பாடல், நடனம், வசனங்களில் ஆபாசம்; சினிமாவில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளை காண்பித்தால் நடவடிக்கை: தெலங்கானா மகளிர் ஆணையம் அதிரடி

ஐதராபாத்: சினிமாவில் பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச பாடல், நடனம், வசனங்கள் வெளியிடப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெலங்கானா மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ெதலுங்கு திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் பாடல்கள், நடனங்கள் மற்றும் வசனங்கள் இருப்பதாக சமீபத்தில் எழுந்த புகாரையடுத்து, தெலங்கானா மகளிர் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சமீபத்தில் வெளியான பல திரைப்படப் பாடல்களில் நடன அசைவுகள் ெபரும்பாலும் பெண்களை இழிவுபடுத்துவதாகவும், அநாகரீகமாகவும் இருப்பதை மாநில மகளிர் ஆணையம் தீவிரமாகக் கவனித்துள்ளது. திரைப்படங்களில் வருகின்ற வசனங்கள், பாடல்கள், நடனங்கள் அல்லது பிற விஷயங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன. இதுபோன்ற காட்சிகள் வெளியிடப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பந்தப்பட்ட திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடன இயக்குநர்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சமூகத்திற்கு நேர்மறையான செய்தியை தெரிவிப்பதும், பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதும் திரைப்படங்களின் தார்மீகப் பொறுப்பாகும். திரைப்படங்களைக் காண்பிப்பதால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மீது ஏற்படும் தாக்கத்தை மனதில் கொண்டு, திரைப்படத் துறை சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். இந்தப் பிரச்னையில் மக்களும், சமூக அமைப்புகளும் தங்கள் கருத்துக்களை மாநில மகளிர் ஆணையத்திடம் தெரிவிக்கலாம். இந்த விஷயத்தை மகளிர் ஆணையம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்கும்’ என்று மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அஸ்தினாபுரம் மாநகராட்சி உறுப்பினருக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை தெரிவித்ததற்காக எல்.பி.நகர் எம்.எல்.ஏ சுதீர் ரெட்டிக்கு எதிராக மாநில மகளிர் ஆணையம் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ்கள் குறித்து எம்எல்ஏ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், இந்த மாதம் 27ம் தேதிக்குப் பிறகு மகளிர் ஆணையத்திற்கு நேரில் ஆஜராகி விளக்கம் தருவதாக எம்எல்ஏ சுதீர் ரெட்டி தனது விளக்கத்தில் கூறியதாக மகளிர் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

The post பாடல், நடனம், வசனங்களில் ஆபாசம்; சினிமாவில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளை காண்பித்தால் நடவடிக்கை: தெலங்கானா மகளிர் ஆணையம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: