ஊழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு; மத்திய பிரதேச, ஒடிசா பாஜக அரசுகள் தூங்குகிறது: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நூதன போராட்டம்


போபால்: ஒடிசா, மத்திய பிரதேச பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப் பேரவைகளுக்கு முன்னால் புதுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்தியப் பிரதேச சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கார் தலைமையிலான காங்கிரஸ் எம்எல்ஏக்கள், சட்டமன்றக் கட்டிடத்தின் முன் நடத்திய போராட்டத்தின் போது, காங்கிரஸ் ​​எம்எல்ஏ தினேஷ் ஜெயினுக்கு கும்பகர்ணனைப் போல உடையணிந்து தூங்கவிட்டனர். மற்ற எம்எல்ஏக்கள் கும்பகர்ணன் வேடமணிந்து இருந்த எம்எல்ஏவை எழுப்ப முயன்றனர். இந்த நூதன போராட்டம் மக்களிடையே கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் உமாங் சிங்கார் கூறுகையில், ‘மத்திய பிரதேச பாஜக அரசில் நர்சிங், போக்குவரத்தில் ஊழல்கள் அம்பலமாகி உள்ளது. ஒன்றன் பின் ஒன்றாக ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வருகிறது.

அதுகுறித்து விசாரணை நடத்தாமல் ஆளும் பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் அதிகரித்துள்ளன. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கும்பகர்ண தூக்க போராட்டம் நடத்தப்பட்டது’ என்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, எதிர்க்கட்சியினர் அதே இடத்தில் பிளாஸ்டிக் பாம்புகளுடன் போராட்டம் நடத்தினர். அரசுப் பணியில் காலியிடங்களை நிரப்பாததால் நூதன போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஒடிசாவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக விசில் ஊதும் போராட்டத்தை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நடத்தினர். சட்டமன்றத்திற்குள் நடந்த போராட்டம் எந்த பலனையும் தராததால், சட்டமன்றத்திற்கு முன்னால் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

The post ஊழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு; மத்திய பிரதேச, ஒடிசா பாஜக அரசுகள் தூங்குகிறது: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நூதன போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: