பெரம்பூர்: சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் நித்தின்ராஜா ராம் பாபர் (38). இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். 1வது மாடியிலும் கடையில் வேலை செய்யும் வட மாநில நபர்கள் 6 பேர் வசித்து வருகின்றனர். நேற்றிரவு 10 மணி அளவில், கடையில் உள்ள பொருட்களை சரிபார்த்த போது 2 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள் குறைந்துள்ளது. இதுபற்றி விசாரித்தபோது ஊழியர் கணேசன் என்பவர் 2 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்துக்கொண்டு கடையில் இருந்து சென்றபோது மற்றொரு ஊழியர் பார்த்து கேட்டுள்ளார். அப்போது அவரை கொலை செய்துவிடுவேன் என்று கூறிவிட்டு கணேசன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஊழியர் செல்போனில் தனது முதலாளிக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் வந்து பார்ப்பதற்குள் கணேசன் தனது உடமைகள், 2 கிலோ வெள்ளி பொருட்களுடன் மாயமானது தெரிந்தது. இது குறித்து கொடுத்துள்ள புகாரின்படி, செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து நகைக்கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து 2 கிலோ வெள்ளி பொருட்களுடன் மாயமான கணேசனை தேடி வருகின்றனர்.
The post 2 கிலோ வெள்ளி பொருட்களுடன் நகைக்கடை ஊழியர் தப்பியோட்டம் appeared first on Dinakaran.