மூலம்

கால புருஷனுக்கு பத்தொன்பதாவது (19) வரக்கூடிய நட்சத்திரம் மூலம் நட்சத்திரமாகும். மூலம் என்றால் சமஸ்கிருதத்தில் வேர் என்று பொருள். கடவுள் நம்பிக்கை கொடுக்கக்கூடிய நட்சத்திரம் மூலமாகும். மூல நட்சத்திரத்தில் செய்யக்கூடிய நல்ல சுபகாரியங்கள் விருத்தியாகும் என சாஸ்திரம் சொல்கிறது. சாதனை செய்பவர்கள் இந்த நட்சத்திரத்தில்தான் அவதரிக்கிறார்கள்.மூல நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் குருகு, கொக்கு, தேட்கடை ஆனி, வேர் ஆகியனவாகும்.வேர் என குறிபிட்ட மூல நட்சத்திரமானது ஒரு குறிபிட்ட மூலிகை தொடர்புடையதாக உள்ளது. அந்த மூலிகையின் பெயர்தான் நிலம்புரண்டி. மனிதர்களின் வரவை கண்டாலோ அல்லது மனிதர் வாடையை கண்டாலோ மண்ணுக்குள் புதைந்துகொள்ளும் தன்மையைப் பெற்றது இந்த நிலம் புரண்டி. இது அவ்வளவு சீக்கிரம் மனிதர்களின் கண்ணில் படாது. இது தெய்வீக மூலிகை என்று சித்தர்களால் வர்ணிக்கப்படுவதுண்டு. இதற்கு பங்காளிச் செடி என்ற பெயருண்டு. இந்த மூலிகையின் மற்றொரு சிறப்பு என்னவெனில் மூல நட்சத்திரம் அன்று மட்டுமே பூமியின் மேற்பரப்பிற்கு வரும் அதிசயம் பெற்ற செடியாகும்.

சித்தா மற்றும் ஆயூர்வேத மருத்துவர்கள் இந்த நட்சத்திரத்தில் மருந்துகளுக்கான மூலிகைகளை சேகரித்தல் மற்றும் மருத்து தயாரித்தால் சிறப்பாக அமையும். மேலும், சித்த மருத்துவர்கள் காடுகளில் மூலிகைகளை பறிக்கும் முன் பூஜை செய்வார்கள் அவர்கள் இந்த நட்சத்திரத்தில் காப்பு கட்டி செய்தால் விருட்ச சாபம் ஏற்படாது. மேலும், மூலிகையின் வீரியம் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மூல நட்சத்திரம் காலபுருஷனுக்கு ஒன்பதாம் பாவகத்தில் அமைந்துள்ள முழு நட்சத்திரம். இது தனுசு ராசியில் பஞ்சபூத தொடர்பில் அக்னியுடன் தொடர்புடையதாக உள்ளது. ஆகவே, இந்த நட்சத்திரத்தில் தேவதைகளுக்கான வேள்விகள் செய்வது சிறப்பான வெற்றியைத் தரும்.

மூலநட்சத்திரப் புராணம்

மூல நட்சத்திரத்தினை சிந்திக்கும் பொழுது ஆஞ்சநேயரைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. ஆஞ்சநேயர் அவதரித்த நட்சத்திரம் மூலம் ஆகும். மூல நட்சத்திரத்தின் குறியீடாக அங்குசம், சிங்கவால், யானையின் தும்பிக்கை ஆகியன சொல்லப்படுகிறது. ஆஞ்சநேயரின் கைகளில் உள்ள கதாயுதமும் வாலைப்போலவே இருக்கும். இந்த வாலைக் கொண்டு இலங்கையை என்னென்ன செய்தார் என்பது நாம் அறிந்ததே. நட்சத்திரத்தின் வடிவங்கள் அவர்களே அறியாமல் அவர்களை பின்தொடர்கிறது. ராமாயணத்தில் ராவணனை எதிர்த்து ராமன் போர் தொடங்கிய பின் ராவணனின் மகன் இந்திரஜித்துக்கும் ராமனின் தம்பி லட்சுமணனுக்கும் போர் தொடங்கியது. போர் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றது. இந்திரஜித் மாய வேலைகளை அறிந்தவன். ஆகவே, மறைந்தும் தோன்றியும் யுத்தங்களை செய்துகொண்டிருந்தான். இந்த எல்லா மாயவேலைகளுக்கும் அஞ்சாமல் லட்சுமணன் போர் தொடுத்தான். தீடீரென அவன் தான் பெற்ற பிரம்மாஸ்திரத்தை லட்சுமணன் மீது தொடுத்தான். இந்த பிரம்மாஸ்திரமானது மும்மூர்த்தியின் அருளால் வழங்கப்பட்டது.

அந்த பிரம்மாஸ்திரம் எய்தவுடன் லட்சுமணன் மூர்ச்சை ஆனான். ராமன் என்ன நடந்தது என தெரியாமல் குழம்பிப் போனார். போர் செய்த வானரப் படையிலும் பாதிக்கும் மேற்பட்டோர் விழுந்துவிடவே, என்ன செய்வது என அறியாமல் கரடியின் வேந்தனான சாம்பவானிடம் ஆலோசனைக் கேட்க , சஞ்சீவி மூலிகை கொண்டு வந்தால் பிழைக்க வைக்கலாம் என கூறவே. அனுமன் சஞ்சீவி மூலிகையை எடுத்து வர வேண்டும் என ராமரின் ஆணைக்கு உட்பட்டு, இமயமலைக்குச் சென்று சஞ்சீவி மூலிகை எதுவென்ற குழப்பத்தில் சஞ்சீவி மலையை பெயர்த்துக் கொண்டு வந்தான் அனுமன். மூலம் நட்சத்திரம்தான் எந்த மூலிகையையும் கொண்டு வரும் வல்லமை பெற்றது என்பதற்கு இந்த புராணமே உதாரணம்.

பொதுப்பலன்கள்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிலர் படும் அல்லல்கள் பலர் அறியலாம். திருமணத்திற்காக இந்த நட்சத்திரத்தை ெகாடுத்தவுடன் பலர் ஒதுக்கி வைத்துவிடுவர். இதன் நட்சத்திரம் எளிமையானது, ஞானமானது என்பதை புரிந்துகொள்ள முயல வேண்டும். ஆண் மூலம் அரசாளும் என்ற சொலவடை தவறானது; ஆனி மூலம் அரசாளும் என்பதே சரியான வார்த்தை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அறம் என்று சொல்லக்கூடிய தர்மத்திற்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள். இளம்பிராயத்தில் சுக்ர திசா வருவதால் கல்வியை தொடர முடியாத சூழ்நிலைக்கு சிலர் ஆட்படுவார்கள்.

ஆரோக்கியம்

மூல நட்சத்திரக்காரர்களுக்கு உடலில் உள்ள சூட்சும ஹார்மோன்கள் அடிக்கடி பாதிப்புகளை உண்டாக்கும். நுரையீரல், கல்லீரல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் வரும். இந்த கோளாறுகள் வராமல் இருக்க இவர்கள் சைவ உணவுகளை எடுத்துக் கொண்டால் நோய் தொடர்பான பிரச்னைகள் தீரும்.

மூலத்திற்குரிய வேதை நட்சத்திரம்

வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். ஆயில்யம் என்பது வேதை நட்சத்திரமாக உள்ளது. இந்த நட்சத்திர நாளில் புதிய காரியங்களை தொடங்க வேண்டாம்.

பரிகாரம்

மூல நட்சத்திர நாளிலும் ஒவ்வொரு சனி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் ஆஞ்சநேயரை தரிசிப்பது நற்பலன்களை கொடுக்கும். மேலும், ஆஞ்நேயரும், விநாயகரும் இணைந்து ஆசிர்வதிக்கும் ஆதியந்த பிரபு வழிபடுவது சிறப்பான நற்பலன்களை கொடுக்கும் என்பது நிச்சயமான ஒன்றாகும். ஞானத்தைக் கொடுக்கும்.

The post மூலம் appeared first on Dinakaran.

Related Stories: