சேலம் சிறையில் இருந்து பரோலில் வந்து காதல் மனைவியை கொன்று தற்கொலை செய்த கைதி: நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்

தர்மபுரி: சிறையில் இருந்து பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி, நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதல் மனைவியை கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மதிகோண்பாளையம் அடுத்த குண்டலப்பட்டியில் உள்ள தங்கும் விடுதியில், நேற்று முன்தினம் காலை, மதிகோண்பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார்(32) தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி மகாலட்சுமி(28), கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையிலும் சடலமாக கிடந்தனர்.

தகவல் அறிந்த மதிகோண்பாளையம் போலீசார், 2 பேரின் சடலத்தையும் மீட்டு, வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. காதல் திருமணம் செய்து கொண்ட ரமேஷ்குமார், மகாலட்சுமிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2019ல் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரமேஷ்குமார், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, ரமேஷ்குமாரின் பெற்றோர், பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டி வருவதால், வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நடத்தவும், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவரது தாய் சாந்தியை நேரில் பார்க்கவும், சேலம் மத்திய சிறையில் இருந்து கடந்த 23ம் தேதி ரமேஷ்குமார் பரோலில் வந்துள்ளார். 5 வருடங்களுக்கு பிறகு பரோலில் வந்த ரமேஷ்குமார், மனைவி மகாலட்சுமியுடன் குண்டலப்பட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

ரமேஷ்குமார் சிறையில் இருந்தபோது, மகாலட்சுமி அடிக்கடி செல்போனில் வேறு ஒருவருடன் பேசுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு, ரமேஷ்குமார் மகாலட்சுமியிடம் கேட்டுள்ளார். அப்போது, அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ்குமார், மறைத்து வைத்திருந்து கத்தியால் மகாலட்சுமி நெஞ்சில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் விழுந்த அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து ரமேஷ்குமாரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post சேலம் சிறையில் இருந்து பரோலில் வந்து காதல் மனைவியை கொன்று தற்கொலை செய்த கைதி: நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம் appeared first on Dinakaran.

Related Stories: