சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர் 13வது பிளாக்கை சேர்ந்தவர் ராஜ் என்கின்ற தொண்டை ராஜ் (40). இவர் ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி தீபா (38). இவர்களுக்கு கீர்த்திகா (10), தன்ஷிகா (3) என்ற மகள்கள் உள்ளனர். வியாசர்பாடி பகுதியில் ரவி என்பவரை கொலை செய்த வழக்கு, ஆந்திர எல்லையில் பப்லு என்பவரை கொலை செய்தது மற்றும் வியாசர்பாடி பகுதியில் ராஜ் என்பவரை கொலை செய்தது உள்பட 3 கொலை வழக்குகள் உள்ளது. இதன்காரணமாக தொண்டைராஜிக்கு வியாசர்பாடியில் கடும் அச்சுறுத்தல் இருந்ததால் சில மாதங்களுக்கு சின்னசேக்காடு பகுதியில் குடும்பத்துடன் குடியேறினார்.
நேற்று ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு உறவினர்களை பார்க்கவும் வியாசர்பாடி பகுதியில் சீட்டு பணம் கட்டுவதற்காகவும் சுமார் 3 மணி அளவில், மனைவி, மகள் தன்சிகாவுடன் ஆட்டோவில் வந்துள்ளார். உதயசூரியன் நகர் பகுதியில் ஆட்டோ வரும்போது 2 பைக்குகளில் வந்த 4 பேர், ஆட்டோவை மடக்கி தொண்டை ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். உயிருக்கு போராடிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார், வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விசாரித்தனர். 2020ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ராஜ் என்பவர் வெட்டிக்கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்க அவரது மகன் சூர்யா, நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து சூர்யா, அவரது நண்பர்கள் ஜே.ஜேஆர் நகர் பகுதியை சேர்ந்த ராம் (25), வியாசர்பாடி பகுதியை சேர்ந்த அஜித் என்கின்ற சப்ப மூக்கு (25), முருகன் (28) ஆகியோரை கைது செய்தனர். முன்னதாக இவர்கள் தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில் கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மேலும் கொலை தொடர்பாக வியாசர்பாடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26), அஜய்குமார் (26), அஜித் என்கின்ற பல்வலி அஜித் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
நேற்று சூர்யா, நண்பர்களுடன் மாத்தூரில் கிரிக்கெட் விளையாடிவிட்டு எம்கேபி.நகர் பகுதியில் வரும்போது தொண்டை ராஜ், மனைவியுடன் வருவதை கண்டு அவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்து விடலாம் என்று நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் பேட்டால் அடித்தால் சாகமாட்டார் என்று சூர்யா தனது வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்துவந்து வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோட்டில் வைத்து தொண்டைராஜை சரமாரியாக வெட்டி கொன்றுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து முதலில் கைது செய்யப்பட்ட சூர்யா, ராம், அஜித், முருகன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுசம்பந்தமாக மணிகண்டன், அஜய்குமார், பல்வலி அஜித் ஆகியோரிடம் விசாரணை நடத்துகின்றனர்.
சட்டையை மாற்றி காப்பாற்ற முயற்சி
தொண்டைராஜ் கொலையின்போது உடனிருந்த ராமுக்கு கடந்த 3 வாரத்துக்கு முன்தான் திருமணம் நடந்துள்ளது. இதனால் அவர் குடும்பம் நடத்துவதற்கு வசதியாகவும் குடும்பத்தில் பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் கொலையில் இருந்து தப்பிக்கவைக்கவும் ராம் அணிந்திருந்த சட்டையை வாங்கி அஜய் அணிந்துள்ளார்.
The post தந்தையை வெட்டி கொன்றதால் தீராத வெறி; 5 ஆண்டுக்கு பிறகு ரவுடியை கொன்ற மகன் appeared first on Dinakaran.