கோடை விடுமுறையையொட்டி கோயிலுக்கு படையெடுப்பு நெல்லை – திருச்செந்தூர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?

*பக்தர்கள் எதிர்பார்ப்பு

நெல்லை : கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள், பேருந்து மற்றும் ரயில்களில் வந்து செல்கின்றனர். இதற்காகவே ரயில் நிலையமும், பகத்சிங் பேருந்து நிலையமும் சுமார் 500 மீட்டர் இடைவெளியில் அருகருகே உள்ளது.

திருச்செந்தூரில் இருந்து நெல்லை மார்க்கமாக மட்டுமே ரயில் வழித்தடம் உள்ளது. நெல்லையில் இருந்து தினமும் காலை 7.15 மணி, 10.20 மணி, 11.40 மணி, மாலை 4.30 மணி, 6.50 மணி ஆகிய நேரங்களில் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.

இதேபோல் திருச்செந்தூரில் இருந்து நாள்தோறும் நெல்லைக்கு காலை 7.10 மணி, 10.10 மணி, பிற்பகல் 2.50 மணி, மாலை 6.15 மணி ஆகிய நேரங்களில் பயணிகள் ரயிலும், பகல் 12.20 மணிக்கு பழநி வழியாக செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலும், இரவு 8.25 மணிக்கு சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படுகிறது.

இதனால் காலை முதல் இரவு வரை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுவட்டார விவசாயிகள், வணிகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களின் பயணத்தேவையின் அங்கமாகவே ரயில்கள் உள்ளது.

இதன் காரணமாகவே திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்டத்தில் ரூ.8.16 கோடி செலவில் நடைமேடை விரிவாக்கம், வாகன நிறுத்தம், பயணிகள் ஓய்வறை மற்றும் காத்திருக்கும் அறை போன்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

தற்போது கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் வார விடுமுறை நாட்களில் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே திருச்செந்தூருக்கு வார விடுமுறை நாட்களில் சிறப்பு ரயிலும், நாள்தோறும் இயக்கப்படும் ரயில்களில் கூடுதலான பெட்டிகளையும் இணைத்து இயக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: தமிழகத்தின் தென்கோடியில் திருச்செந்தூர் இருந்தாலும் பக்த கோடிகள் அதிகமாக வருகை தரும் தலமாக முருகன் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோரும், விழாக் காலங்களில் லட்சக்கணக்கானோரும் வந்து செல்கின்றனர்.
திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வணிகர்கள் சென்னை, கோவை, ஈரோடு, புதுச்சேரி போன்ற பெரு நகரங்களுக்கும், பெங்களூரு, மும்பை போன்ற நாட்டின் பல பகுதிகளிலும் வணிகம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் வணிகர்கள் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து பெங்களூரு, மும்பைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும். சென்னைக்கும் நேரடியாக ரயில் இயக்க வேண்டும். அதுபோல் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பெட்டிகளையும் இணைக்க வேண்டும், என்றனர்.

The post கோடை விடுமுறையையொட்டி கோயிலுக்கு படையெடுப்பு நெல்லை – திருச்செந்தூர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: