செயல்படுத்துவதை விட விளம்பரத்திற்கு பாஜ முக்கியத்துவம் மேக் இன் இந்தியா நல்ல உதாரணம்: காங்கிரஸ் தாக்கு

புதுடெல்லி: “மோடி அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்துவதை விட விளம்பரத்துக்கே முக்கியத்துவம் தரும் என்பதற்கு மேக் இன் இந்தியா நல்ல உதாரணம்” என காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மோடி அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்துவதை விட விளம்பரத்துக்கே முக்கியத்துவம் தரும் என்பதற்கு மேக் இன் இந்தியா நல்ல உதாரணம். கடந்த 2014ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற 10 வாக்குறுதிகளை பாஜ அரசு கொடுத்தது. அதில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. உற்பத்தி துறைகளில் வேலை வாய்ப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தியின் பங்கு பெருமளவு சரிந்திருப்பது நிலைமை மோசமாகி விட்டதை காட்டுகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. இந்திய தொழில்முனைவோர்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு பதிலாக வௌிநாடுகளுக்கு சென்று அங்கு நிறுவனங்களை அமைக்கின்றனர். ஏற்றுமதி துறை தடையற்ற வீழ்ச்சியை அடைந்துள்ளது. அடையாளம் காணப்பட்ட 14 துறைகளில் 12 துறைகள் வளர்ச்சிஅடையவில்லை. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் பொருள்களின் பங்கு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோடி அரசாங்கத்தின்கீழ் ஏன் மிகவும் குறைந்துள்ளது? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மொத்த ஏற்றுமதியில் பொருள்களின் பங்கு பெரிதும் துரிதப்படுத்தப்பட்டது என்பது உண்மை. ஒருவேளை உண்மையான தற்சார்பு இந்தியா என்பது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது என்பதை பிரதமர் மோடி இப்போது உணர்ந்திருக்கலாம். இவ்வாறு கூறி உள்ளார்.

The post செயல்படுத்துவதை விட விளம்பரத்திற்கு பாஜ முக்கியத்துவம் மேக் இன் இந்தியா நல்ல உதாரணம்: காங்கிரஸ் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: