வேலாயுதம்பாளையம், ஏப். 12: கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன் புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அம்பேத்காரின் பிறந்த நாளான சமத்துவ நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன் தலைமை வகித்தார். செயலாளர் வழக்கறிஞர் கண்ணன் முன்னிலை வகித்தனர். முன்னதாக கல்லூரி துணை முதல்வர் ரதிதேவி வரவேற்றார். நிகழ்ச்சியில் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும்,
வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ,நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டோன் சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமாற உறுதி அளிக்கின்றேன் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரியின் உள்தர கட்டுப்பாட்டு அலுவலர் மோகனவடிவு, பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
The post வேலாயுதம்பாளையம் அருகே சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.