திருத்தணி, மார்ச் 25: திருத்தணி அருகே கோட்டாட்சியரின் தடையை மீறி ஏரியில் கிராவல் மண் எடுத்த லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரத்தை குறைக்கும் வகையில் 144 கிமீ தூரத்துக்கு ரூ.750 கோடி மதிப்பீட்டில் 2 வழி சாலையை 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்காக, திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் பகுதியில் உள்ள நீர்ப்பாசனத் துறைக்கு சொந்தமான ஏரியிலிருந்து கிராவல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. கடந்த 2 மாதங்களாக தினமும் காலை முதல் மாலை வரை டிப்பர் லாரிகளில் கிராவல் மண் எடுக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அரசு அனுமதியை மீறி ஏரியில் கிராவல் மண் எடுக்கப்படுவதாகவும், இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக பட்டாபிராமாபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து, ஏரியில் கிராவல் மண் எடுக்க திருத்தணி கோட்டாட்சியர் தீபா தடை விதித்திருந்தார். இந்நிலையில், நேற்று மீண்டும் ஏரியில் இருந்து கிராவல் மண் எடுத்து டிப்பர் லாரிகளில் செல்ல முயன்ற போது கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வட்டாட்சியர் மலர்விழி கோட்டாட்சியர் தடையை மீறி டிப்பர் லாரிகளில் நிரப்பிய கிராவல் மண் மீண்டும் ஏரியில் கொட்ட உத்தரவிட்டார். விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதாக வந்த புகாரின் பேரில், ஏரியில் எடுக்கப்பட்ட கிராவல் மண் அளவு கணக்கீடு செய்து தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் மலர்விழி தெரிவித்தார். கோட்டாட்சியரின் உத்தரவை மீறி ஏரியில் கிராவல் மண் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post திருத்தணி அருகே தடையை மீறி அளவுக்கதிகமாக கிராவல் மண் அள்ளிய 4 லாரிகள் சிறை பிடிப்பு: மக்கள் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.