பகுதி 2
இந்த நீண்ட பட்டியலையும் தாண்டி இறுதியில் இறைவன் இரணியனின் மரணத்தை நிகழ்த்திவிட்டான். இரவோ, பகலோ இல்லாத அந்தி வேளையில் இல்லமோ, வெளியிடமோ அல்லாத வாயிலில் நின்றுகொண்டு, நிலமோ வானமோ இல்லாது தன் தொடையில் வைத்துக்கொண்டு உயிர் உள்ளதோ இல்லையோ என்று எண்ணும்படியான நகங்களால் இரணியன் மார்பினை மனிதனோ விலங்கோ அல்லாத, சிங்கம் தலையாகவும் மனித உடலும் கொண்டு நரசிம்ம மூர்த்தியாகத் தோன்றி இரணியனைக் கிழித்து வதம் செய்தார். மூன்று கண்கொண்ட சிவன், எட்டு கண் கொண்ட பிரம்மன், இந்திரன், தேவர்கள், முனிவர்கள் முதலானோர் தேடிக் காணமுடியாத உருவினை அங்கு கண்டனர்.
விபீஷணனின் பேச்சு இராவணனின் சிந்தையை எட்டவில்லை. பதில் கூறுவதற்காக அவன் பேச்சை கேட்டது போல் இருந்தது. ராவணன் இடைமறித்து, “போதும் உன் உபன்யாசம். பெற்று வளர்த்த தந்தையின் உடலை தன் கண்ணீரிலேயே பிளந்திட அது கண்டு மகிழ்ந்த பிரகலாதன் உனக்கு முன்மாதிரியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஒவ்வொரு குலத்திலும் பிரகலாதன்கள் பிறந்துதான் தொலைக்கிறார்கள். நம் குலத்திற்கு நீதான் பிரகலாதன்.’’
“என்னை பிரகலாதனுடன் ஒப்பிடுவது எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் என் உயரம் எனக்குத் தெரியும். நான் பிரகலாதானாக ஆக முடியாது. ஏனெனில் பிரகலாதன் கருவிலேயே திருவுடையவன். வேதத்தைவிட தூயவன். என்னுடைய கவலை எல்லாம், நான் பிரகலாதனாவது ஒருபுறம் இருக்கட்டும், இரணியனின் முடிவு உனக்கு வந்திடக் கூடாதே என்பதுதான்.’’“பிரகலாதன் என்ன செய்தான்? அவன் தந்தையின் முடிவுக்குப் பின் அவன் முடி சூட்டிக்கொண்டான். உன் திட்டமும் அதுபோலத்தானே? என் மரணத்திற்குப் பின் நீ முடிசூட்டிக்கொள்வதுதானே உன் சூழ்ச்சி!’’
“நமக்கு நல்லூழ் வரும் காலத்தில் நல்லறிவு தோன்றும். நல்லவர்களின் சேர்க்கை வரும். தீயூழ் ஏற்படவிருக்கும் தருணத்திலோ இருக்கின்ற அறிவும் போய் நம்மை பேதையாக்கும். அதுதான் உன் விஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இராமன் உனக்கு…..’’“போதும். நிறுத்து! அந்த மானிடனின் பெயரை மீண்டும் மீண்டும் சொல்லி என்னைச் சினம்கொள்ளச் செய்யாதே!’’
“அண்ணா! கொஞ்சம் என் பேச்சை செவிமடுங்கள். இரணியனை அழித்த பரம்பொருளும் இன்று மனித உருவில் வந்திருக்கும் ராமனும் வேறல்ல. உங்களின் நலன் அல்லாது வேறு எதையும் நான் நினைக்கவில்லை. இது சத்தியம். இலங்கையில் அப சகுனங்கள் தென்படுகின்றன. ஹோமங்கள் செய்யும் பொழுது எரியும் அக்னி எரிய வேண்டிய முறையில் எரியவில்லை. காக்கைகள் நகரத்தின் உயரமான இடங்களின் மேல் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து விபரீதமாகக் கத்துகின்றன. கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. நரிகள் ஊருக்குள் புகுந்து ஊளை இடுகின்றன. காட்டு மிருகங்கள் நகரத்திற்குள் நடமாடுகின்றன. பெரிய தீங்கு நமக்கு வரவிருப்பதையே குறிக்கின்றன. இதை நாம் அலட்சியம் செய்யக்கூடாது. சீதையைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். போரை விடுத்து ராமனிடம் சமாதானம் செய்து கொள்ளுங்கள்.
உங்களை மன்றாடிக் கேட்கிறேன்.’’“இனப்பற்று இல்லாத துரோகி நீ! தப்பிப் பிறந்துவிட்டாய். இனி தப்பிச் சென்றால்தான் நீ பிழைப்பாய். நெருங்கிய உறவுகளில் ஏதோ ஒருவன் முதுகில் குத்தத்தான் செய்வான். நீயும் அதற்கு விதிவிலக்கல்ல. என் உடன் பிறந்தவன் என்கின்ற ஒரே காரணத்திற்காக, உன்னை எதுவும் செய்யாமல் உயிரோடு விட்டுவிடுகிறேன். ஒழிந்து போ.’’விபீஷணனுக்கு தூக்கம் பொங்கியது. கண்ணீர் மல்கியது. இரு கரங்களையும் குவித்தான். ராவணனை வணங்கினான். அவையில் இருந்து வெளியேறினான். அவையில் நிசப்தம் நிலவியது. அவன் பேசியதில் இருந்த நியாயத்தையும் தர்மத்தையும் உணர்ந்த அனலன், அணிலன், சம்பாஹி, ஹரன் என்னும் நான்கு அமைச்சர்களும் அவனுடன் வெளியேறினார்கள். அவர்கள் விபீஷணனிடம் ஏதோ சொல்ல முற்பட்டார்கள்.
“என் உணர்வினை புரிந்து கொண்டு நீங்கள் நால்வரும் என்னுடன் வந்தது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. சிறிது நேரம் நாம் எதுவும் பேசாமல் திருக்கோணேஸ் வரர் ஆலயம் வரையில் நடந்து செல்வோம். நடந்து செல்கின்ற பொழுது நம் எண்ணங்களை வகைப்படுத்திக் கொள்வோம். சிவன் சந்நதியில் பேசிக் கொள்ளலாம்.” நால்வரும் தலையசைத்தார்கள். அமைதியாக ஐவரும் கோயிலை நோக்கி நடந்தார்கள். திருக்கோணேஸ்வரரை மனமுருகி ஐவரும் பிரார்த்தித்தார்கள். சந்நதி வாசலில் உள்ள படிக்கட்டுகளில் விபீஷணரைச் சுற்றி நால்வரும் அமர்ந்து கொண்டார்கள்.
“நன்றி. இந்தச் சிவன் நம்மை வழி நடத்துவான். அறத்தின் பக்கம் நாம் இருக்க சிவன் துணை ஒன்று போதும். உங்கள் ஒவ்வொருவர் மனதிலும் நிறைய கேள்விகள் எழலாம். என்னால் அவற்றை ஊகிக்க முடிகிறது. என் மனதில் உள்ளவற்றை இந்தச் சிவனிடமும் உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.”“இராவணன் என்னை இகழ்ந்து பேசி வெளியேறச் சொன்ன போதிலும் என்னால் அவனை வெறுக்க முடியவில்லை. அவன் என் அண்ணன் என்பதால் மட்டும் அல்ல. ஆள்பவன் ஆண்டவனுக்குச் சமம். நான் என்றுமே அவனிடத்தில் மரியாதை கொண்டிருக்கிறேன். திருத்த முயன்றேன். முடியவில்லை. பொறுத்துக்கொண்டு அவனுடன் இருக்க என் மனம் ஒப்பவில்லை.
அறத்தின் முன்னால் அண்ணனோ, ஆள்பவனோ எனக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.அறமற்ற செயலுக்காக அவன் பின்னால் உள்ள கூட்டத்தில் ஒருவனாக இருக்க எனக்குச் சம்மதம் இல்லை. அறத்தை, சத்தியத்தை நம்புகின்ற நீங்கள் நால்வரும் எனக்கு பலமே. இனி இராவணனைப் பற்றிப் பேசிப் பயனில்லை. அவன் முடிவு விதியின் கையில். இராவணனைப் பற்றி குறை கூறுவதை முற்றிலும் தவிர்ப்போம். நானாக அவனிடமிருந்து விலகவில்லை. அவன் விதி என்னை அவனிடமிருந்து விரட்டி விட வைத்தது.
இந்த நாட்டை நான் ஆள வேண்டும் என்பதற்காக சூழ்ச்சி செய்வதாக பலர் நினைக்கலாம். ஒரு நல்ல முடிவை தேர்ந்தெடுத்து நகரும்போது எல்லோரும் அந்த எண்ணத்தைப் புரிந்துகொண்டு ஆதரிப்பார்கள் என்று நினைக்க முடியுமா? குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். தேவையற்ற பழிச்சொல் கேட்கத்தான் வேண்டியிருக்கும். அந்த வலியைத் தாங்கித்தான் ஆக வேண்டும்.ஒரு நல்ல மாற்றத்திற்காக, வலிகளை மாற்றிக் கொள்ளும் சூத்திரம் பொறுமையிலும் சகிப்புத்தன்மையிலும் தான் இருக்கிறது. செஞ்சோற்றுக் கடனுக்காக கும்பகர்ணன், இராவணனின் அறமற்ற செயல்களுக்கு துணை நிற்கிறான். இது அவன் கடைப்பிடிக்கும் நீதி. பிரம்மனிடம் நான் வாங்கிய வரமே என்றும் அறத்தின் பக்கம் இருக்க வேண்டும் என்பதுதான்.
இராவணனுக்கு எதிராக செயல்படாமல் இருப்பதுகூட ஒரு நிலைப்பாடுதான். அறமற்ற செயல்களுக்கு எதிர்வினை ஆற்றாமல் வாளா இருப்பதும் மாபெரும் அறமற்ற செயலாகும். இராவணன் செய்கின்ற கொடுஞ்செயலுக்கும் மேலானது அது. இராவணனுக்கு எதிராக நாம் இருக்கையில் நிச்சயம் அவனின் கோபத்திற்கு ஆளாவோம். நமக்குப் பல இன்னல்கள் வரும். வரட்டும். தாங்குவோம். அவன் பக்கம் நின்று உயிர் வாழ்வதைவிட இராமனின் பக்கம் சேர்ந்து மரணிப்பதை ஏற்போம். ராமனிடம் சரணாகதி அடைவதுதான் என் உறுதியான முடிவு. இறுதியானதும்கூட என் முன்னோர்கள் செய்த தவத்தின் பயனாக ராமன் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்.”நால்வரும் ஒருமித்த குரலில், “ஆஹா! ஆஹா! அற்புதம். இந்த முடிவுதான் உங்களுக்கு, எங்களுக்கு, இந்த நாட்டிற்கு உன்னதமான நிலையை அளிக்கும். நீங்கள் காத்துவருகின்ற அறம், ராமன் உங்களை ஏற்றுக் கொள்ளச் செய்யும். எங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.’’
“மகிழ்ச்சி. ராமனுடன் இணைவதாக நான் குறிப்பிடவில்லை. ராமனிடம் சரணாகதி அடைவதாகத்தான் குறிப்பிட்டேன். சரணாகதி என்றால் அடைக்கலம் என்பதுதான் பொருள். நம்மில் உள்ள உயர்ந்த பொருளை நம்மால் காப்பாற்ற இயலாமல் போகையில் தகுதியான ஒருவரிடம் ஒப்படைத்து காப்பாற்றித் தருமாறு இறைஞ்சி நிற்றல். நம்மிடம் உள்ள உயர்ந்த பொருள் நம் ஆத்மாதான். அதைவிட பெரியது எது? உயரியது எது? ஒவ்வொருவரின் குறிக்கோளும் அவனது உண்மையான சுயத்தை உணர்ந்து இறுதியில் மூலத்துடன் இணைவதுதான்.
சரணாகதி என்பது ஒரு மாபெரும் உணர்தல். சுய மதிப்பீடு, சுய நம்பிக்கை, சுய பெருமிதம் இவை எல்லாம் அற்றுப் போகும்போதுதான் சரணாகதி அடைய முடியும். சரணாகதி அடைவது என்பது இராவணன் பக்கத்திலிருந்து ராமன் பக்கத்துக்குச் செல்வது போன்ற எளிய செயல் அல்ல. ராமனை சரணாகதி அடைந்துவிட்டால், அவனுக்கு அனுகூலமானவற்றை மட்டுமே செய்ய வேண்டும். அவனுக்கு விரோதமானவற்றை எந்தச் சூழலிலும் செய்யாதிருத்தல் வேண்டும். ராமன் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.
என்னைக் காத்துக்கொள்ளும் ஆற்றல் என்னிடம் இல்லை. ராமனிடம் மட்டுமே உள்ளது என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும். என்னை இரட்சிக்கக் கூடியவன் ராமன் மட்டுமே என்று உளமார பிரார்த்திக்க வேண்டும். விருப்பு, வெறுப்பு இல்லாதிருத்தல் வேண்டும். ராமனே நம்மை கைவிட்டாலும், நாம் ராமனைக் கைவிடக்கூடாது என்ற சங்கல்பம் வேண்டும்.”“ராமனுடன், இலக்குவன், அனுமன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான் மற்றும் வானரக்கூட்டம் என ஒரு பெரிய சத்சங்கமே அங்கு இருக்கிறது.
நல்லவர்களின் சகவாசத்தின் மூலம் பற்றற்ற தன்மை உண்டாகிறது. பற்றற்று இருப்பதன் மூலம் மாயையில் இருந்து விடுதலை உண்டாகிறது. நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் விடை அந்த சத்சங்கம் தரும். அற்புதமான ஒருவருடன் நாம் இருக்கும் போது நாமும் அற்புதம் ஆவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது.” விபீஷணன் பேசி முடித்ததும், நால்வரும் ஒருமித்த குரலில் “நல்ல முடிவு. இப்பொழுதே செய்து முடிப்போம். கிளம்புங்கள்” எனக் கூறினார்கள். விபீஷணனும் நால்வரும் ஆகாய மார்க்கமாகப் பறந்து கடலைக் கடந்து தமிழ் மண்ணிலே காலடி வைத்தார்கள்.
ராமனை சரணடைய வந்திருப்பதாக வானரத் தலைவன் மயிந்தனிடம் கூறி ராமனிடம் தெரிவிக்க வேண்டினார்கள். செய்தி அறிந்ததும் ராமன் ஒரு ஆலோசனைக் கூட்டம் நிகழ்த்தினான். ஜாம்பவான், விபீஷணனைச் சேர்த்துக் கொள்வதில் விருப்பமின்றி இருந்தான். சுக்ரீவன் விபீஷணனுக்கு எதிராக வாதிட்டான் அனுமன் மட்டுமே விபீஷணனின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துரைத்தான். ராமன் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டான்.
“உங்கள் எல்லோருடைய கருத்தை உணர்ந்து கொண்டேன். நீங்கள் எல்லோரும் என் மீது கொண்டுள்ள அன்பையும் அக்கறையையுமே அது காட்டுகிறது. நன்மையோ, தீமையோ, சரியோ, தவறோ அடைக்கலம் என்றுகூறி வந்த ஒருவனை நாம் ஆதரிக்க வேண்டும். அதுதான் தர்மம். அதுதான் பண்பாடு. அதுதான் அறம். சுக்ரீவா நீ சென்று விபீஷணனை இங்கு அழைத்து வா. அவன் வரவு நல்வரவாகட்டும்.” விபீஷணன் சுக்ரீவனின் கைபிடித்து கடற்கரை மணலில் ஓட்டமும் நடையுமாக ராமனை நோக்கி விரைந்தான். ராமனை தரிசிக்கப் போகிறேன் என்ற எண்ணமே அவனுக்கு மலர்ச்சியை கொடுத்தது.
ராமனின் பாதங்களையே பார்த்தபடி கண்ணில் நீர் மல்க இரு கைகளையும் தலையின் மீது குவித்தபடி, “ராமா! ராமா! என் சரணாகதியை ஏற்றுக் கொண்டாயா? இது போதும். இது போதும்.” ராமன் விபீஷணனை நோக்கி இரு கரங்களையும் நீட்டி வரவேற்கும் முகமாக அவன் அருகில் சென்றான். விபீஷணன், ராமனின் பாதங்களைப் பற்றிக்கொண்டான். ராமன் குனிந்து விபீஷணனை எழும்பச் செய்தான். ராமன் விபீஷணனை இறுகத் தழுவிக்கொண்டான்.
எல்லையில்லா பெருங்குணத்தோனே! உயர்வு அற உயர் நலம் உடையவனே! மதிநலம் அருளிச் செய்துள்ளாய். உன் திருவடிகளே சரணம். ராமா! உன் அருளால், தாழ்சடைக் கடவுளாகிய சிவபெருமான் உண்ட நஞ்சானது எவ்வாறு அவர் உண்டதால் சிறந்ததாயிற்றோ, அதுபோல சிறந்தேன். எனக்கு மதிநலம் அருளிச்செய்துள்ளாய். என் பிறவித்துயர் களைய வேண்டும். என்றும் உன் திருவடியின் அருகாமை வேண்டும். என் துணைவி, மக்கள், உற்றம், சுற்றம், நாடு என எல்லாவற்றையும் விட்டொழித்து தனியனாக வந்த என்னை நீ ஏற்றுக் கொண்டது உன் மாபெரும் கருணை!”“விபீஷணா! அன்று குகனோடு சேர்ந்து நாங்கள் ஐவர் சகோதரர்கள் ஆனோம்.
பின்பு மேரு மலையை சுற்றி வரும் சூரியனின் மகன் சுக்ரீவனுடன் சேர்ந்து ஆறு பேர் ஆனோம். உள்ளன்பு கொண்டு எம்பால் சேர்ந்தவனே! உன்னுடன் சேர்ந்து இப்பொழுது ஏழுபேர் ஆயினோம். உன் தந்தை தசரதன் நம் எல்லோரையும் புதல்வர்களாகப் பெற்று பொலிவுற்றான்.” என ராமன் கூறி மீண்டும் விபீஷணனைத் தழுவிக் கொண்டான். அனுமனுக்கு ராமனை பார்க்கப் பார்க்க ஆனந்தம் பொங்கியது.
அனுமன் தன் மனத்துள் எண்ணினான். ‘எங்கு பிறந்தால் என்ன, அது ஒரு பொருட்டல்ல என்று குகனை ஒரு சகோதரனாக வரித்துக் கொண்டதும் விலங்கினத்தில் இருந்து தோன்றிய சுக்ரீவனுக்கு, தன் சகோதரன் எனும் உயரிய நிலை அளித்ததும் அரக்கர் குலத்தில் பிறந்த போதும் விபீஷணனை மற்றொரு சகோதரனாக ஏற்றுக் கொண்டதும் ராமனின் மாபெரும் மாண்பாகும். ராமன் பரம்பொருள்தான். அருளின் ஆழியான்தான். அவனை பக்தி மார்க்கத்தில் அடைந்தவன் குகன். கர்ம மார்க்கத்தில் அடைந்தவன் சுக்ரீவன். ஞான மார்க்கத்தில் அடைந்தவன் விபீஷணன். ஆஹா! என்ன அற்புதம்!’
கோதண்டராமன்