கோவில்பட்டியில் பரபரப்பு 24 கிலோ கஞ்சா பதுக்கிய 6 பேர் கைது

*தனிப்படை போலீசார் அதிரடி

கோவில்பட்டி : கோவில்பட்டி பகுதியில் 24 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற 6 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை’ என்ற சிறப்பு நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி டிஜிபி சங்கர் ஜூவால் அறிவுறுத்தலின் பேரில் அந்தெந்த மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கஞ்சா நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கஞ்சா பதுக்கி வைத்திருப்பவர்கள், விற்பவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது தலைமையில் எஸ்.ஐ செந்தில்வேல்முருகன், தலைமை காவலர் கழுகாசலமூர்த்தி மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் செசிலின் வினோத், முத்துராமலிங்கம், அருணாச்சலம் ஆகியோர் மூப்பன்பட்டி சுடுகாடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 4 பேர் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சார்ந்த உதயகுமார் மகன் அருண்குமார் (24), வஉசி நகரை சேர்ந்த குருநாதன் மகன் கார்த்திக் (20), கயத்தாறு அருகே நாகலாபுரத்தை சேர்ந்த முருகன் மகன் கொம்பையா (21), கயத்தாறு அருகே தெற்கு கோனார் கோட்டையைச் சேர்ந்த தங்கராஜ் மகன் மகாராஜா (18) என்பதும், அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படையினர், 4 பேரையும் கிழக்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிந்து 4 பேரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் தனிப்படை காவலர் ரமேஷ் மற்றும் போலீசார் ஆகியோர் பாரதிநகர் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 2 பேர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவில்பட்டி வஉசி நகர் நிர்மல்குமார் மகன் சங்கர் நாராயணன் (26), பாரதி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் கரன்குமார் (25) ஆகியோர் என்பதும், கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் மேற்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

The post கோவில்பட்டியில் பரபரப்பு 24 கிலோ கஞ்சா பதுக்கிய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: