பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப், கவியருவி, சின்னக்கல்லார் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
சீசனை பொறுத்து ஒவ்வொரு முறையும் சுற்றுலா பயனிகள் வருகை அதிகளவில் இருக்கும். இதில் பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்புக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பெய்தது. இதனால், இந்த ஆண்டில் ஜனவரி மாதம் வரையிலும் வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிக்கொடிகள் உள்ளிட்டவை பச்சை பசேலென உள்ளது.
பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமானது.கடந்த மார்ச் மாதம் இறுதிவரை என இரண்டு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமானதால், வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிக்கொடிகளில் இருந்து இலைகள் வாடி வதங்கியது.
ஆழியார் சோதனை சாவடியிலிருந்து வால்பாறை மலைப்பாதைக்கு செல்லும் ரோட்டோரத்தில் உள்ள பல மரங்கள் பட்டுபோன நிலையிலும், செடிக்கொடிகள் வாடி வதங்கிய நிலையில் இருந்தது. இதற்கிடையே, கடந்த மாதம் துவக்கத்திலிருந்து வனப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்துள்ளது.
இதனால், வாடி வதங்கிய மரங்கள், செடிக்கொடிகள் உள்ளிட்டவை புத்துணர்ச்சி பெற்று செழிக்க ஆரம்பித்தது. ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் தற்போது மீண்டும் பசுமை திரும்பி பச்சை பசேலாக ஏற்பட்டுள்ளது.
தற்போது கோடை விடுமுறை என்பதால், ஆழியார் மற்றும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. இத்தருணத்தில் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையோரம் பச்சை பசேலென உள்ள தாவரங்களை கண்டு ரசிப்பதுடன், இயற்கை சீதோதனை நிலையை பார்த்து பரவசமடைகின்றனர். அடுத்து, கன மழை பெய்தால் வனப்பகுதியில் உள்ள தாவரங்கள் மேலும் செழிப்புடன் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
நாளை அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடைவெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகளவில் இருந்தது.
அதுபோல் இந்த மாதம் துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில், நாளை 4ம் தேதி அக்னிநட்சத்திரம் ஆரம்பமாக உள்ளது. அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வரும் 28ம் தேதி வரை உள்ளது. இதனால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
The post வனப்பகுதியில் பெய்யும் சாரல் மழையால் மலைப்பாதையில் பசுமையாக காட்சியளிக்கும் மரங்கள் appeared first on Dinakaran.