பல்லடம், மார்ச் 27: வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை வசூலிப்பதற்கு சிறப்பு முகாம்களை ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை நடத்தி வருகிறது. ஊராட்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியம் வாயிலாகவும், வரி வருவாய் மற்றும் வரியில்லாத வருவாய் வாயிலாகவும் நிதி ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. பொது மக்கள் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்துவ தற்காக ஊரக உள்ளாட்சி துறை சார்பில் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள மின்னணு கருவி வாயிலாக வரி வசூல் செய்யப்படுகிறது. நடப்பாண்டுக்கான வரி வசூல் பணிகள் அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை சார்பில் தொடங்கப்பட்டு தீவிர வரி வசூலில் ஈடுபட்டுள்ளது. பல்லடம், பொங்கலூர் பகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு தெருவிலும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள மக்களை முகாமிற்கு வரவழைத்து வரி வசூல் சரி பார்க்கப்படுகிறது. வரி செலுத்தியோருக்கு ரசீது வழங்கப்படுகிறது. மேலும் ஒலிபெருக்கிகள் மூலம், அனைவரும் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை விரைவாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
The post ஊராட்சிகளில் வரி வசூல் தீவிரம் appeared first on Dinakaran.