இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: 2024-25ம் ஆண்டில் தமிழ்நாடு 9.69% உண்மை வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுவேயாகும். 2011-12ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலை மதிப்பின்படி 2023-24ம் ஆண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, 2024-25ம் ஆண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது என ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்குமுன், 2017-18ம் ஆண்டில் அதிக வளர்ச்சி வீதம் 8.59% இருந்தது. 2020-21ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் குறைந்த பட்சமாக 0.07% எனப் பதிவாகியது. இக்காலகட்டத்தில் பல மாநிலங்களில் வளர்ச்சி இறங்கு முகமாக இருந்தன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் வளர்ச்சி ஏறுமுகமாகவே இருந்தது.
பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே உண்மை வளர்ச்சி வீதம் எனப்படுகிறது. பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே இயல்பான வளர்ச்சி வீதம் ஆகும். 2024-25ம் ஆண்டு தமிழ்நாடு, 14.02 சதவீதம் இயல்பான வளர்ச்சி வீதத்தினைப் பெற்று இன்று இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் வெளியீட்டில் குஜராத், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 2024-25ம் ஆண்டுக்கான வளர்ச்சி வீதத் தரவுகள் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு முதன்முதலாக மார்ச் 2025 இரண்டாம் வாரத்தில் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் முன்கணிப்பு செய்யப்பட்ட வளர்ச்சி வீதத்துடன் ஒன்றிய அமைச்சகம் வெளியிட்ட உண்மை வளர்ச்சி வீதம் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்தப் பொருளாதார ஆய்வு 8 சதவீததிற்கு மேல் வளர்ச்சி இருக்கும் எனக் கணித்திருந்தது. சென்னைப் பொருளியியல் நிறுவனத்தின் மூத்த பொருளாதார வல்லுநர்களான சி.ரங்கராஜன், கே.ஆர்.சண்முகம் ஆகியோர் ஜூலை 2024ல் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி வீதம் 9.3 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்தனர். இறுதியில், மேற்குறிப்பிட்ட இரண்டு மதிப்பீடுகளையும் தாண்டி 9.69 சதவீதம் என அதிக வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.
சென்னைப் பொருளியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான கே.ஆர்.சண்முகம் 2021-22ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சியினைத் தமிழ்நாடு எய்தி வருவதாகத் தெரிவிக்கிறார். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த 9.7% என்ற வளர்ச்சி வீதத்தினைத் தக்கவைத்துக் கொண்டால். 2032-33ம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே முதலிடமாக தமிழ்நாடு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலின் 2021ல் பொறுப்பேற்றது முதல் அறிமுகப்படுத்தி நிறைவேற்றிவரும் திட்டங்களே காரணமாகும். அந்தத் திட்டங்கள், மகளிர்க்குக் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம், கல்லூரி செல்லும் மாணவியர்க்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், அதே போல மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 தரும் தமிழ்ப் புதல்வன் திட்டம், இல்லத் தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 தரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், ஐ.நா. அமைப்பு பாராட்டிய மக்களைத் தேடி மருத்துவத் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், ஏழை, எளியோர் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் வழங்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம், நான்முதல்வன் திட்டம்.
ஊட்டச் சத்தை உறுதி செய் திட்டம், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், முதல்வரின் முகவரித் திட்டம், 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் குவிந்த 10,14,368 கோடி முதலீடுகள் இவற்றின் வாயிலாகப் பெருகும் 32,04,895 வேலைவாய்ப்புகள் முதலிய திட்டங்களே இன்று பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம், புதிய உச்சம், எனும் வெற்றிக்கு அடித்தளங்கள் ஆகும். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பத்து லட்சம் கோடி ரூபாய் முதலீடு: ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.