திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே கல்லால் அடித்து செவிலியர் கொலை: கணவன் கைது

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே செவிலியரை கல்லால் அடித்துக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் நேற்று காலை இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து தெற்கு போலீசார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளம்பெண் செவிலியர் உடை அணிந்திருந்ததால் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்டது மதுரையை சேர்ந்த சித்ரா (28) என்பதும், பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

அவர் சில ஆண்டுக்கு முன்பு மதுரையை சேர்ந்த ராஜேஷ் கண்ணா (36) என்பவரை காதலித்து திருமணம் செய்து வாடிப்பட்டியில் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த மாதம் கணவன், மனைவி இடையே தகராறு காரணமாக சித்ரா, குழந்தைகள் மற்றும் தாயுடன் திருப்பூருக்கு வந்து பல்லடம் ரோடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் திருப்பூருக்கு வந்த ராஜேஷ் கண்ணா, மருத்துவமனையில் இருந்து மனைவியை அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சித்ராவை கல்லால் கொடூரமாக தாக்கி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மதுரை அலங்காநல்லூரில் பதுங்கி இருந்த ராஜேஷ் கண்ணாவை போலீசார் கைது செய்தனர்.

 

The post திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே கல்லால் அடித்து செவிலியர் கொலை: கணவன் கைது appeared first on Dinakaran.

Related Stories: