சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று வினா – விடை நேரத்தின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார். சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா: புதுக்கோட்டை தொகுதி, கறம்பக்குடி ஒன்றியம், கருப்பட்டிப்பட்டி ஊராட்சி, ஆயிப்பட்டி கிராமத்தில் உள்ள கூத்தாயி அம்மன் கோயில் குடமுழுக்கு நடத்த அரசு முன்வருமா? அமைச்சர்: உறுப்பினர் கூறிய கூத்தாயி அம்மன் திருக்கோயிலுக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது மண்டல குழு, மாநில வல்லுநர் குழு ஒப்புதல் பெறப்பட்டு, வரைபடம் தயாரிக்கின்ற பணி நடைபெற்று வருகின்றது. வெகு விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் துவக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா: புதுக்கோட்டை தேவஸ்தானத் திருக்கோயில்களுக்கு அரசு மானியம் கடந்த ஆட்சியில் ஒரு கோடியாக இருந்ததை திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு மூன்று முறை உயர்த்தி ரூ.8 கோடியாக வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பட்டிப்பட்டி ஊராட்சி ஆயிப்பட்டியிலுள்ள கூத்தாகி அம்மன் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கும், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் அவர்களுக்கும் கிராம பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், புதுக்கோட்டை மாநகராட்சி, வார்டு எண் 7-ல் அடப்பன்வயல் பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு சிங்கமுத்து அய்யனார் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த அரசு முன்வருமா என்றும், புதுக்கோட்டை தேவஸ்தானத்தில் இருக்கின்ற கோயில்கள் எண்ணிக்கை எத்தனை? அந்த திருக்கோயில்களில் நித்திய பூஜைகள் நடத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை அமைச்சர் அவர்களை பேரவை தலைவர் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.
அமைச்சர் : பேரவை தலைவர் உறுப்பினர் கோரிய அருள்மிகு சிங்கமுத்து அய்யனார் திருக்கோயில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்திருக்கோயிலுக்கு 02.07.2025 அன்று குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே குடமுழுக்கு அன்றைய தினம் நடைபெறும். அவர் கூறிய புதுக்கோட்டை தேவஸ்தானத்தில் 225 திருக்கோயில்கள் இருக்கின்றன. ஆண்டு வருமானம் மிக குறைவாகும். ஆனால் இந்த திருக்கோயில்களில் 4 திருக்கோயில்களை தவிர்த்து, இதர திருக்கோயில்களுக்கு உண்டியல் வருமானம் கூட இல்லை. 225 திருக்கோயில்களில் 63 திருக்கோயில்களில் மட்டுமே உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் புதுக்கோட்டை தேவஸ்தானத் திருக்கோயில்களுக்கு ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய் மானியம் என்று இருந்ததை படிப்படியாக உயர்த்தி இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 19 கோடி ரூபாய் அளவிற்கு மானியத்தை உயர்த்தி தந்து திருக்கோயில்களின் இருள் அகல ஒளி வீச செய்தவர் முதலமைச்சர் திராவிட மாடன் நாயகன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆண்டும் கூடுதலாக மானியத்தை கேட்டிருக்கின்றோம். 573 பணியாளர்கள் இருக்கின்றார்கள். பணியாளர்களின் சம்பளம் கூட ரூ. 500 மற்றும் ரூ. 1000 என்று இருந்ததை இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 19 கோடி ரூபாய் அரசு மானியம் உயர்த்தியதால் இன்றைக்கு பத்தாயிரம் ரூபாய் வரையில் சம்பளம் பெறுகின்ற ஒரு நல்ல சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. அனைத்து திருக்கோயில்களையும் தொடர்ந்து சிறந்த முறையில் பராமரிக்க இந்த ஆண்டும் முதலமைச்சர் மானியத்தை உயர்த்தி தருவதாக கூறியிருக்கின்றார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா : புதுக்கோட்டை விட்டோவா பெருமாள் கோயிலில் திருமண மண்டபம் கட்டுவதற்கு ரூ.6.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் அவர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட திருமணஞ்சேரி ஊராட்சியில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் உடன் பரிமளேஸ்வரர் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோயிலின் சிறப்பு அம்சங்கள் திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆலயத்தில் தரிசனம் செய்தால் விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகம். நம் அண்டை மாநிலத்திலிருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் தரிசனம் செய்ய தினசரி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இக்கோயிலின் சுபமுகூர்த்த நாட்களில் மட்டும் மாதத்திற்கு 20 முதல் 25 திருமணங்கள் நடைபெறுகின்றன. மேற்கண்ட கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளதால் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதல் பெற்று நடப்பு நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்து ஒரு புதிய திருமண மண்டபத்தை கட்டி தரவும், இக்கோயிலுக்கு சொந்தமான குளத்தை சுத்தம் செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொண்டிடவும் அரசு முன்வருமா என்பதை பேரவை தலைவர் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.
அமைச்சர்: சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில் என்பது திருமண பரிகார தலமாகும்.ஒவ்வொரு முகூர்த்தத்திற்கும் குறைந்தது 10 லிருந்து 15 திருமணங்கள் நடைபெறுகின்றன. அதை கருத்தில் கொண்டு தான் அதே தொகுதியில் அமைந்துள்ள மற்றொரு திருக்கோயிலான விக்டோபா திருக்கோயிலில் ரூ.6.70 கோடி செலவில் திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. பரிமளேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலமும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மேலான அனுமதியோடு வருகின்ற மானியக் கோரிக்கையில் திருமண பரிகார தலமான அந்த திருக்கோயிலிலும் திருமண மண்டபம் கட்டப்படுவதற்கு அறிவிப்பு வெளியிடப்படும் என்பதை உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்
The post புதுக்கோட்டை கூத்தாயி அம்மன் திருக்கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.