?ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசையைவிட தை அமாவாசை சிறப்பு வாய்ந்தது என்கிறார்களே எப்படி?
– என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஒவ்வொரு அமாவாசைக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு என்பது உண்டு. மஹாளய அமாவாசையை பெரிய அமாவாசை என்று குறிப்பிடுவார்கள். அன்றைய தினம் நாம் மறந்துபோன அனைத்து முன்னோர்களுக்கும் சேர்த்து தர்ப்பணாதிகளைச் செய்து அவர்களை திருப்திப் படுத்துகிறோம். ஆடி அமாவாசை என்பது தேவர்களின் இரவுப் பொழுது ஆன தக்ஷிணாயணத்தில் வரக்கூடிய முதல் அமாவாசை. அதேபோல தேவர்களின் பகல் பொழுதான உத்தராயணத்தில் வரக்கூடிய முதல் அமாவாசை தை அமாவாசை. ஆக, அவசியம் அந்த நாளில் முன்னோர் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். நாம் காலைப் பொழுதில் வீட்டில் காலை உணவு சாப்பிடுவதைப் போல. தவிர்க்க முடியாத காரணத்தால் மதிய உணவு சாப்பிட முடியவில்லை என்றால்கூட காலையில் சாப்பிட்ட உணவு அன்றைய தினம் முழுக்க நம்மை சக்தியோடு செயல்பட வைக்கும் அல்லவா, அதுபோல மற்ற அமாவாசைகளை மறந்து போனாலும் அல்லது தவிர்க்க இயலாத காரணங்களால் முன்னோர் வழிபாட்டினைச் செய்ய இயலாவிட்டாலும், தை அமாவாசை நாளில் செய்துவிடும்போது அது முன்னோர்களின் தாகத்தை தீர்க்கிறது என்பதால் தை அமாவாசை நாளை அத்தனை விசேஷமாகச் சொல்கிறார்கள். எல்லா அமாவாசை நாட்களிலும் முன்னோர் வழிபாட்டினை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்பதே சாஸ்திரம் வலியுறுத்தும் உண்மை.
?கிரகண நேரத்தில் வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுவது சரியா?
– ஜெ. மணிகண்டன், வேலூர்.
பொதுவாக எப்பொழுதுமே வீட்டுப் பூஜையறையில் விளக்கு எரிந்து கொண்டே இருக்க வேண்டும். அணையா விளக்காக இருந்தால் நல்லது. அணையா விளக்காக எரிந்து கொண்டிருக்கும் பட்சத்தில், அதற்கு கிரகண தோஷம் கிடையாது. ஆனால், நமது வசதிக்கு ஏற்றவாறு விளக்கு ஏற்றும்போது, கிரகண காலத்தில் பூஜை அறையின் கதவுகளையே திறக்கக் கூடாது. காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் பழக்கம் உள்ளவர்கள் சரியாக கிரகண காலத்தில் பூஜை அறைக்குள் சென்று விளக்கு ஏற்றக் கூடாது. அதற்கு முன்னதாகவே வேண்டுமானால் ஏற்றிவிடலாம். எப்படி ஆகினும் கிரகணம் முடிந்த கையுடன் வீடு முழுவதும் சுத்தமாக அலம்பிவிட்டு நன்றாக துடைத்து கோலமிட்டு அதன்பின் அவசியம் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும்.
?இறைவனுக்கு எத்தனை இலை படையல்கள் போட்டால் நல்லது?
– வண்ணை கணேசன், சென்னை.
நன்றாக பெரிய தலை வாழை இலையாக இருந்தால் ஒரே இலையில் படையல் போட்டாலே போதுமானது.
?கோ பூஜை செய்ய முடியாதவர்கள் (வசதி இல்லாதவர்கள்) எவ்வாறு வழிபடுவது?
– பொன்விழி, அன்னூர்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. பசுவினை பூஜிக்க அப்படி என்ன செலவாகிவிடப் போகிறது? கொஞ்சமாக அரிசி, வெல்லம் கலந்து வைத்து பசுவிற்கு தந்து வழிபடலாம். அகத்திக்கீரை வாங்கித் தந்து வழிபடலாம். அதுகூட இயலவில்லை என்றால், அரிசி களைந்த கழுநீரை தெருவில் வரும் பசுமாட்டிற்கு வைத்து பசுமாடு நீரை அருந்தும்போது அதனைத் தொட்டு வழிபடலாம். பசுவை வணங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே தன்னால் வழி பிறக்கும்.
?அமாவாசை அன்று வெள்ளிக் கிழமையாய் வந்தால் வீட்டுவாசலில் கோலமிடக்கூடாதா?
– ஆர்.வி. சீனிவாசன், கோயமுத்தூர்.
முதலில் அமாவாசை நாளில் வீட்டு வாசலில் கோலமிடக் கூடாது என்ற எண்ணமே தவறு. அமாவாசை நாளில் அது எந்தக் கிழமையாக இருந்தாலும் அவசியம் வீட்டுவாசலில் கோலமிட வேண்டும். அமாவாசை நாளில் வாசலில் கோலமிடக் கூடாது போன்ற தவறான கருத்துக்களை தயவுசெய்து பொதுமக்களிடத்தில் பரப்பாதீர்கள். அதுபோன்று சொல்பவர்களின் கருத்துக்களையும்
நம்பாதீர்கள்.
?கும்பாபிஷேக யாகசாலை சாம்பலை சேகரித்து தினசரி திருநீறாய் பூசிக் கொள்ளலாமா?
– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
அவசியமில்லை. கும்பாபிஷேகம் ஆன கையோடு அந்த யாக குண்டங்களை கிளறுவது என்பது தவறு. சிவாச்சாரியார்கள் தங்கள் கரங்களால் அந்த யாககுண்டத்தில் இருந்து சாம்பலை சேகரித்து அத்துடன் நெய் சிறிதளவு கலந்து ரட்சை என்ற பெயரில் வைத்திருப்பார்கள். அதனை நெற்றியில் இட்டுக் கொண்டாலே போதுமானது.
?செருப்பு தொலைந்துபோவது போல் கனவு கண்டால் கால்களுக்கு பாதிப்பு வருமா?
– த.சத்தியநாராயணன்,
அயன்புரம்.வராது. நம்மை பிடித்திருக்கும் தொல்லைகள் நீங்குகிறது என்று பொருள் காண வேண்டும்.
?தேவி ஸ்ரீ கருமாரியம்மனுக்கு மட்டும் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடை பிடிப்பதேன்?
– அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
கருமாரியம்மன் மட்டுமல்ல, சிவன், கராள நரசிம்மர் என எல்லா தெய்வங்களுக்குமே தலையில் நாகாபரணம் என்பது இருக்கும். ஐந்து தலை நாகம் என்பது கேதுவின் அம்சம். நவகிரஹங்களில் கேதுவைத்தான் ஞானகாரகன் என்று சொல்வோம். ஆக, நாகாபரணம் என்பது ஞானத்தைத் தரக்கூடியதாக அமைந்திருக்கிறது என்று பொருள் காண வேண்டும். அதுபோல, நாகாபரணத்தைச் சூடிக் கொண்டிருக்கும் இறை மூர்த்தங்களை தரிசிக்கும்போது, நம் மனதில் இருக்கும் கவலைகள் பறந்து ஞானம் என்பது பிறக்கிறது என்பதுதான் அதற்கான தத்துவம்.
The post ஏன்?எதற்கு?எப்படி ? appeared first on Dinakaran.