5 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிராவில் வெடித்த சர்ச்சை; மறைந்த பாலிவுட் நடிகரின் பெண் மேலாளர் மரணத்தில் ஆதித்ய தாக்கரேவுக்கு தொடர்பு?.. திஷா சாலியனின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு


புதுடெல்லி: பாலிவுட் நடிகரின் பெண் மேலாளர் மரணத்தில் ஆதித்ய தாக்கரேவுக்கு தொடர்பு இருப்பதாக திஷா சாலியனின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளதால் மகாராஷ்டிராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளராக திஷா சாலியன் (28) என்பவர் இருந்து வந்தார். அவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பின் 13 மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அடுத்த ஆறு நாட்கள் கழித்து ஜூன் 14ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், அவரது மும்பை குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்கண்ட இரு மர்ம மரணங்கள் குறித்தும் பாலிவுட் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 2022 டிசம்பரில் அப்போதைய மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், திஷா சாலியனின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் திஷா சாலியன் மரணமடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது தந்தை சதீஷ் சாலியன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘எனது மகள் திஷா அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் 13வது மாடியில் இருந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன; ஆனால் அவரது உடலில் காயங்கள் இல்லை என்கின்றனர். கட்டிடத்தின் அடிப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 25 அடி தூரத்தில் திஷாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் தள்ளப்பட்டாரா, அல்லது வேறு ஏதாவது நடந்ததா? திஷாலின் பிரேத பரிசோதனை 50 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக நடந்தது ஏன்? கடந்த 2020 ஜூன் 8ம் தேதி இரவு முதல் மறுநாள் வரை அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மாயமாகி உள்ளன.

அந்தக் காட்சிகள் ஏன் மறைக்கப்பட்டன? அதற்கு யார் பொறுப்பு? திஷா இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு யாருடனோ பேசியுள்ளார். அதுகுறித்த விபரங்கள் வெளியாகவில்லை. பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்யவில்லை. வேண்டுமென்றே பதிவு செய்யப்படவில்லையா? சம்பவம் நடந்த இரவு எனது மகளுடன் யாரேனும் இருந்தனரா? அப்படியாகில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதா? அப்போதைய மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங், திஷாவின் மரண வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த போது, 55 நாட்களுக்குள் தற்கொலை என்று அறிவித்தார். ஆனால் எனது மகள் திஷா தற்கொலை செய்து கொள்ளவில்லை; அவர் கொல்லப்பட்டார். சுஷாந்த் சிங் ராஜ்புத் – திஷா சாலியன் ஆகிய இருவரின் மரணத்தில் சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு தொடர்பு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்’ என்றார்.

அவுரங்கசீப் சர்ச்சையால் ஏற்பட்ட கலவரத்தை திசை திருப்ப முயற்சி
திஷா சாலியனின் மரண வழக்கில் ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், இதுகுறித்து சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி அளித்த பேட்டியில், ‘திஷா சாலியனின் தந்தை, தனது மகள் தொடர்பான மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஆதித்யா தாக்கரே மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரியும் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தாக்கல் செய்த மனுவில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.

மகாராஷ்டிராவில் தற்போது அவுரங்கசீப் தொடர்பான சர்ச்சை மற்றும் அதனால் ஏற்பட்ட கலவரங்களை திசை திருப்பும் முயற்சியாக ஐந்தாண்டுகளுக்கு பின் இப்பிரச்னையை எழுப்பி உள்ளனர். மனுதாரரான அவரது தந்தையின் பின்னால் ஏதோ ஒரு சக்தி செயல்படுகிறது. இதற்குப் பின்னால் இருப்பவர்களின் பெயர்களைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. உத்தவ் தாக்கரே குடும்பத்தை அவதூறு செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் நடக்கிறது. உத்தவ் தாக்கரேவின் எதிர்காலம் மற்றும் அவரது வாழ்க்கையின் மீது சேற்றை வீசுவது மகாராஷ்டிராவின் கலாசாரம் அல்ல. எங்களைப் போன்ற பல தலைவர்கள் மீது இதுபோன்ற சோதனைகள் செய்யப்பட்டன. அவர்களின் (ஆளுங்கட்சி) செயலால் எதுவும் நடக்கவில்லை’ என்றார்.

The post 5 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிராவில் வெடித்த சர்ச்சை; மறைந்த பாலிவுட் நடிகரின் பெண் மேலாளர் மரணத்தில் ஆதித்ய தாக்கரேவுக்கு தொடர்பு?.. திஷா சாலியனின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: