புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் உள்ளாட்சி துறை சார்பில் அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வில்லியனூரில் ஆணையர் ரமேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில் உதவி பொறியாளர் ஹெலன், வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், அனைத்து துறை பொறியாளர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், வில்லியனூர் புறவழிச்சாலை வழியாக பேருந்துகள் செல்கின்றன. அனைத்து பேருந்துகளும் வில்லியனூர் நகரம் வழியாக செல்ல வேண்டும். அதற்கு ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வில்லியனூர் எம்ஜிஆர் சிலையில் இருந்து தட்டாஞ்சாவடி வரை செல்லும் சாலைக்கு குறுக்கே பல்வேறு இடங்களில் சென்டர் மீடியன் விளக்கப்பட்டு கிராசிங் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் விபத்துக்குள்ளாகிறது. அதனை குறைக்க வேண்டும். மேலும் அதில் ரிப்லேட்டர் பொருத்த வேண்டும். இதேபோன்று பேருந்துகள் கிராம நகர பகுதிக்குள் வந்து செல்ல ஏதுவாக போக்குவரத்து துறையினர் சாலையோர கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.
வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை சமுதாய நலவழி மையமாக மேம்படுத்தி, அதிக படுக்கை வசதி, எக்ஸ்ரே, இசிஜி உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். வில்லியனூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள் மற்றும் மாதா கோயில் உள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது ஆன்மீக மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அதிகமாக கலந்து கொள்கின்றனர்.
அவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதி இல்லை. இதற்காக பஞ்சாயத்து சார்பில் நடமாடும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், வில்லியனூர் கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்ட நிலையில் மின்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளாதது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் கவன ஈர்ப்பு கொண்டு வரப்பட்டது.
இதேபோல், கரியமாணிக்கம் பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஆணையர் ரமேஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கரியமாணிக்கத்தில் பிரதான சாலையில் பேருந்து செல்ல குறுகிய சாலை இருப்பதாகவும், காலை நேரங்களில் பள்ளி பேருந்துகள் கல்லூரி பேருந்துகள் செல்லும்போது தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும். இலவம்பஞ்சு மரங்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் சில இடங்களில் குடிநீர் பிரச்னை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் சுத்தப்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
The post வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை சமுதாய நலவழி மையமாக மேம்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.