ஊரக வளர்ச்சி முகமை திட்ட பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

கரூர், ஏப். 10: ஊரக வளர்ச்சி முகமையின் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்ட பிரிவில் சுகாதாரம், திட, திரவக் கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் தகவல், கல்வி, தொடர்பு பணிகளுக்கு புறச்சேவை நிறுவனம் மூலம் ஒப்பந்த முறையில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்ட பிரிவில் பல்வேறு பிரிவுகளில் ஊரக பகுதிகளின் சுகாதாரம், திட, திரவக் கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் தகவல், கல்வி, தொடர்பு பணிகளுக்கு புறச்சேவை நிறுவனம் மூலம் ஒப்பந்த முறையில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

திட்டமிடுதல், ஒன்றிணைத்தல் மற்றும் கண்காணித்தல், கல்வித்தகுதி இளங்கலை தொழில்நுட்பம் (பிடெக், முதுகலை வணிக நிர்வாகம் எம்பிஏ, முதுகலை அறிவியல் எம்எஸ்சி. அல்லது இந்தியாவில் ஒன்றிய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் இணைக்கப்பட்ட பல்கலை கழகங்கள் அல்லது பாராளுமன்றத்தின் சட்டத்தால் நிறுவப்பட்ட பிற கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக் கழக மானிய சட்டம், 1956ன் பிரிவு 3ன் கீழ் ஒரு பல்கலைக் கழகமாக கருதப்படுவதாக அறிவிக்கப்பட்ட அல்லது அதற்கு சமமான தகுதி. சம்பளம் ரூ. 35 ஆயிரம். புறச் சேவை நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்படும்.

தகவல், கல்வி மற்றும் தொடர்பு குழுவுக்கான பணி அனுபவம் மற்றும் இதர முன்னுரிமை விபரம், 2 முதல் 3 ஆண்டுகள் வரை மக்கள் தொடர்பு, சமூக அணி திரட்டல், பொதுத் துறை தொடர்பு மற்றும் அரசு அல்லது தனியார் துறையில் சமூக ஊடக பிரிவுகளில் பணிபுரிந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், உள்ளுர் கலைஞர்கள், சமூக ஊடக செல்வாக்கு பெற்றவர்கள் மற்றும் பலதரப்பு பங்களிப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு, அதிக தேவையுள்ள சூழலில் பணிபுரியும் திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கணினியில் எம்எஸ் வோர்டு, பவர் பாய்ண்ட், அடாப் போட்டோ ஷாப் போன்றவற்றில் அதிக பரிச்சயமும், இவற்றை கையாளுவதில் திறமையும், வீடியோ தயாரிப்பு, மீம்ஸ் தயாரித்தல், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை உருவாக்குதல் போன்றவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன் மாதிரியாக எழுதும் திறன் வேண்டும். நேரடி தகவல் தொடர்பு திறன் மற்றும் தமிழ் பாப் கலாச்சாரம் பற்றிய நல்ல புரிதல் அவசியம் பெற்றிருக்க வேண்டும்.

உயர்தர பணி அனுபவத்துடன் வெளியிடப்பட்ட படைப்பு இருக்கும்பட்சத்தில் முறையான கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் வயது ஆகியவற்றில் தளர்வு மாவட்ட கலெக்டரால் அனுமதிக்கப்படும். விண்ணப்பங்கள் ஏப்ரல் 15ம்தேதிக்குள், கரூர் மாவட்ட மகமை கிராம சேவை மைய கட்டிடம், காவல் நிலையம் அருகில, காசா காலனி, மாயனூர், கரூர் மாவட்டம். என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஊரக வளர்ச்சி முகமை திட்ட பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: