ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துவிட்டு திரும்பியபோது மெட்ரோ ரயில் தூணில் பைக் மோதி கல்லூரி மாணவர் 2 பேர் பரிதாப பலி : ஆலந்தூரில் நள்ளிரவு விபத்து

பூந்தமல்லி, மார்ச் 25: சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது, மெட்ரோ ரயில் தூணில் பைக் மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் கெல்வின் கென்னி ஜெயன் (21). இவர் அங்குள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் சித்தார்த் (20). இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர்கள் இருவரும் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தங்களது பைக்கை நிறுத்திவிட்டு, அங்கிருந்து ரயிலில் சேப்பாக்கம் மைதானத்துக்கு சென்றுள்ளனர்.

கிரிக்கெட் போட்டி முடிந்ததும் நள்ளிரவில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயிலில் ஆலந்தூர் ரயில் நிலையத்துக்கு வந்து இறங்கியுள்ளனர். பின்னர், அங்கிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு சாப்பிடுவதற்காக மீனம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு, மீண்டும் பைக்கில் ராமாபுரம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது, ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை ஆசர்கானா வளைவில் பைக்கை வேகமாக திருப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பைக் மெட்ரோ ரயில் தூண் மீது வேகமாக மோதியதில் பைக் நொறுங்கியதுடன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்தவெள்ளத்தில் சாலையில் துடித்துள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த கெல்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். சித்தார்த் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதை பார்த்த வாகன ஓட்டிகள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்னர். அதன்பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சித்தார்த்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அதற்குள் சித்தார்த்தும் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நேரில் சென்று 2 பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுபற்றி வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துவிட்டு திரும்பியபோது மெட்ரோ ரயில் தூணில் பைக் மோதி கல்லூரி மாணவர் 2 பேர் பரிதாப பலி : ஆலந்தூரில் நள்ளிரவு விபத்து appeared first on Dinakaran.

Related Stories: