற்றது. வட குரங்காடுதுறையில் திவ்ய தேசமும் உள்ளது. அது, திருக்கூடலூர்.

(திருமங்கை ஆழ்வார் 10)
“பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு
அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவர் ஊர்போல்
கள்ள நாரை வயலுள் கயல்மீன்
கொள்ளை கொள்ளும் கூடலூரே’’
(திருமங்கை ஆழ்வார், 1360)

‘‘ஆடுதுறைப் பெருமானே, கண்ணனே, குறும்புக் குழந்தையாய் நீ உறியில் இருந்து தயிரை எடுத்து உண்டாய். என் உளம் கவர்ந்த பெருமானே! வயலுள் நாரையும் மீனும் உள்ள, மனதைக் கொள்ளை கொள்ளும் அழகான கூடலூரில் நீ அமர்ந்திருக்கிறாய்’’ “உளம் புகுந்த” என்ற சொற்களை ஆழ்வார்களும், நாயன்மார்களும் பல இடங்களில் பயன்படுத்துகின்றனர். இறைவன் அவர்கள் உள் இருந்து அவர்கள் பக்தியை வெளிப்படுத்துவது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் எப்பொழுதும் இறைவனைப் பற்றியே நினைப்பவர்கள்.

அருகிலேயே உள்ளது பாடல் பெற்ற தலமான வடகுரங்
காடுதுறை
(சம்பந்தர் 11)
“கோலமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்துமாங் கனிகளுந்தி
ஆலுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை நினையவல் வினைகள்
வீடே’’

(சம்பந்தர் 3.91.6)

‘‘காவிரியின் வட கரையில் உள்ள, வாலி வணங்கிய இந்த குரங்காடுதுறை ஈசன், மாமணி போன்ற நீலநிறக் கழுத்தை உடையவர். அவரை நாம் மாமலர்களோடு தூபம் தீபம் இவை கொண்டும் போற்றிப் பாட வேண்டும். அவரை நினைத்தால் நம் பழைய வினைகள் தீரும்’’ இந்தப் பதிகம் நமக்கு இறைவனின் பெருமைகளோடு தலபுராணத்தையும் விளக்குகிறது.

18. கடலூர் (திருப்பாதிரிப்புலியூர் / திருவஹீந்திரபுரம்)

கடலூர், சென்னையில் இருந்து 175 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கும் பாடல் பெற்ற தலமும், திவ்ய தேசமும் உண்டு. கடலூர் மாவட்டத்தில் 10க்கு மேல், பாடல் பெற்ற ஸ்தலங்கள் உள்ளன.
கடலூரில் உள்ள திவ்ய தேசம், திருவஹீந்திரபுரம் (திருமங்கை ஆழ்வார் 10). கடலூரில் இருந்து 8 கி.மீ. இங்குள்ள பாடல் பெற்ற தலம், திருப்பாதிரிப்புலியூர் (சம்பந்தர் 11, அப்பர் 10) கடலூரின் ரயில் நிலயத்தின் பெயரே திருப்பாதிரிப்புலியூர்தான்.

“புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
உன்னடி என்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டும்
இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்தருள்
செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே’’
(அப்பர் 4.94.8)

‘‘பாதிரிப் புலியூரில் உறைகின்ற புண்ணியனே! தீயின் நிறத்தை உடையவனே! செழுமையான நீரை உடைய கங்கையைச் செஞ்சடையில் வைத்தவனே! தொழுவார்க்கு என்றும் அருள் புரிபவனே! நான் புழுவாகப் பிறந்தாலும் உன் திருவடியை மறவாது இருக்க அருள் புரிவாய்.’’ இந்தப் பதிகம், அப்பரின் பக்தியையும், பணிவையும், அடக்கத்தையும் காட்டுகிறது.

திவ்ய தேசப் பாசுரம் பின்வருமாறு:
“இருந்தண் மாநிலம் ஏனம்அது ஆய்வளைமருப்பினில் அகத்து ஒடுக்கி
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமலநல்மலர்த்தேறல் அருந்தி
இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு திருவயிந்திரபுரமே.’’
(திருமங்கை ஆழ்வார், 1148)

‘‘அன்று வராஹ வடிவில் உலகைக் காத்தவன், அன்று பாற்கடலில் துயின்றவன், இன்று திருவஹீந்திரபுரத்தில் அழகாய் கோயில்கொண்டிருக்கிறான். அவனை நித்தம் மலர்கொண்டு தொழுது அருள் பெறுவாய்.’’மற்ற பாடல்களில் வராஹ, நரசிம்ம, வாமன, திரிவிக்ரம, ராம அவதாரங்களைக் கொண்டவனாக வர்ணிக்கும் ஆழ்வார், இப்பாசுரத்தில் ஆலிலையில் துயின்ற கிருஷ்ணன் என்றும் எல்லா அவதாரங்களும் திருவஹீந்திரபுரத்து தெய்வ நாயகனே என்கிறார், ஹயக்ரீவர், இந்தக் கோயில் எதிரே ஒரு சிறிய குன்றின் மேல் வீற்றுள்ளார்.

19. திருப்புகலூர் / திருக்கண்ணபுரம்

திருப்புகலூர் கிராமம் நாகை மாவட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ. இங்கு பாடல் பெற்ற தலங்கள் இரண்டு – திருப்புகலூர் (சம்பந்தர் 22, அப்பர் 40, சுந்தரர் 10), திருப்புகலூர் வர்த்த மானீஸ்வரம் (சம்பந்தர் 11). வர்த்தமானீஸ்வரம் (சரண்யபுரீஸ்வரர் கோயில்) பெரிய கோயிலான அக்னீஸ்வரர் கோயிலுக்குள்ளேயே இருக்கிறது. திருப்புகலூரில் அப்பர் தமது கடைசிப் பதிகத்தை அருளி புகலூர் மேவிய புண்ணியனான அக்னீஸ்வரரோடு கலந்தார்.

“எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே’’
(அப்பர் 6.99.1)

‘‘புகலூர் மேவிய புண்ணியனே! நின் திருவடியைத் தவிர வேறு எதைப் பற்றியும் நான் எண்ணுவதில்லை. நான் காண விரும்புவதும் நின் திருவடியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. நான் விரும்புவது நின்னைத் தொழுவது மட்டுமே. நீ கொடுத்த இந்த ஒன்பது வாசல் கொண்ட வீட்டை விட்டு அகலும் போது உன்னை உணரவோ நினைக்கவோ முடியாமல் போகலாம். அதனால் நீ என்னை உன் திருவடிக்கு இப்பொழுதே அழைத்துக் கொள்.’’ இது அப்பர் என்ற மஹானின் கடைசிப் பாடல். நாம் வயதான பருவத்தை அடையும் பொழுது இறைவனின் திருவடியைத் தவிர வேறு எதையும் நினைக்கக் கூடாது என்பதை விளக்குகிறார்.

திருக்கண்ணபுரம் திவ்ய தேசம் திருப்புகலூரில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. ஐந்து ஆழ்வார்கள் 128 பாசுரங்களால் சௌரிராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்து உள்ளனர் – (பெரியாழ்வார் 1, ஆண்டாள் 1, குலசேகர ஆழ்வார் 11, திருமங்கை ஆழ்வார் 104, நம்மாழ்வார் 11). சௌரிராஜப் பெருமாளின் அழகும் சிரிப்பும் ஒவ்வொரு பக்தனும் சென்று பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்று;

“வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்,
தாமன்னு தாச ரதியாய தடமார்வன்,
காமன்றன் தாதை கண்ணபுரத் தெம்பெருமான்,
நாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ!’’
(திருமங்கை ஆழ்வார், 1684)

‘‘தும்பியே! தசரதனின் மகனும் மன்மதனின் தந்தையும் வாமனனும் கற்கியும் ஆன திருக்கண்ணபுரத்து எம்பெருமாளின் மேல் சாத்தப்படும் நறுமணம் மிக்க மாலைமேல் அமருகிறாயே. அவ்வளவு அருகில் அவரை உணரும் நீ அவர் மேல் உள்ள நறுமணம் பற்றி எனக்குக் கூறுவாயாக’’ பத்துப் பாடல்களிலும் ஆழ்வார் தும்பியிடம் பெருமாளின் நறுமணம் பற்றிக் கேட்கிறார். மற்றொரு பக்தனின் அனுபவத்தைக் கேட்டு அதன் மூலம் நம் பக்தியை வெளிப்படுத்தும் வித்தியாசமான பக்தி இது. தும்பியிடம் “என்னால் பெருமாளை நீ செல்லும் அளவிற்கு அவ்வளவு கிட்டத்தில் செல்ல முடியாது. அதனால் உன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்” என்றும் கேட்கிறார்;

“மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த்
தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னைக் கண்ணபுரத்து அடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன்சொல் தமிழ்மாலை செப்பப் பாவம் நில்லாவே’’
(திருமங்கை ஆழ்வார், 1727)

இது திருமங்கை ஆழ்வாரின் தசாவதாரப் பாடல்களில் ஒன்று. திருக்கண்ணபுரத்துப் பெருமாள் மீனாய், ஆமையாய், வராஹமாய், சிம்ஹமாய், வாமனனாய், தானாய், ராமனாய் (பரசுராமன்), தானாய் (ஸ்ரீராமன்), பின் ராமனாய் (பலராமன்), கிருஷ்ணனாய், கல்கியாய் அவாதாரம் கொண்டார். ஆழ்வார் திருக்கண்ணபுரத்து சௌரிராஜப் பெருமாளை ஸ்ரீராமனாகக் காண்பது, ‘தானாய்’ என்ற சொல்லில் தெரியவருகிறது. பாடல் பெற்ற தலங்களான திருச்செங்காட்டங்குடி, திருராமனாதீஸ்வரம், திருமருகல், திருச்சாத்தமங்கை அனைத்தும் திருப்புகலூர், திருக்கண்ணபுரம் அருகே உள்ளன.

(தொடரும்)

பேராசிரியர் ஜி.ஸ்ரீநிவாசன்

The post பதிகமும் பாசுரமும் appeared first on Dinakaran.

Related Stories: