* சாலையோரங்களில் குவிக்கப்பட்டிருக்கும் பிஞ்சுகள்
* நேரடி விற்பனையில் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் : தஞ்சை மாவட்ட பகுதிகளில் வெள்ளரி அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாவட்டம் முழுவதும் விவசாயிகளே சாலையோரங்களில் கொட்டகை அமைத்து வெள்ளரி விற்பனை செய்து வருகிறார்கள்.தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வருகிறது.
இங்கு நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, வெற்றிலை, நிலக்கடலை, எள், உளுந்து போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது முன்பட்ட குறுவையான கோடை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதவிர செண்டிப்பூக்கள், வெள்ளரி, பரங்கிக்காய், புடலங்காய் உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் கால நிலைக்கு ஏற்ற சாகுபடிகளும் தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோடைக்கு நல்ல பலன் தரக்கூடிய வௌ்ளரி சாகுபடியம் தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. அப்படி வௌ்ளரி சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் தற்போது வெள்ளரி அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோடை வெயில் என்பதால் வெள்ளரிக்கு மக் களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் 15ம் தேதிக்குப் பிறகு வெள்ளரி சாகுபடி பணிகள் தொடங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் சாகுபடி பணிகள் தொடங்கி தற்போது அறுவடை நடந்து வருகிறது.
சாகுபடி செய்யப்பட்ட 40நாட்களில் இருந்து 3மாதங்கள் வரை வெள்ளரி அறுவடை நடைபெறும். தற்போது கோடைவெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெள்ளரிப்பிஞ்சுக்கு மவுசு அதிகரித்துள்ளது. தஞ்சை-மன்னார்குடி சாலையில் உள்ள வரவுக்கோட்டை, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. விலையும் கடந்த ஆண்டைவிட அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு 5பிஞ்சுகள் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 4பிஞ்சுகள் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பகுதிகளில் பெரும்பாலும் விவசாயிகள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து தான் சாகுபடி செய்து வருகிறார்கள்.
அதிலும் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வயலில் அறுவடை செய்த வெள்ளரியை சாலையோரத்தில் வைத்து அவர்களே விற்பனை செய்து வருகிறார்கள். இதற்காக தஞ்சை-மன்னார்குடி சாலையில் வழிநெடுகிலும் சிறிய கொட்டகைகளை அமைத்து அதில் வெள்ளரிகளை குவித்து வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.
அந்த வழியாக கார் மற்றும் வாகனங்களில் செல்வோர் வௌ்ளரி பிஞ்சுகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். பறித்த உடனே வெள்ளரி கிடைப்பதால் விற்பனையும் அதிக அளவில் நடந்து வருகிறது.
இதுதவிர வியாபாரிகளும், நேரடியாக விவசாயிகளின் வயல்களுக்கு வந்து வெள்ளரியை வாங்கி செல்கிறார்கள். அவர்கள் ஒரு பிஞ்சு ரூ.4 என்ற விலையில் வாங்கி செல்கிறார்கள். இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை வெயிலுக்கு இதமளிக்கும் வெள்ளரி
நாங்கள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வருகிறோம். நாங்கள் சாகுபடி செய்துள்ள வெள்ளரி இன்னும் 30 நாட்களில் அறுவடைக்கு வரும். தற்போது அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்பனை செய்து வருகிறோம். பல விவசாயிகள் இது போன்று விற்பனை செய்து வருகிறார்கள்.
தற்போது வெயில் கொளுத்தி வருவதால் வெள்ளரிப்பிஞ்சுக்கு மவுசு அதிகரித்து விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. உடனுக்குடன் பறித்து விற்பதால் பொதுமக்களும் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் என்கிறார் வரவுக்கோட்டையை சேர்ந்த விவசாயி கார்த்திக்.
The post தஞ்சை மாவட்டத்தில் வெயிலின் சூட்டை தணிக்கும் வெள்ளரி விற்பனை அமோகம் appeared first on Dinakaran.