பெரம்பூர், ஏப்.11: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில் 50வது நாளாக அகரம் செங்கல்வராயன் தெரு, ஜி.கே.எம் காலனி முத்துக்குமரப்பா தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் காலை உணவு வழங்கினர்.
பின்னர் அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் பிறந்த நாளையொட்டி அமைச்சர் சேகர்பாபு, அன்னம் தரும் அமுதக்கரங்கள் என்ற பெயரில் ஒரு நாளைக்கு 1000 நபர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார். நமது முதல்வர் முன்மாதிரியாக செயல்பட்டு மாநிலத்துக்காக போராடி வெற்றி பெற்றதை தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவே பாராட்டு தெரிவித்து வருகிறது.
விஜய் எத்தனையோ ஆண்டுகளாக நடித்து கொண்டிருக்கிறார்.
ஒரு நல்ல நடிகர் எந்த குறையும் சொல்ல மாட்டோம். சினிமா வேறு, அரசியல் வேறு. இதுவரை அவர் பொதுமக்களுக்காக என்ன செய்துள்ளார், என நீங்களே சொல்லுங்க. அதன் பிறகு அவர் கூறுவதற்கு நான் பதில் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கொளத்தூர் பகுதி செயலாளர் நாகராஜன் மண்டல குழு தலைவர் சரிதா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post அரசியல் வேறு, சினிமா வேறு பொதுமக்களுக்காக இதுவரை நடிகர் விஜய் என்ன செய்தார்: அமைச்சர் காந்தி கேள்வி appeared first on Dinakaran.