நம் பிரச்னைகள் தீர திருவக்கிரக் கோயில் (திருவக்கரை)

* தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள தலம் திருவக்கரை. விழுப்புரம் மாவட்டம் வானூர்வட்டத்தில் அமைந்துள்ளது.
* புதுச்சேரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. விழுப்புரம் புதுச்சேரிக்கும் இடையில் திருக்கனூர் அருகில் புதுக்குப்பம் என்னும் ஊரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி ஊர்களிலிருந்து எளிதில் செல்லலாம்.
* கம்பீரமான ராஜகோபுரம் அணிசெய்ய, அகலமான பிராகாரங்களோடு ஊருக்கு மத்தியில் அமைந்துள்ள அற்புதமான கோயில் இது.
* உள்ளே மூலவர் சந்திரமௌலீஸ்வரர். பிறை சூடிய பெருமான். சந்திரசேகரர் என்ற பெயரோடு காட்சி தருகின்றார்.
* அம்பாளின் பெயர் வடிவாம்பிகை.
* இங்கு உள்ள லிங்கமூர்த்தி மும்முகமாக காட்சியளிப்பது சிறப்பு. கிழக்கில் தற்புருடம், வடக்கே வாமதேவம் தெற்கில் அகோரமுகமாகவும் காட்சி தரும் அற்புத அமைப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காதது.
* அகோர முகத்தின் வாயில் இரு ஓரத்திலும் இருகோரைப் பற்கள் தெரியும். அதுவும் பால் அபிஷேகம் செய்யும்போது நாம் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும்.
* வக்கிரம், என்றால் முறை மாறி உள்ளது அல்லது நேர் எதிராக உள்ளது என்பது பொருள். கிரகங்கள் வக்கிரமாகச் சுற்றுகின்றன என்று சொன்னால் பின்நோக்கி சுற்றுகின்றன, எதிர்மறையாகச் சுற்றுகின்றன என்று பொருள். இந்தக் கோயிலில் கொடிமரம், பலிபீடம், சனி, எல்லாமே வக்கிரம் தான்.
* பொதுவாக கோயில் கருவறைக்கு நேர் எதிரில் கொடிமரம் இருக்கும். ஆனால் இங்கே வடபுறமாக விலகி வக்ரமாக உள்ளது. கோபுரவாசல் சுவாமிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி வக்கிர
நிலையில் இருக்கிறது.
* இங்கே உள்ள வக்ரகாளி அம்மனுக்கு பௌர்ணமி பூஜை, மிக விசேஷமாக நடைபெறுகிறது. அமாவாசையில் பகல் நேரத்திலும் பௌர்ணமியில் இரவு 12 மணிக்கும் வக்ரகாளி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
* திருவக்கரை பத்ரகாளியம்மனுக்கு பிரசித்தி அதிகம். வக்கிர காளியின் இடதுபாகத்தில் ஆதிசங்கரர்  சக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.
* இந்த சிவாலயத்தில் வரதராஜப் பெருமாள் சந்நதி உண்டு. வக்கிராசூரனை வதம்செய்த பிரயோக சக்கரம் அவர் கையில் மாற்றி வைத்திருப்பதும் ஒரு வக்கிரம்தான்.
* ஒரு கோயிலின் விசேஷம் அங்கே உள்ள சித்தர்கள் ஜீவ சமாதி, பிருந்தாவனம் முதலிய சிறப்புகள். அந்த அடிப்படையில் குண்டலினி சித்தர் இங்கு ஜீவசமாதி அடைந்துள்ளார். அவருடைய சமாதி கோயிலுக்குள்ளேயே உள்ளது.
* வக்கிரகாளியின் வலதுகாதில் குழந்தை குண்டலமாகத் தொங்குவது இங்கு சிறப்பு.
* பொதுவாக காளி வீராவேசமாகக் காட்சி தருவாள். ஆனால், இங்கு சாந்த சொரூபமாகக் காட்சி தருகிறாள்.
* இங்கே உள்ள சனிபகவான் பிரசித்தி பெற்றவர். பொதுவாக, சனிபகவானுக்கு வலப்புறமாக இருக்கவேண்டிய அவருடைய வாகனமான காகம் இங்கே இடதுபுறத்தில் வக்ரமாக அமைந்துள்ளது அதனால், இவருக்கு வக்ரசனி என்று பெயர் இந்த வக்கிரசனியை வணங்குபவர்களுக்கு சனியினால் ஏற்படுகின்ற துன்பங்கள் வக்ரமாகி (மாறி) நன்மையாக முடியும்.
* மிகமிகத் தொன்மையான பழங்காலக் கோயில், இது. கி.மு.756ல் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த கோயில் மிகப் பிரதானமான கோயில்.
* அம்பாள் சந்நதிக்கு நேர்எதிரில் ருத்ரபூமி என்று சொல்லப்படும் மயானபூமி உள்ளது.
* வக்ராசூரன் என்ற அசுரன் மிகவும் கொடுமைசெய்து கொண்டிருந்தான். அந்த அசுரனை இங்குள்ள வரதராஜப் பெருமாள் சக்கரத்தால் அழிக்கிறார். வக்ராசூரன் தங்கைக்கு துன்முகி என்று பெயர். அவள் வக்ராசூரனை விட ஆவேசமாகச் சண்டை செய்கிறார். அப்பொழுது வக்ரகாளி அவதாரம் செய்து அந்த ராட்சசியை அழிக்கிறாள். அப்போது அவளுடைய வயிற்றில் இருந்த குழந்தை சிசுவை தனது வலது காதில் குண்டலமாக அணிந்துகொண்டாள் என்பது தல வரலாறு.
* முண்ட மாலையினை முப்புரிநூல் ஆக அணிந்திருக்கும் வக்ரகாளி மண்டையோட்டுக் கிரீடத்தை அணிந்து அஷ்ட திருக்கரங்களில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம், பகைவர்களின் தலைமாலை என்று அணிந்து அற்புதமாகக் காட்சி தருகிறாள். துவக்கத்தில் மிகவும் கோபாவேசமாக இருந்த இந்த பத்ரகாளியை ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து சாந்தம் செய்தார்.
* திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தைவரம் வேண்டுபவர்கள், கடன் தொல்லைகளால் தவிப்பவர்கள், மனக்குழப்பம் நிறைந்தவர்கள், ராகு-கேது முதலிய தோஷங்களால் பாதிப்புள்ளவர்கள், பொதுவான கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இந்தக் கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.
* இங்கே பிரகாரத்தை வலம் வருவதிலும் ஒரு முறை உண்டு. பொதுவாக வலப்பக்கமாக ஐந்து முறையும் இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும் என்கிறார்கள்.
* காளிகோயிலின் நேர்எதிரில் உள்ள லிங்கத்திற்கு கண்ட லிங்கம் என்று பெயர் இந்த லிங்கத்திலும் ஒரு விசேஷம் உண்டு. கோடைகாலத்தில் இந்த லிங்கம் மிகக் குளிர்ச்சியாக இருக்கும். குளிர்காலத்தில் இந்த லிங்கத்திற்கு வேர்த்து முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும் என்பது விசேஷம்.
* கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.
* இங்குள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் பாடியிருக்கின்றார்.
* திருமணத்தடை உள்ளவர்கள் பத்ரகாளி சந்நதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்யக் கயிறு கட்டி எலுமிச்சம்பழத் தீபம் ஏற்றுகிறார்கள். வேண்டுதல் சீட்டு எழுதிக் கட்டும் வழக்கம் இத்தலத்தில் உண்டு.
* சித்ரா பௌர்ணமி, தமிழ் வருடப் பிறப்பு, பொங்கல், ஆடிக் கிருத்திகை, தைத் கிருத்திகை, தைப்பூசம், கார்த்திகை தீபம் முதலிய நாள்கள் விசேஷம். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அஷ்டமி, நவமி நாட்களில் கோயிலில் பக்தர்கள் மிகப்பெரிய அளவில் வருகின்றார்கள்.
* இத்திருக்கோயில் அருகே கல்குவாரிகள் இருக்கின்றன. திருவக்கரையில் உள்ள தேசிய கல்மரப் பூங்கா இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் பராமரிக்கப்படுகிறது. இங்கு இருக்கும் கல்மரங்கள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகச் சொல்லப்படுகின்றன. திருவக்கரை கோயிலுக்குச் செல்பவர்கள்
கல்மரப் பூங்காவையும் பார்த்து வருவது நலம்.

 

The post நம் பிரச்னைகள் தீர திருவக்கிரக் கோயில் (திருவக்கரை) appeared first on Dinakaran.

Related Stories: