18 ஆண்டுகளாக இத் தொடர் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் ரசிகர்களின் பேராதரவுடன் சிறப்பாக விளையாடப்பட்டு வருகிறது. நடப்பு தொடரில், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப், மும்பை, ஐதராபாத், குஜராத், டெல்லி, லக்னோ என 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறையும், சில அணிகளுடன் ஒரு முறையும் விளையாடும் வகையில் போட்டிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடர்களில் அதிகபட்சமாக, சென்னை, மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றி உள்ளன. ஐபிஎல் நடப்புத் தொடரின் முதல் போட்டி, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று, நடப்பு சாம்பியன் கொல்கத்தா, பெங்களூரு அணிகள் இடையே நடைபெற்றது. இதையொட்டி இரு அணிகளின் வீரர்களும், தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் ஐபிஎல் துவக்க விழா நிகழ்ச்சிகள், கொல்கத்தாவில் நேற்று விமரிசையாக நடந்தன. துவக்க விழா நிகழ்ச்சியின்போது, நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான ஷாருக்கான் பேசினார். அதைத் தொடர்ந்து, பாலிவுட் பாடகி ஷ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பிரபல நடிகை திஷா படானி, துள்ளலான நடன நிகழ்ச்சியால் ரசிகர்களை பரவசப்படுத்தினார். மீண்டும் ஷ்ரேயா கோஷலின் ரீங்காரமிடும் குரலில் அசத்தலான பாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த, பிரபல பாடகர் கரண் ஆஜ்லா ராப் பாடலை பாடி உற்சாகப்படுத்தினார்.
ஐபிஎல் தொடரில் விராட் கோஹ்லியின் மறக்க முடியாத பயணத்தை நினைவுகூரும் வகையில், அவருக்கு மேடையில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அப்போது, மேடையின் முன் திரண்டிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அவரது பெயரை குறிப்பிட்டு வாழ்த்துக் கோஷம் எழுப்பினர். ஐபிஎல் 18வது போட்டித் தொடர் துவங்குவதை கொண்டாடும் வகையில் சிறப்பாக தயாரிக்கப்பட்ட கேக் வெட்டி அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு துவக்க விழா நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. பின்னர், கொல்கத்தா – பெங்களூரு அணிகள் இடையிலான முதல் போட்டி துவங்கியது.
The post கொல்கத்தாவில் பிரமாண்ட விழா ஐபிஎல் திருவிழா கோலாகல துவக்கம்: ஷ்ரேயா பாடல், திஷா நடனத்தால் ரசிகர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.