குன்னூரில் பரபரப்பு 12 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பறிமுதல்; ஒருவர் கைது

குன்னூர் : குன்னூரில் 12 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ஒருவரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் வி.பி. தெரு பகுதியில் காய்கறி கடை நடத்தி வரும் ரவிசங்கர் என்பவர் தனது வீட்டில் வைத்து மறைமுகமான முறையில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக குன்னூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் காவல்துறை கண்காணிப்பாளர் ரவி தலைமையில் குன்னூர் நகர காவல் ஆய்வாளர் சதீஷ் முன்னிலையில் துணை காவல் ஆய்வாளர் மகேந்திரன், காவலர்கள் ரமேஷ், பாஷா, ஆனந்த், வினித், ரியாஸ் ஆகிய போலீசார் ரவிசங்கர் வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது 12 கிலோ மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குட்கா மற்றும் போதை பொருட்களை பறிமுதல் போலீசார், ரவிசங்கர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து குன்னூர் நகர காவல் ஆய்வாளர் சதீஷ் கூறுகையில், ‘‘காவல்துறையினரின் நடவடிக்கையால் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கடைகள் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விநியோகம் செய்யப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டு இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. காவல்துறையினரால் மட்டுமே போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க முடியாது.

ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து செயல்பட்டால் போதைப்பொருள் புழக்கத்தை அடியோடு ஒழிக்க முடியும். பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் ஒவ்வொரு வாரமும் அந்தப் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலைய துணை ஆய்வாளர் தலைமையில் சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

The post குன்னூரில் பரபரப்பு 12 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பறிமுதல்; ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: