க.பரமத்தி, ஏப். 12: வெயிலின் தாக்கத்தில் இருந்து மாடுகளை காக்க கால்நடை மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஒன்றியத்தில் வெயில் தாக்கத்தில் இருந்து மாடுகளை பாதுகாக்க கால்நடைத்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள அணைப்பாளையம், அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு, கார்வழி, காருடையம்பாளையம், கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புஞ்சைகாளகுறிச்சி, நடந்தை, நெடுங்கூர், க.பரமத்தி, பவித்திரம், நஞ்சைகாளகுறிச்சி, புன்னம், இராஜபுரம், சூடாமணி, தென்னிலை கிழக்கு, தென்னிலை மேற்கு, தென்னிலை தெற்கு, தொக்குப்பட்டி, துக்காச்சி, தும்பிவாடி, விஸ்வநாதபுரி, ஆகிய 30-ஊராட்சிகள் உள்ளன. இதில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஏராளமான கறவை மாடுகள், காளை மாடுகள் வளர்க்கப்படுகின்றன.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் கால்நடைகள் பாதிப்படைவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கால்நடைத்துறையினர் கூறியதாவது: வெயிலால் மாடுகளுக்கு ஏற்படும் சூட்டை தணிக்க தினமும் இரண்டு முறை குளிப்பாட்ட வேண்டும். தீவனத்துடன் சோற்றுக்கற்றாழை அதிகம் தரலாம். மாடுகளை நிழலில் கட்டிவைக்கவேண்டும். மாட்டுக்கொட்டிலில் குளிர்ச்சியான சூழலுக்கு சணல் சாக்குகளை நீரில் நனைத்து தொங்கவிடலாம். மாடுகள் குடிப்பதற்கு அதிகப்படியான நீர் தரவேண்டும். காணை நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றனர்.
The post க.பரமத்தி ஒன்றியத்தில் கடும் வெயில் தாக்கத்திலிருந்து மாடுகளை பாதுகாக்க வேண்டும் appeared first on Dinakaran.