ஆர்டிஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காத பொது தகவல் அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: மாநில தகவல் ஆணையர் உத்தரவு

தேனி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு உரிய பதில் அளிக்காத பொது தகவல் அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டது. தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், சமூக ஆர்வலர். இவர், போடி அருகே, மேலசொக்கநாதபுரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக வளாகத்திற்குள் உள்ள ஒரு வழிபாட்டுத்தலம், எந்த நிதியில் இருந்து கட்டப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கடந்த 2021, ஜன.2ம் தேதி கிராம நிர்வாக அலுவல பொது தகவல் அலுவலருக்கு மனு அளித்தார். இம்மனுவிற்கு அப்போதைய பொது தகவல் அலுவலர் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ராமகிருஷ்ணன் இதுகுறித்து மாநில தலைமை தகவல் ஆணையத்திற்கு மேல்முறையீடு செய்தார்.

அந்த மனு மீது மாநில தகவல் ஆணையர் தாமரைக்கண்ணன் விசாரணை நடத்தினார். இதில், விஏஓ அலுவலக வளாகத்திற்குள் வழிபாட்டுத்தலம் இருப்பின் அது யாரால் கட்டப்பட்டது என்ற விவரங்கள் பொது அதிகார அமைப்பிற்கு தெரிந்திருக்க வேண்டும். ஆகவே, போடி வட்டாட்சியர் இதுகுறித்து உரிய ஆவணங்களை பரிசீலித்து, அது பற்றிய உரிய பதிலை முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும். உரிய காலத்திற்குள் மனுதாரர் கோரிய தகவல்களை வழங்க மறுத்துள்ள பொது தகவல் அலுவலர் யார் என போடி வட்டாட்சியர் விசாரித்து, அவருக்கு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும். மேலும், காலதாமதம் செய்து மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக மனுதாரர் ராமகிருஷ்ணனுக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடாக பொது தகவல் அலுவலர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

The post ஆர்டிஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காத பொது தகவல் அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: மாநில தகவல் ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: