சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் குப்பை சேகரித்தும், பிச்சை எடுத்தும் அங்குள்ள நடைபாதையில் வசித்து வந்தார். கடந்த 21ம் தேதி இரவு ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் செந்தில் (எ) குமார் (45) என்பவரும் 55 வயது மதிக்கத்தக்க நபரும் ஒன்றாக மது குடித்துள்ளனர். பிறகு குடிபோதையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் செந்தில் கையில் வைத்திருந்த பைப்பால் 55 வயது மதிக்கத்தக்க நபரை தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் அந்த நபர் மயங்கினார். இதை பார்த்த பொதுமக்கள் மயங்கிய நபரை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்தனர்.
இதுகுறித்து சென்ட்ரல் அருகே டீ விற்பனை செய்து வரும் சேப்பாக்கத்தை சேர்ந்த சேகர் என்பவர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்தார். பின்னர் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி செந்தில் என்பவரை தேடி வந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சிறுவள்ளூர் கிராமத்தில் பதுங்கி இருந்த செந்திலை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
The post பிச்சைக்காரர் கொலை: சக பிச்சைக்காரர் கைது appeared first on Dinakaran.