ராஜஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி: வேட்டையாடி விளையாடி வீரநடை போடுமா சன்ரைசர்ஸ்? அதிரடிக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

ஐதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. கடந்த சீசனில் பல அதிரடிகளை நிகழ்த்திய ஐதராபாத் அணி இம்முறையும் தனது சாகசங்களை தொடரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளூர் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஐதராபாத்தில் இன்று களமிறங்கும் இரு அணிகளும் தலா ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் பெரும்பாலும் சன்ரைசர்ஸ் அணிதான் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

அதை இன்றைய ஆட்டத்தில் தொடர பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் வீரர்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாஸன், முகமது ஷமி, இஷான் கிஷண், ஆடம் ஜம்பா, ஹர்ஷல் படேல், நிதிஷ்குமார் ரெட்டி என பழைய, புதிய முகங்கள் அதிரடி காட்ட காத்திருக்கின்றனர். அதேபோல் ரியான் பராக் தலைமையில் களம் காண உள்ள ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் (3வது போட்டிக்கு பின்னர் கேப்டன்), ஷிம்ரன் ஹெட்மயர், துருவ் ஜூரல், மகிஷ் தீக்‌ஷனா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, வனிந்து ஹசரங்கா என அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை.

எனினும் 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி லீக் சுற்றின் முடிவில் 2வது இடம் பிடித்தது. மேலும் பைனலுக்கு முன்னேறி 2வது இடம் பிடித்தது. ராஜஸ்தான் லீக் சுற்றில் 3வது இடம் பிடித்தாலும், பிளே ஆப் சுற்று முடிவில் 5வது இடம்தான் கிடைத்தது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயத்தில் இருந்து முழுமையாக மீளாதது பின்னடைவாக இருக்கலாம். எனவே வலுவான அணியாக இருப்பதோடு அல்லாமல், வரலாறும் சன்ரைசர்ஸ் அணிக்கு சாதகமாக இருப்பதால், அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றியை தொடரும் வாய்ப்பு அதிகம்.

The post ராஜஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி: வேட்டையாடி விளையாடி வீரநடை போடுமா சன்ரைசர்ஸ்? அதிரடிக்கு காத்திருக்கும் ரசிகர்கள் appeared first on Dinakaran.

Related Stories: