புதுடெல்லி: தலைமை நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்த பா.ஜ எம்பி நிஷிகாந்த் துபே மீது வழக்கு தொடர அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம்’ என்று கூறிய பாஜ எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவையும் விமர்சனம் செய்திருந்தனர். அவர்களது கருத்து பாஜவின் கருத்து அல்ல என அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டா கூறியிருந்தார். இந்நிலையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்காக ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியின் அலுவலகத்தில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சிவகுமார் திரிபாதி, அனஸ் தன்வீர் ஆகியோர் ஒப்புதல் கேட்டு கடிதம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை விமர்சித்த பாஜ எம்பி நிஷிகாந்த் துபேக்கு எதிராக அவமதிப்பு மனு தாக்கல் செய்ய தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி ஆர் கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்கறிஞர், துபேயின் கருத்துகள் குறித்த சமீபத்திய செய்தி அறிக்கையை குறிப்பிட்டு, நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்ய விரும்புவதாகக் கூறினார். அதற்கு நீதிபதிகள்,’ நீங்கள் அதை தாக்கல் செய்யுங்கள். அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய, எங்கள் அனுமதி தேவையில்லை’ என்று நீதிபதி கவாய் கூறினார். மேலும் மனுதாரர் இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலிடம் அனுமதி பெற வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
நிஷிகாந்த் துபேக்கு குரேஷி பதிலடி
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்ஒய் குரேஷி கடந்த 17ம் தேதி தனது எக்ஸ் தள பதிவில், \\”வக்பு திருத்த சட்டம் சந்தேகத்துக்கு இடமின்றி இஸ்லாமியர்களின் நிலங்களை அபகரிக்கும் அரசின் அப்பட்டமான தீய திட்டம். இதனை உச்சநீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன்\\” என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்காக குரேஷியையும் விமர்சித்த பா.ஜ எம்பி நிஷிகாந்த் துபே,’நீங்கள் தேர்தல் ஆணையர் இல்லை. நீங்கள் ஒரு முஸ்லிம் ஆணையராக இருந்தீர்கள்’ என்று விமர்சித்து இருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எஸ்ஒய் குரேஷி,’ நான் தேர்தல் ஆணையர் என்ற அரசியலமைப்பு பதவியில் என்னால் முடிந்தவரை என் திறமைக்கேற்ப நான் சிறப்பாக பணியாற்றினேன். ஐஏஎஸ் அதிகாரியாக நீண்ட மற்றும் நிறைவாக பணியாற்றினே். ஒரு தனி நபர் தனது திறமை மற்றும் பங்களிப்புக்களால் வரையறுக்கப்படுகிறார். அவர்களின் மத அடையாளங்களால் இல்லை. ஆனால் சிலருக்கு மத அடையாளங்கள் தங்கள் வெறுப்பு அரசியலை முன்னெடுத்து செல்வதற்கு ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா அதன் அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகளுக்காக எப்போதும் எழுந்து நின்று போராடும்’ என்றார்.
The post தலைமை நீதிபதியை விமர்சனம் செய்த பா.ஜ எம்பிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.