இந்நிலையில், 18வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை கோலாகலமாக தொடங்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பிரமாண்ட துவக்க விழாவுடன் தொடங்க உள்ளது. இதில், பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி, இந்திய ரேப்பர் மற்றும் பின்னணி பாடகரான கரண் அவுஜ்லாஆகியோரின் இசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இந்த விழாவில் ஐசிசி தலைவர் ஜெய்ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ளனர். பிரமாண்டமாக நடந்த 17வது சீசன் ஐபிஎல் தொடர் தொடக்க விழாவில் டைகர் ஷெராப், ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக நடப்பு ஆண்டு போட்டி நடைபெறும் கொல்கத்தா, ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், அகமதாபாத், கவுகாத்தி, மும்பை, லக்னோ, பெங்களூரு, சண்டிகர், ஜெய்ப்பூர், டெல்லி, தர்மசாலா ஆகிய 13 இடங்களில் தொடக்க விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த துவக்க விழாக்களில் பாலிவுட் பிரபலங்களான நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான், வருண் தவான், நடிகை ஸ்ரத்தா கபூர், பாடகர் அரிஜித் சிங் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 13 இடங்களில் தொடக்க விழா நடத்தப்படுவது இது முதல்முறையாக இருந்தாலும், 2017ம் ஆண்டு நடந்த 10வது சீசன் தொடரின்போது 8 அணிகள் பங்கேற்ற நிலையில், அந்த 8 மைதானங்களிலும் தொடக்க விழா நடத்தப்பட்டது.
* புதிய சீசன்… புதிய விதிகள்…
ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் மும்பையில் நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் கேப்டன்கள் ஒப்புதலுடன் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகள் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தே அமலுக்கு வருகிறது. அதன் விவரம்:
* கிரிக்கெட் பந்தை ஸ்விங் செய்ய எச்சில் தடவுவது ஒரு வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கிரிக்கெட் பந்து மீது எச்சில் தடவுவதற்கு கடந்த 2020ம் ஆண்டு ஐசிசி தடை விதித்தது. 2022ம் ஆண்டி இந்த தடையை ஐசிசி நிர்ந்தரமாக்கியது. இந்த தடையை ஐபிஎல் தொடரில் நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்கவும், ஸ்விங் செய்யவும் பவுலர்கள் எச்சில் பயன்படுத்தலாம் என பிசிசிஐ அனுமதி அளித்து உள்ளது.
* ஒரு போட்டியில் 3 புதிய பந்துகளை பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்து உள்ளது. இரவில் நடக்கும் போட்டியில் பனியின் தாக்கம் காரணமாக பவுலர்கள் பந்தை கிரிப் செய்ய முடியாததால் அது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைகிறது. இதனால் ரன்கள் அதிகமாக செல்கிறது. இதை தவிர்க்கும் வகையில் 2வது இன்னிங்சில் 2 புதிய பந்துகளை பயன்படுத்த விதி கொண்டு வரப்படுகிறது. 2வது இன்னிங்ஸில் 10 ஓவர்கள் முடிந்ததும் 2வது புதிய பந்து பயன்பாட்டுக்கு தயாராக இருக்கும். அந்தப் பந்தை கொடுக்குமாறு பவுலிங் செய்யும் அணியின் கேப்டன் நடுவரிடம் அனுமதி கோரலாம். அப்போது பனியின் தாக்கம், ஈரப்பத்தை நடுவர் சோதித்த பின்பே 11வது ஓவருக்கு பிறகு 2வது புதிய பந்தை பௌலிங் செய்யும் அணிக்கு நடுவர் வழங்குவார். இந்த நடைமுறை பிற்பகல் தொடங்கும் போட்டிகளுக்கு பொருந்தாது.
* ஐ.பி.எல். போட்டியில் கடந்த 2023-ம் ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதிமுறை (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்) அமல்படுத்தப்பட்டது. பந்துவீச்சு அல்லது பேட்டிங்குக்கு யாராவது ஒரு வீரரை ஆட்டத்தின் ஒரு பகுதியில் மாற்றிக் கொள்ளலாம். இந்த விதியால் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் போக்கு எப்படி வேண்டுமானாலும் மாறுவதால் இதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இந்த விதிகள் 2027 வரை நீடிக்கும் என்று பிசிசிஐ அறிவித்து உள்ளது.
* பேட்ஸ்மேன்களின் தலைக்கு பவுலர்கள் பவுன்சர் வீசினால் ஒயிட் கொடுக்கப்படும். சில நேரம், பந்து தலையில் உயரத்திற்கு செல்லும்போது கூட நடுவர்கள் ஒயிட் வழங்குவது உண்டு. இந்த சர்ச்சையை போக்க, பவுன்ஸ் ஒயிடிற்கும் டிஆர்எஸ் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல், அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் மற்றும் நோ பாலுக்கு டிஆஎஸ் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* ஐபிஎல் போட்டிகளில் பவுலர்கள் மெதுவாக பந்துவீசுவதால் கேப்டன்களுக்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். இந்த விதிமுறையை பிசிசிஐ தற்போது நீக்கி உள்ளது. மெதுவாக பந்து வீசினால் புள்ளிப்பட்டியலில் புள்ளிகள் குறைக்கப்படும்.
* ராஜஸ்தான் அணியில் 13 வயது சிறுவன்
இந்த ஐபிஎல் தொடரில் தோனி, கோஹ்லி, ரோகித் சர்மா மற்றுல் உலக தரம் வாய்ந்த வீரர்கள் பங்கேற்றாலும் சில இளம் ரத்தங்கள் மீது அனைவரது பார்வையும் உள்ளது. ‘இளம் கன்று பயம் அறியாது’ என்பார்கள். அந்த வகையில் உலனின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் தொடரில் இளம் கன்றாக களமிறங்க உள்ள வைபவ் சூர்யவன்ஷி மீது அனைவரது கவனமும் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு இந்த வீரரை ஏலம் எடுத்து உள்ளது. பீகாரை சேர்ந்த இவர் ரஞ்சி கோப்பை மற்றும் இந்திய ஜூனியர் அணிகளில் கலக்கி உள்ளார். இளையோர் டெஸ்டின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 58 பந்துகளில் சதம் விளாசினார். ஐபிஎல்லில் குறைந்த வயதில் விளையாட போகும் வீரர் இவர்தான். இதற்கு முன்பு 16 வயதுக்கு கீழ் எந்த வீரரும் ஆடியதில்லை.
* கேப்டன்களாக இந்திய இளம்வீரர்கள் பஞ்சாப்புக்கு 17வது தலைவன்
இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். அனுபவம் மிக்க வீரர்கள் கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளனர். இதனால் இந்தியாவை சேர்ந்த இளம்வீரர்களுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர மற்ற 9 அணிகளின் கேப்டன்களாக இந்திய இளம்வீரரக்ள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடர் அதிக கேப்டன்களை மாற்றிய பெருமை பஞ்சாப் அணிக்கு சென்று உள்ளது. பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்த அணியின் 17வது கேப்டன் ஆவார்.
அணி கேப்டன்
சென்னை சூப்பர் கிங்ஸ் ருதுராஜ் கெய்க்வாட்
டெல்லி கேபிடல்ஸ் அக்சர் பட்டேல்
குஜராத் டைட்டன்ஸ் சுப்மன் கில்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அஜின்கியா ரகானே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரிஷப் பண்ட்
மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியா
பஞ்சாப் கிங்ஸ் ஸ்ரேயாஸ் ஐயர்
ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரஜத் படிதார்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட் கம்மின்ஸ்
* ரூ.21 கோடி பரிசு
ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.21 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2ம் இடத்துக்கு ரூ.14 கோடியும், 3ம் இடத்துக்கு ரூ.7 கோடியும், 4ம் இடத்துக்கு ரூ.6.50 கோடியும் வழங்கப்பட உள்ளது. ஐபிஎல் தொடரின் மொத்த பரிசு தொகை ரூ.49 கோடியாகும்.
* ஆர்.ஆர் புதிய கேப்டன் பராக்…பராக்…பராக்… ‘இம்பாக்ட்’ வீரராக சாம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனுக்கு விரல் காயம் ஏற்பட்டது. அந்த காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது. இதனால் சஞ்சு சாம்சன் முதல் 3 போட்டிகளில் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டும் விளையாடுவார் என்று அணி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. முதல் 3 போட்டிகளில் விக்கெட் கீப்பராக துருவ் ஜூரல் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரியான் பராக் 2019ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். முதல் முறையாக ஐபிஎல் தொடரில் கேப்டனாக களம் காண உள்ளார். 2024 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன் (573) குவித்த வீரராக பராக் உள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணியின் கேப்டனாக ரியான் விளையாடி உள்ளார். அசாம் விளையாடிய 17 ஆட்டங்களில் 10ல் வென்றுள்ளது.
இதுவரை ஐபிஎல் கோப்பை வென்ற அணிகள்
ஆண்டு அணி
2008 ராஜஸ்தான் ராயல்ஸ்
2009 டெக்கான் சார்ஜர்ஸ்
2010 சென்னை சூப்பர் கிங்ஸ்
2011 சென்னை சூப்பர் கிங்ஸ்
2012 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2013 மும்பை இந்தியன்ஸ்
2014 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2015 மும்பை இந்தியன்ஸ்
2016 சன்ரைசர்ஸ் ஐதராபாத்
2017 மும்பை இந்தியன்ஸ்
2018 சென்னை சூப்பர் கிங்ஸ்
2019 மும்பை இந்தியன்ஸ்
2020 மும்பை இந்தியன்ஸ்
2021 சென்னை சூப்பர் கிங்ஸ்
2022 குஜராத் டைட்டன்ஸ்
2023 சென்னை சூப்பர் கிங்ஸ்
2024 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
The post கிரிக்கெட் ரசிகர்களுக்கு கோடை மழை ஐபிஎல் திருவிழா நாளை தொடக்கம்: முதல்முறையாக 13 இடங்களில் துவக்க விழா; பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.