முதல்வர் மருந்தகங்களில் பொதுமக்கள் அதிகமாக கேட்கும் மருந்துகளை கூடுதலாக வைத்துக்கொள்ள வேண்டும்

* பெரம்பலூர் கலெக்டர் அறிவுறுத்தல்

பாடாலூர் : முதல்வர் மருந்தகங்களில் பொதுமக்கள் அதிகமாக கேட்டும் மருந்துகளை கூடுதலாக வைத்து கொள்ள வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தி உள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம், பாடாலூர் ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள், மருந்துகளின் இருப்பு, விற்பனை விபரங்கள் குறித்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ், நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத் துறையின் சார்பில் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் 24.2.2025 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் 1,000 ”முதல்வர் மருந்தகங்களை” காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 17 முதல்வர் மருந்தகங்களும் அடங்கும். இந்த மருந்தகங்களின் செயல்பாடுகள், சேவைகள் குறித்து கலெக்டர் கொளக்காநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக நடத்தப்படும் கொளக்காநத்தம், இரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக நடத்தப்படும் பாடாலூர், முதல்வர் மருந்தகங்களை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, முதல்வர் மருந்தகத்தில் தினசரி கொள்முதல் செய்யப்படும் மருந்துகளின் விபரங்கள், பொதுமக்கள் அதிகமாக கேட்கும் மருந்துகள் மற்றும் மற்ற மருந்தகங்களை விட முதல்வர் மருந்தகத்தின் வழங்கப்படும் ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல் பிராண்டட் மருந்துகள், சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி மருந்துகளின் விலை குறித்து மருந்தாளுனர் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது, பாடாலூர் முதல்வர் மருந்தகத்தில் பணம் செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த gpay QR CODE வசதி செயல்பாட்டில் உள்ளதா என்பதை கண்டறிய அவர்களுடைய பயன்பாட்டிற்காக சில மாத்திரைகளை வாங்கினார். இதற்கான தொகையினை அங்கிருந்த க்யு ஆர் கோடு வசதி மூலம் ஆன்லைன் வாயிலாக செலுத்தினார்.

பின்னர், பாடாலூர் முதல்வர் மருந்தகத்தில் மரு ந்து வாங்கி பயன்படுத்தி வரும் நபர்களின் தொலைபேசி எண்ணிற்கு கலெக்டர் தொடர்பு கொண்டு, முதல்வர் மருந்தகளின் சேவை மற்றும் பயன் குறி த்து கேட்டறிந்தார்.மேலும், மருந்தகங்களில் பொதுமக்கள் அதிகமாக கேட்கும் மருந்துகளை கூடுதலாக வைத்துக் கொள்ளவும் 20 முதல் 90 சதவீதம் வரை குறைவான விலையில் 25 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், மருந்தகங்களில் பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு க்யு.ஆர் கோடு வசதியினை அனைத்து முதல்வர் மருந்தகங்களிலும் ஏற்படுத்திடவும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வுகளில் பெரம்பலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியன் துணைப் பதிவாளர்கள் சிவக்குமார் (பொ.வி.தி), இளஞ்செல்வி (சரகம்), ஆலத்தூர் தாசில்தார் சத்தியமூர்த்தி, கூட்டுறவு சார்பதிவாளர் பிரீத்தி, கூட்டுறவு சங்க செயலாளர்கள் கோவிந்தசாமி, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post முதல்வர் மருந்தகங்களில் பொதுமக்கள் அதிகமாக கேட்கும் மருந்துகளை கூடுதலாக வைத்துக்கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: