தாம்பரம்: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், அண்ணா தெருவில் தனியார் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இங்கு கண்காணிப்பு கேமரா இணைப்பு பழுது பார்க்கும் பணி கடந்த 19ம் தேதி நடந்தது. அப்போது, மின்சார கோளாறு ஏற்பட்டு திடீரென ஏடிஎம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தாம்பரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், ஏடிஎம் மையம் முழுமையாக எரிந்து நாசமானது. அதில் சுமார் 8 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்ததாக கூறப்பட்டது. அது பாதுகாப்பாக உள்ளதா என்பது ஏடிஎம் பெட்டியை உடைத்து பார்த்தால்தான் தெரியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனியார் வங்கியின் உயர் அதிகாரிகள் மற்றும் சிட்லபாக்கம் போலீசார் முன்னிலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணப்பெட்டிகளை உடைத்து பார்த்தபோது அதில் 500 ரூபாய், 100 ரூபாய் என மொத்தம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் எந்த ஒரு சேதமும் ஏற்படாமல் பத்திரமாக இருந்தது தெரியவந்தது. மீட்கப்பட்ட பணத்தை சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
The post தனியார் ஏடிஎம் தீ விபத்து: ரூ.8.35 லட்சம் பணம் தப்பியது appeared first on Dinakaran.