வேலூர், மார்ச் 25: வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்க உள்ளது. இப்பயிற்சியானது கணினி பொறியியல் நிபுணத்துவம், புதுமைத் திறன்களை வழங்குதலுடன், மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறை, தானியங்கி தொழில்துறை, இயந்திரவியல், சேர்க்கை உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத் திறன்களை உள்ளடக்கிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தாட்கோ மூலம் கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற 28 இளைஞர்கள் தனியார் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் இப்பயிற்சியினை பெற 2022, 2023 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்று 21 முதல் 25 வயது வரையுள்ளவர்களாகவும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பயிற்சியினை பெற தகுதியுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சிக்கான கால அளவு 18 வாரம் ஆகும். இப்பயிற்சியானது கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று மாதம் குறைந்தபட்சமாக ரூ.20 ஆயிரம் ஊதியமாக பெறலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ ஏற்கும். இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com பதிவேற்றம் செய்து வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பி.இ., பட்டதாரிகளுக்கு 18 வார புத்தாக்க பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படுகிறது எஸ்சி, எஸ்டி, பிரிவை சேர்ந்த appeared first on Dinakaran.