தமிழகத்தில் 50 அரசு மருத்துவமனைகளில் ரூ.164.5 கோடியில் கூடுதல் கட்டிடங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு:
* கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு மதுரை, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர் உள்பட 21 மாவட்டங்களில் உள்ள 50 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.164.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
* முதன்முறையாக, கிராமங்களில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தேர்வு செய்து, அந்தப் பகுதியில் உள்ள தேவைப்படும் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் தனியார் / தன்னார்வலர்கள் பங்களிப்புடன் ஏற்படுத்தப்படும்.
* சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பிரிவுகளிலிருந்து விடுவிக்கப்படும் 50,000க்கும் மேற்பட்ட எடை குறைவான குழந்தைகளின் தொடர் கவனிப்பிற்காகவும் அவர்களது ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், இரும்புச்சத்து சொட்டு மருந்து, வைட்டமின் டி3 மற்றும் மல்டி வைட்டமின் சொட்டு மருந்துகள் ஆகியவை அடங்கிய “முதலமைச்சரின் சிசு பாதுகாப்புப் பெட்டகம்” ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
* தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை கீழ் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மருத்துவக் கல்லூரிகளில் பல்கலை ஆராய்ச்சி மையங்கள் ரூ.25 கோடியில் நிறுவப்படும்.
* விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவிற்கு 100 படுக்கைகள் கொண்ட கூடுதல் தளங்கள் ரூ.12 கோடியில் கட்டப்படும்.

* எச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000
தமிழ்நாட்டில் உள்ள 7,618 எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.1000 நிதி உதவி வழங்கப்படும்.

* வணிக வளாகங்களில் பெயர் பலகை தமிழில் வைக்காதவர்களுக்கான அபராதம் அதிகரிப்பு: அமைச்சர் சாமிநாதன் தகவல்
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திருச்சி கிழக்கு த.இனிகோ இருதயராஜ் (திமுக) பேசுகையில், ‘‘தமிழ்நாட்டிலுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் இருக்கிறது. இன்னும் பல வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர் பலகையில் ஆங்கிலத்தில் பெரியதாக பொறித்து, தமிழில் சிறியதாக பொறித்துள்ளனர். சிலர் பலகையை பெரியதாக வைப்பதில்லை. சிலர் பெயர் வைப்பதேயில்லை. ஒரு காலக்கெடு வழங்கப்பட்டு தமிழில் பெயர் வைக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், “தமிழில் முழுமையாக உள்ள பெயர்ப் பலகையை பொருத்தும் நிகழ்ச்சியும், பேரணியும், விழிப்புணர்ச்சி நிகழ்வும் நடைபெற்றிருக்கிறது. தொடர்ந்து அவர்களும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். படிப்படியாக, ஏனென்று சொன்னால், தமிழில் பெயர்ப் பலகை வைக்கவில்லை என்றால், ரூ.50 அபராதம் கட்ட வேண்டியிருந்தது. தற்போது, ரூ.2000 அந்த அபராத தொகை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும், சட்டத்தின் அடிப்படையில் என்பதைவிட, மனரீதியாக அவர்களிடத்தில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். படிப்படியாக அந்த மாற்றம் ஏற்படும். நிச்சயமாக, தமிழில் பெயர்ப்பலகை முறையாக வைக்கக்கூடிய நிகழ்வு தமிழ்நாட்டில் நிலவும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.

* திமுக ஆட்சி அமைந்த பிறகு ரூ.324 கோடியில் கட்டப்பட்டு வரும் 79 திருமண மண்டபங்கள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை, ஏப்.22: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மதுராந்தகம் கே.மரகதம் குமரவேல் (அதிமுக) பேசுகையில், “மதுராந்தகம் தொகுதியில் திருமலை வையாவூரில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற நரசிம்ம மன்னரால் கட்டப்பட்டது. கடந்த வருடம் குடமுழுக்கு நடந்தது. இந்த கோயிலுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. தென்திருப்பதி என்றும் அழைப்பார்கள். திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் கோயில்களில் நடைபெறுவதால் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அப்பகுதியில் திருமண மண்டபம் அமைப்பதற்கு அமைச்சர் முன்வருவாரா” என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், “தமிழக முதல்வர் தலைமையில் இந்த ஆட்சி அமைந்த பிறகு சட்டமன்ற அறிவிப்பின்படி 324 கோடி ரூபாய் செலவில் 79 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, இன்னார் இனியவர் என்ற பாகுபாடு இல்லாமல் திருமண மண்டபங்கள் மற்றும் இதர மண்டபங்கள் 26 மண்டபங்கள் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளன. உறுப்பினர் கோரிய அந்த கோயிலை உடனடியாக ஆய்வு செய்து எவ்வளவு திருமணங்கள் நடக்கிறது என்பதை கணக்கிட்டு பெரிய அளவில் இல்லை என்றாலும் உறுப்பினர் வைத்த கோரிக்கை நிறைவேற்றுகின்ற வகையில் ஒரு திருமண மண்டபம் கட்டுவதற்கு இந்த ஆண்டு பணிகள் தொடங்கப்படும்” என்றார்.

* முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் ரூ.10 லட்சமாக காப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கை
காரைக்குடி மாங்குடி (காங்கிரஸ்) பேசியதாவது: மழை பொய்த்த காலங்களில் நன்செய் நிலங்களில் நெல் விவசாயம் செய்வதற்கு, கிராமத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் பொதுவான ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும். ஏனென்றால், எனது தொகுதியில் நெல் விவசாயம் மட்டும் தான் உள்ளது. கிராமத்திற்கு ஓர் ஆழ்குழாய் கிணறு ஏற்படுத்தி கொடுத்தால் நெல் விவசாயம் செய்து, சாப்பாட்டிற்கு மட்டுமாவது மழை பொய்த்த காலங்களில் அதைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

எனது தொகுதியில் இலவச மின்சார இணைப்பிற்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக விண்ணப்பித்து காத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இலவச மின்சார இணைப்பை வழங்குவதற்கு இந்த ஆண்டு அதற்கான அறிவிப்பை வழங்க கேட்டுக் கொள்கிறேன். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காட்பீட்டுத் திட்டம் ஒரு சிறந்த திட்டம். இந்தத் திட்டத்தில், ரூ.5 லட்சம் என்பதை ரூ.10 லட்சமாக கிடைக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தரப்பட வேண்டும்.
அதேபோன்று, அனைத்து மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையம் வரையிலும் டயாலிசிஸ் மருத்துவம் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். மார்பக புற்றுநோய் பெண்களுக்கு நிறைய பேருக்கு வருகிறது. ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருகிறது. இந்நோய்க்காக மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்து, அந்த பரிசோதனைகளை இலவசமாக கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.

The post தமிழகத்தில் 50 அரசு மருத்துவமனைகளில் ரூ.164.5 கோடியில் கூடுதல் கட்டிடங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: