பெரம்பூர்: பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (54), இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் உடன் பிறந்த தம்பி, தங்கைகள் தரைதளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் நீண்ட நாட்களாக சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது. அது சம்பந்தமாக இரு வீட்டாரும் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் பிரபாகரன் தனது வீட்டில் வளர்க்கும் நாயை வெளியே அழைத்துக் கொண்டு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டு வாசலில் நின்றிருந்த பிரபாகரனின் தம்பி ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் பிரபாகரனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக அடித்துள்ளனர். ஜெயக்குமார் வளர்க்கும் நாயை ஏவி விட்டு கடிக்க வைத்தாக கூறப்படுகிறது.
பிரபாகரனின் ஆண் உறுப்பில் நாய் கடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் பிரபாகரன் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காயம் பட்ட பிரபாகரனின் தம்பிகள் ஜெயக்குமார் (52) மற்றும் பெரியார் செல்வன் (48) ஆகிய இருவரும் தனது அண்ணன் பிரபாகரனை சரமாரியாக தாக்கி நாயை ஏவி விட்டு கடிக்க வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜெயக்குமார் மற்றும் பெரியார் செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சொத்து பிரச்னையில் நாயை ஏவி அண்ணனை கடிக்க வைத்த தம்பிகள்: பெரம்பூரில் பரபரப்பு appeared first on Dinakaran.