பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உச்சத்தில் தேங்காய் விலை; கிலோ ரூ.65க்கு விற்பனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில், போதிய மழையில்லாமல் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.65வரை விலை போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தென்னை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்பட்ட தென்னையிலிருந்து உற்பத்தியாகும் தேங்காய், கொப்பரை, மஞ்சி உள்ளிட்டவை வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், பொள்ளாச்சியில் உற்பத்தியாகும் தென்னை சார்ந்த பொருட்களுக்கு, இன்றும் நல்ல வரவேற்பு உள்ளது.

சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் தேங்காய் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட விலை நிர்ணயித்து அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும், பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன், வியாழக்கிழமைகளில் நடக்கும் சந்தை நாளின்போது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் கொண்டுவரும் தேங்காய், ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இதில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பெய்ததால் தேங்காய் உற்பத்தி அதிகமானதுடன், மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட தேங்காய்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

இதனால், கடந்த ஆண்டில் ஒவ்வொரு தேங்காயும் சுமார் 350கிராம் முதல் ரூ.750கிராம் வரையில் இருந்தது.மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து அதிகமாக இருந்ததால், ஒரு கிலோ தேங்காய் ரூ.30 முதல் ரூ.45வரை என குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டில் பருவமழை அடுத்தடுத்து இருந்தும் தேங்காய் உற்பத்தி மிகவும் குறைந்தது. அதிலும் கடந்த சில மாதமாக மழையில்லாமல் தென்னைகளில் காய்க்கும் தேங்காயின் பருமன் மிகவும் குறைவானது.

மேலும், விவசாயிகள் கொண்டு வரும் தேங்காயின் எடை சுமார் 200 முதல் அதிகபட்சமாக 550 கிராம் வரையிலே உள்ளது. இருப்பினும், நாளுக்குநாள் தேங்காய் உற்பத்தி குறைவால், தேங்காய் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.

இதில், தற்போது மார்க்கெட்டுகளில் ஒருகிலோ தேங்காய் ரூ.60 முதல் அதிகபட்சமாக 65வரை என வழக்கத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது. கடந்த சில மாதமாக, தேங்காய் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைகின்றனர்.

தேங்காய் உற்பத்தி காரணமாக, பொள்ளாச்சியிலிருந்து வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் தேங்காய்களின் எண்ணிக்கையும் கனிசமாக குறைந்துள்ளதால் விலையேற்றமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உச்சத்தில் தேங்காய் விலை; கிலோ ரூ.65க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: