காலை 11.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆருத்ரா விளையாடிக் கொண்டிருந்தார். அதன்பிறகு சிறுமியை திடீரென காணவில்லை. எனவே ஆசிரியைகள் பள்ளி வளாகம் முழுவதும் தேடிப் பார்த்தனர். அப்போது பள்ளியின் பின்புறம், திறந்த நிலையில் உள்ள 12 அடி ஆழ குடிநீர் தொட்டியில் சிறுமி தத்தளித்த படி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியைகள் அவரை மீட்க முயன்றனர். அவர்களால் உள்ளே இறங்க முடியாததால் அருகில் உள்ளவர்களை காப்பாற்றுமாறு உதவிக்கு அழைத்தனர்.
அப்போது அவ்வழியாக சென்ற மருந்து விற்பனையாளர்கள் 3 பேர் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பள்ளிக்கு வந்த கோட்டாட்சியர் ஷாலினி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், அண்ணாநகர் போலீசார் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். விபத்து நடைபெற்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், சிறுமி விளையாடியபோது எதிர்பாராதவிதமாக திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்திருப்பது தெரியவந்தது. குழந்தைகள் நடமாடும் இடத்தில் உள்ள ஆழமான தண்ணீர் தொட்டியை மூடாமல் அலட்சியமாக இருந்ததாக பள்ளியின் தாளாளர் திவ்யா, உதவியாளர் வைரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களான மேனகா, ஐஸ்வர்யா, ஜெயப்பிரியா, சத்யபவானி, சித்ரா, சரிதா ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* அதிர்ச்சியில் மயங்கிய தாய்
சிறுமி உயிரிழந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த தாயார் சிவஆனந்தி, அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமியின் தந்தை அமுதன் கூறுகையில், ‘‘ஆசையாக வளர்த்த எனது மகள் உயிரிழந்து விட்டாள். இப்படி நடக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை. மிகுந்த கவலையாக உள்ளது. என்ன செய்வது என்றே தெரியாத மனநிலையில் உள்ளோம்’’ என்றார்.
* ‘கோடை பயற்சி வகுப்பு நடத்தினால் நடவடிக்கை’
மதுரை கலெக்டர் சங்கீதா வௌியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை நாட்களில் பள்ளிகள் கண்டிப்பாக செயல்படக் கூடாது. கோடைகால பயிற்சிகள் வகுப்புகள், சிறப்பு வகுப்புகள், மாலைநேர வகுப்புகள் உள்ளிட்ட எவ்வித நிகழ்வுகளின் பெயரிலும் பள்ளிக்குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. நிபந்தனைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என எச்சரித்துள்ளார்.
* பள்ளிக்கு அதிரடி சீல்
சிறுமி உயிரிழந்த பள்ளியில் போலீஸ் துணை கமிஷனர் அனிதா, வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகா ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், ‘‘பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால் சிறுமி உயிரிழந்துள்ளார். எனவே பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் 120 மழலையர் பள்ளிகளில் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.
* இன்ஸ்டா பிரபலம் பள்ளி தாளாளர்…
பள்ளியின் தாளாளர் மதுரை கே.கே நகர் விநாயகா நகர் பகுதியை சேர்ந்த திவ்யா (55). இவர், சின்ன சொக்கிகுளம் மற்றும் கே.கே நகர் பகுதிகளில் ஸ்ரீகிண்டர் கார்டன் என்ற மழலையர் பள்ளிகளை நடத்தி வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குழந்தைகள் வளர்ப்பு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு குறித்து தொடர்ந்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்துள்ளார்.
இவரது பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைத்தால் நல்ல திறமையுடன் சிறப்பாக படிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பலரும் தங்களது பிள்ளைகளை சேர்த்துள்ளனர். தற்போது பள்ளி வகுப்பு முடிந்து, கோடைகால சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதிலும் பல பெற்றோர் குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
The post மதுரை தனியார் பள்ளியில் நடந்த கோடை பயிற்சி முகாமில் சோகம் குடிநீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி பலி: பெண் தாளாளர் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.