பெங்களூரு: அழகிகள் வலையில் 49 எம்எல்ஏக்கள், அமைச்சர்களை சிக்க வைக்கும் முயற்சி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டால், இன்று கர்நாடகா பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. மேலும் சபாநாயகரை நோக்கி எதிர்கட்சி எம்எல்ஏக்கள் காகிதங்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்த போது ஒன்றிய முன்னாள் அமைச்சரும், விஜயபுரா எம்எல்ஏவுமான பசனகவுடா பாட்டீல் யத்னால், முன்னாள் அமைச்சர் சுனில்குமார் உள்ளிட்டோர் பேசும்போது, ‘அழகிகளை அனுப்பி அமைச்சர் ராஜண்ணாவை மயக்க முயற்சி நடந்துள்ளது’ என தெரிவித்தனர். தொடர்ந்து அமைச்சர் ராஜண்ணா கூறுகையில், ‘என் பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளதால் இது தொடர்பாக விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அழகிகளின் வலையில் சிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றது உண்மை தான்.
அதே நேரம் இதை பற்றி நான் கவலைப்படவில்லை. 49 எம்எல்ஏக்களின் இதுபோன்ற ஆபாச வீடியோ சிடிக்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என பலருக்கும் அழகிகள் மூலம் வலை விரிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களும் சிக்கியுள்ளனர். இதுகுறித்து உள்துறை அமைச்சரிடம் புகார் அளிக்கப்படும். இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்’ என்றார். இவ்விவகாரம் கர்நாடக அரசியலில் பூதாகரமாக வெடித்த நிலையில், இன்று சட்டசபை கூடும் முன்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முதல்வருமான சித்தராமையா வெளியிட்ட பதிவில், ‘மாநில அமைச்சர் கே.என்.ராஜண்ணா, தனக்கு அழகிகள் மூலம் வலை விரிக்கப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உள்துறை அமைச்சர் ஏற்கனவே பதிலளித்துள்ளார். ராஜண்ணா உரிய புகார் அளித்தால் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று பரமேஸ்வரா உறுதியளித்த பிறகும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வேண்டுமென்றே மீண்டும் அதே பிரச்னையை அவையில் எழுப்புவது சரியாக இருக்காது.
இதுபோன்ற ஒரு வழக்கில் யாரேனும் சிக்கினால் அவர்களைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பல்ல. சட்டத்தின்படி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ராஜண்ணா யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அவர் அவ்வாறு யாருடைய பெயரையாவது குறிப்பிட்டிருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாம். இப்பிரச்னையில் யாரையும் பாதுகாக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்தப் பிரச்னையை எழுப்பி பாஜக எம்எல்ஏக்கள் அவையின் பொன்னான நேரத்தை வீணடிப்பது வேதனையளிக்கிறது. மாநிலத்தின் கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்கள், துயரங்கள் மற்றும் குறைகளைப் பற்றி விவாதித்து மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பது நமது கடமை. இதற்காக, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதை நிறுத்திவிட்டு அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்’ என்று கூறினார்.
இந்நிலையில் இன்று அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், முதல்வர் சித்தராமையா, சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு, அழகிகள் வலையில் சிக்கிய 49 எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பான பேப்பர்களை வீசி எறிந்து பாஜக எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர். மேலும் இவ்விகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். அதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் சில நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன. அதன்பின் அவை நடவடிக்கைகள் தொடங்கின. பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் பெயர்கள் உள்ளதால் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
The post பேரவையில் சபாநாயகர் நோக்கி காகிதங்கள் வீச்சு; 49 எம்எல்ஏக்கள் அழகிகளின் வலையில் சிக்கினார்களா?.. பாஜக எம்எல்ஏக்களை கண்டித்த கர்நாடகா முதல்வர் appeared first on Dinakaran.